இலங்கை சரியான திட்டத்துடன் விளையாடவில்லை என்கிறார் திமுத்

4204

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண லீக் ஆட்டத்தில் நாங்கள் சிறப்பான முறையில் ஆரம்பத்தைப் பெற்றுக்கொண்ட போதிலும், அதை தொடர்ந்து முன்னெக்க முடியாமல் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் தோல்வியை சந்தித்தோம் என இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.

அத்துடன், அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் இலங்கை அணி சரியான திட்டத்துடன் விளையாடவில்லை என தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்கு தோல்வி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற……

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் நேற்று (15) அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 345 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் திமுத் கருணாரத்ன (97 ஓட்டங்கள்), குசல் ஜனித் பெரேரா (52 ஓட்டங்கள்) ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக சிறந்த முறையில் ஓட்டங்களைக் குவித்த போதிலும் மத்திய வரிசை வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தினால் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இலங்கை அணியால் 45.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

இதன்மூலம் இம்முறை உலகக் கிண்ணத்தில் தமது 5ஆவது லீக் ஆட்டத்தில் பங்குபற்றிய இலங்கை அணி இரண்டாவது தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி, 2ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியிருந்தது.

எனினும், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் நடைபெறவிருந்த 3ஆவது மற்றும் 4ஆவது லீக் ஆட்டங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையால் ரத்தானது.

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற லீக் போட்டியில் பெற்றுக்கொண்ட தோல்விக்குப் பிறகு இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன கருத்து கூறுகையில்,

மிகவும் நெருக்கமான ஆட்டத்தில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று எதிரணிக்கு முதலில் துடுப்பெடுத்தாட சந்தர்ப்பம் அளித்தோம். எனினும், ஆரோன் பிஞ்ச் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் எமது பந்துவீச்சை சிறந்த முறையில் எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தனர்.

அதேபோல, பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நாங்களும் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டோம். இலக்கை எட்ட முடியும் என்று தான் நினைத்தோம். ஆனால், மத்திய வரிசை வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் காரணமாகவும், முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது என கூறினார்.

Photos : Sri Lanka vs Australia | ICC Cricket World Cup 2019 – Match 20

ThePapare.com |15/06/2019 | Editing and re-using images without….

அத்துடன், இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் நிறைய அழுத்தங்களைக் கொடுத்து எமது இலக்கை அடைவதற்கு தடையாக இருந்தனர். உண்மையில் ஸ்டார்க் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் ஆவர். அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாங்கள் அறிந்து வைத்திருந்தோம்.

நாங்கள் ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும், ஆனால் அதை நாங்கள் இந்தப் போட்டியில் செய்யவில்லை. மழையால் நாங்கள் இரண்டு ஆட்டங்களை இழந்தோம். எஞ்சிய போட்டிகளில் குறைந்தது இரண்டு போட்டிகளில் நாங்கள் வெல்ல வேண்டும். நாங்கள் நன்றாக விளையாட இங்கு வந்தோம், அதை நாங்கள் விளையாட விரும்புகிறோம் என தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி இங்கிலாந்து அணியை சந்திக்கவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<