பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்

237

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரும் டெஸ்ட் அணியின் உபதலைவருமான பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குமான குழாமிலிருந்து வெளியேறுகிறார்.  

பட்லர் – வோக்ஸ் இணைப்பாட்டத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது கொரோனா வைரஸ் சவாலுக்கு மத்தியில் இங்கிலாந்துக்கு இருதரப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் நேற்று (08) நிறைவுக்குவந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிநேரத்தில் 3 விக்கெட்டுகளினால் த்ரில் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் இரண்டாவது இன்னிங்ஸில் மாத்திரம் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இந்நிலையில் தனிப்பட்ட குடும்ப காரணத்திற்காக இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்து பயணிக்கவுள்ளதன் அடிப்படையில் பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுகிறார். குறித்த செய்தியை இங்கிலாந்து கிரிக்கெட் சபை சற்றுமுன்னர் (09) உறுதிப்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் உள்ளூர் போட்டியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு

பென் ஸ்டோக்ஸின் தந்தை சுகயீனம் காரணமாக நியூஸிலாந்து க்ரைசேர்ச்சில் அமைந்துள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது குணமடைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாகவே பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸின் விலகலை தொடர்ந்து அவரின் இடத்தை நிரப்புவதற்காக எதிர்வருகின்ற இரண்டாவது, மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் ஷக் க்ரௌலி மற்றும் சாம் கரன் ஆகியோர் அணிக்குள் கொண்டுவரப்படவுள்ளனர். சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (13) சவுதம்டணில் நடைபெறவுள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<