சலாஹ்வின் அபாரத்தால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்த லிவர்பூல்

556

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் இந்த பருவகால அரையிறுதியின் முதல் கட்டமாக இடம்பெற்ற ரோமா அணிக்கு எதிரான போட்டியில் லிவர்பூல் அணி 5-2 என்ற கோல்களைப் பெற்று இறுதிப் போட்டிக்கான தனது வாய்ப்பை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த காலிறுதியில் லிவர்பூல் அணி, மென்சஸ்டர் சிடி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவாகிய அதேவேளை, ரோமா அணி பலம்மிக்க பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சித் தோல்வியைக் கொடுத்து அரையிறுதிக்குத் தெரிவாகியது.

பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரோமா அரையிறுதிக்கு தகுதி

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில்…..

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான அரையிறுதியின் முதல் கட்டப் போட்டி லிவர்பூல் அணியின் சொந்த மைதானமான என்பீல்ட் அரங்கில் இடம்பெற்றது.

ஆட்டம் ஆரம்பமாகி முதல் 10 நிமிடங்களிலும் வேகமான ஆட்டத்தைக் காண்பித்த லிவர்பூல் வீரர்கள் கோலுக்கான பல வாய்ப்புகளைப் பெற்றபோதும், முன்கள வீரர்கள் அவற்றை சிறப்பாக நிறைவு செய்யவில்லை.

15 நிமிடங்கள் கடந்த நிலையில் லிவர்பூல் வீரர் ஒக்லேட் சம்பர்லேன் உபாதைக்குள்ளாகி மைதானத்தில் இருந்து வெளியேற, அவருக்குப் பதிலாக விஜனால்டம் மைதானத்தினுள் வந்தார்.

25 நிமிடங்கள் கடந்த நிலையில் ரோமா அணியின் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் வைத்து லிவர்பூல் வீரரை முறையற்ற விதத்தில் தடுத்த ஜீசசிற்கு நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்து, லிவர்பூல் வீரர்களுக்கு ப்ரீ கிக்கிற்கான வாய்ப்பை வழங்கினார். எனினும் அந்த வாய்ப்பின் மூலம் அவர்கள் பயன் பெறவில்லை.

அடுத்த இரண்டு நிமிடங்களின் பின்னர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து கிடைத்த இரண்டு வாய்ப்புக்களையும் லிவர்பூல் வீரர் மானே மோசமான நிறைவின் மூலம் வீணடித்தார்.

பின்னர் 34ஆவது நிமிடத்தில் சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் தன்னிடம் வந்த பந்தை மானே கோலாக்கினார். எனினும், அதனை நடுவர் ஓப் சைட் என அறிவித்தார்.

இங்கிலாந்தின் உயரிய கால்பந்து விருதை வென்றார் சலாஹ்

லிவர்பூல் கால்பந்துக் கழகத்தின் முன்கள வீரர்…

இவை அனைத்திற்கும் பதிலாக, ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையில் பந்தைப் பெற்ற முன்னணி வீரர் மொஹமட் சலாஹ் பந்தை கோல் கம்பத்தின் இடது புறத்தினால் கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலை லிவர்பூல் அணிக்கு பெற்றுக் கொடுத்தார்.

மீண்டும் ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் பின்கள வீரரின் தடுப்பின் மூலம் தன்னிடம் வந்த பந்தை சலாஹ் பரிமாற்றம் செய்துவிட்டு, வேகமாக முன்னோக்கிச் செல்ல, மீண்டும் சலாஹ்விடம் பந்து வந்தது. எதிரே கோல் காப்பாளர் வருகையில் அவரையும் தாண்டி வேகமாக கோலுக்குள் பந்தை செலுத்தி சலாஹ் போட்டியில் தனது இரண்டாவது கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

இதன் மூலம் இந்த பருவகாலத்தில் அதிக கோல்களைப் பெற்ற வீரர்களின் வரிசையில் சலாஹ் (41) முன்னிலையடைந்தார். இவருக்கு அடுத்த படியாக தற்பொழுது கிறிஸ்டியானோ ரொனால்டோ 40 கோல்களுடன் உள்ளார்.

