கொவிட் 19 தொற்றினால் ரினௌன் – டிபெண்டர்ஸ் போட்டி ஒத்திவைப்பு  

Super League - Pre-Season 2021

148

ரினௌன் விளையாட்டுக் கழகத்தில் கொவிட் – 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, நேற்று (18) இடம்பெறவிருந்த டிபெண்டர்ஸ் கால்பந்து கழகத்திற்கு எதிரான சுபர் லீக் கால்பந்து தொடரின் முன் பருவப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.   

முன் பருவப் போட்டித் தொடரில் குழு B யில் அங்கம் வகிக்கும் இவ்விரு அணிகளும், நேற்று மாலை 5 மணிக்கு சுகததாச அரங்கில் இடம்பெறவிருந்த நேற்றைய முதல் ஆட்டத்தில் மோதவிருந்தன.

>>புளூ ஈகல்ஸை இலகுவாக வென்றது கொழும்பு அணி

எனினும், போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட முன்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் பெறுபேறுகளுக்கு அமைய, அவ்வணியின் பயிற்றுவிப்பாளரும், வீரர் ஒருவரும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக, குறித்த இருவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணிய வீரர்கள் மற்றும் கழக அதிகாரிகள் அனைவரும் உடனடியாக 6 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று நுகேகொடை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் விளையாட்டு மருத்துவ நிறுவனம் என்பவற்றால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே, நேற்றைய குறித்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள இலங்கை கால்பந்து சம்மேளனம், அவ்வணியின் நிலைமைகள் கண்காணிக்கப்பட்டு பிரிதொரு தினத்தில் இந்த போட்டி நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

>>தேசிய பயிற்சிக் குழாத்தில் இருந்து பாசித் வெளியே ; ரொஷான் இணைப்பு

எனினும், நேற்றைய இரண்டாம் ஆட்டமாக இடம்பெறவிருந்த கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் புளூ ஈகல்ஸ் கால்பந்து கழகம் என்பவற்றுக்கு இடையிலான மோதல் எந்த மாற்றமும் இன்றி நடைபெற்றது.

சுபர் லீக் முன்பருவப் போட்டிகள் கடந்த 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. குறித்த தொடருக்கு முன்னர் தொடரில் பங்குகொள்ளும் அனைத்து வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, தொடரில் இடம்பெறும் சகல போட்டிகளுக்கு முன்னரும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரபிட் அண்டிஜன் பரிசோதனையும் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ரினௌன் அணி தமது அடுத்த போட்டியில் மார்ச் மாதம் 6ஆம் திகதி மாலை 5 மணிக்கு ரெட் ஸ்டார்ஸ் கால்பந்து கழகத்தை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<