சன்குவிக் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகள் முதற்தடவையாக கொழும்பில்

139
Sunquick-National-Beach-Volleyball-Championship-2018-Press-Conference

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சன்குவிக் தேசிய கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை கடற்கரை கரப்பந்தாட்ட அரங்கில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், அன்றைய தினமே குறித்த செயற்கை கரப்பந்தாட்ட மைதானம் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> எவரெஸ்ட் சிகரத்தை அடைய காத்திருக்கும் இரண்டாவது இலங்கையர்

இவ்வருடத்துக்கான தேசிய கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகளுக்கு நாடளாவிய ரீதியில் இருந்து 112 அணிகள் பங்குபற்றியிருந்தன. இதில் ஆண்,பெண் இருபாலாருக்குமான 21 வயதுக்கு உட்பட்ட மற்றும் திறந்த வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற ஆரம்ப சுற்று ஆட்டங்கள் நீர்கொழும்பு பார்க் கடற்கரையில் நடைபெற்றது.

இதன்படி, 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கை விமானப்படை அணி மற்றும் கலிகமுவ விளையாட்டுக் கழகம் ஆகியன போட்டியிட்டு இருந்தன. இதில் 2 இற்கு 1 என்ற (17-21, 21-17, 15-9) செட் கணக்கில் விமானப்படை அணி சம்பியனாகத் தெரிவாகியது.

இதேவேளை, 21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் திறந்த பிரிவிற்கான இறுதிப் போட்டிகள் என்பன எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் 21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் இலங்கை விமானப்படை மற்றும் சீதுவ தவிசமர அணிகள் போட்டியிடவுள்ளதுடன், பெண்களுக்கான திறந்த பிரிவில் இலங்கை கடற்படை அணியை இலங்கை இராணுவ அணியும், ஆண்களுக்கான திறந்த பிரிவில் இலங்கை விமானப்படையை இலங்கை இராணுவ அணியும் எதிர்த்தாடவுள்ளது.

இந்நிலையில், இம்முறை போட்டித் தொடருக்கு சன்குவிக் லங்கா நிறுவனம் பூரண அனுசரணை வழங்குவதுடன், இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் ஒலிம்பிக் இல்ல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கருத்து வெளியிடுகையில், ”எமது தேசிய விளையாட்டு கரப்பந்தாட்டமாகும். கடற்கரை கரப்பந்தாட்டத்தில் எமக்கு முன்னேற்றம் காணமுடியும். கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பத்தில் கடற்கரைகளில் மாத்திரமே விளையாடப்பட்டு வந்தன. ஆனால் தற்போது நகரங்களிலும் இதற்கான செயற்கை மைதானங்கள் அமைக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக குறைந்தளவு வசதிகளுடன் இப்போட்டிகளை ஆரம்பிக்க முடியும். எதிர்வரும் காலங்களில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான மைதானங்களை நிர்மானிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். எனவே இந்த முயற்சிக்கு சன்குவிக் லங்கா நிறுவனம் அனுசரணை வழங்க முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது” என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாலக சாந்தசிறி , உப தலைவர் சீ. ரத்னமுதலி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சன்குவிக் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் மங்கள பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க