முதல் பாதி: லிவர்பூல் 2 – 0 ரோமா

சொந்த மைதானத்தில் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் இடம்பெற்ற போட்டியின் இரண்டாவது பாதியிலும் லிவர்பூல் அணி தனது ஆதிகத்தை செலுத்தியது.

அதன் பயனாக 55ஆவது நிமிடத்தில் கோலுக்கு மிக அண்மையில் இருந்து சலாஹ் மானேவிடம் பந்தைப் பரிமாற்றம் செய்ய, மானே அதனை கோலாக்கினார்.

அதிர்ச்சித் தோல்விக்கு மத்தியில் அரையிறுதிக்குள் நுழைந்த ரியல் மெட்ரிட்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில்……

தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திய சொந்த மைதான வீரர்களுக்கு 61ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரரான ரொபேர்டோ பேர்மினோ அடுத்த கோலைப் பெற்றுக் கொடுத்தார். இதன்போதும் சலாஹ் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தின்போது பேர்மினோ பந்தை கோலுக்குள் செலுத்தினார்.

மீண்டும் 68 நிமிடங்கள் கடந்த நிலையில் தமக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை பேர்மினோ ஹெடர் மூலம் கோலுக்குள் செலுத்தினார். இதனால் அணியின் முகாமையாளர் உட்பட ரசிகர்கள் அனைவரும் லிவர்பூல் அணியின் வெற்றியைக் கொண்டாடினர்.

போட்டியில் லிவர்பூல் அணி 5 கோல்களால் முன்னிலையில் இருக்கும்பொழுது ரோமா அணிக்கான முதல் கோலை எடின் செகோ பெற்றுக் கொடுத்தார். 81ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து உயர்த்தி அடிக்கப்பட்ட பந்து இறுதியாக இருந்த பின்கள வீரரையும் தாண்டி செகோவிடம் வந்தது. அவர் அதனை கோல் காப்பாளரின் தடையையும் தாண்டி கம்பங்களுக்குள் செலுத்தினார்.

மீண்டும் 85ஆவது நிமிடத்தில் ரோமா அணிக்கு அதிஷ்டம் காத்திருந்தது. ரோமா வீரர் கோல் நோக்கி அடித்த பந்து பெனால்டி எல்லையில் இருந்த லிவர்பூல் வீரர் மில்னரின் கையில்பட்டது. எனவே, தமக்கு கிடைத்த பெனால்டி உதையை டியேகோ பெரொட்டி கோலுக்குள் அடித்து ரோமா அணிக்கான இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

எஞ்சிய 5 நிமிடங்களையும் ரோமா அணி வேகமாக ஆட முயற்சித்த போதும் லிவர்பூல் வீரர்களின் தடுப்பாட்டத்தை தாண்ட அவர்களால் முடியாமல் போனது. எனவே, ஆட்டத்தின் நிறைவில் லிவர்பூல் 3 மேலதிக கோல்களினால் அரையிறுதியின் முதல் கட்டத்தை வெற்றி கொண்டது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான அரையிறுதியின் அடுத்த கட்டப் போட்டி அடுத்த மாதம் 3ஆம் திகதி இடம்பெறும். அதேவேளை, அடுத்த அரையிறுதியின் முதல் கட்டப் போட்டி ரியல் மெட்ரிட் மற்றும் பயென் முனிச் அணிகளுக்கு இடையில் நாளை (26) அதிகாலை இடம்பெறவுள்ளது.

முழு நேரம்: லிவர்பூல் கால்பந்துக் 5 – 2 ரோமா

கோல் பெற்றவர்கள்

லிவர்பூல் கால்பந்துக் கழகம் – மொஹமட் சலாஹ் 36’ & 45+1’, சடியோ மானே 56’, ரொபேர்டோ பேர்மினோ 61’ & 69’

ரோமா கால்பந்துக் கழகம் – எடின் செகோ 81’, டியேகோ பெரொட்டி 85’

மஞ்சள் அட்டை

லிவர்பூல் கால்பந்துக் கழகம் – அலெக்சேன்டர் ஆர்ணல்ட் 39’, டெஜன் லொவ்ரென் 74’, ஜோர்டன் ஹென்டர்சன் 85’

ரோமா கால்பந்துக் கழகம் – ஜுவன் ஜீசஸ் 26’, பெடேரிக்கோ பாசியோ 88

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க