எவரெஸ்ட் சிகரத்தை அடைய காத்திருக்கும் இரண்டாவது இலங்கையர்

166

உலகின் மிக உயரமான மலைச் சிகரமாக விளங்குகின்ற எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கையரான ஜயந்தி குரு – உதும்பாலவுடன் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான பயணத்தை 448 மீற்றரினால் துரதிஷ்டவசமாக தவறவிட்ட மற்றுமொரு இலங்கை வீரரான ஜொஹான் பீரிஸ், 2ஆவது தடவையாகவும் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது அந்த பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்ற அவர், எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளார்.

தேசிய மரதன் ஓட்ட சம்பியன்களாக சந்தனுவன், சுஜானி தெரிவு

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து…

இலங்கையைச் சேர்ந்த மலையேறும் வீரரான ஜொஹான் பீரிஸ், கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி ஜயந்தி குரு உதும்பலாவுடன் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், சிகரத்தை அண்மித்த போது நிலவிய சீரற்ற காலநிலை அவர்களது பயணத்திற்கு சிறிது தாமதத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும் அவர்கள் தைரியம் இழக்காது பயணத்தை முன்னெடுத்திருந்தனர்.

எனினும், இலங்கையின் ஜயந்தி குரு உதும்பாலவுக்கு மாத்திரமே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைய முடிந்தாலும், அவருடன் சென்ற ஜொஹான் பீரிஸுக்கு ஒட்சிசன் சிலிண்டரில் இருந்த வாயு போதாமல் போனமையால் சிகரத்தை நோக்கிய பயணத்தை நிறைவுசெய்ய முடியாது போனது.

இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான கன்னிப் பயணத்தில் பின்னடைவை சந்தித்த ஜொஹான், தன்னம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மீண்டும் அப்பயணத்தை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளில் களமிறங்கினார். இதன் ஒரு அம்சமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான பயிற்சி கருத்தரங்குகளில் பங்குபற்றிய அவர், கடந்த ஏப்ரம் மாதம் 4ஆம் திகதி நேபாளம் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

அங்கு சென்று எவரெஸ்ட் சிகர முகாமில் உயர்ந்த மலைகளில் ஏறுதல் மற்றும் பனிச்சறுக்கள்களில் ஏறுவதற்கான ஒருசில பயிற்சிகளில் ஈடுபட்ட அவர், உயரமான மலைகளில் ஏறுகின்ற போது சந்திக்க நேரிடுகின்ற ஒக்சிசன் வாயுவின் தாக்கம் மற்றும் அதன் ஏற்ற, இறக்கங்களை எவ்வாறு எதிர்கொள்வது குறித்த பயிற்சிகளுக்கும் முகங்கொடுத்துள்ளார்.

Rotations என்று அழைக்கப்படுகின்ற இந்த குறுகிய பயிற்சிகளை நிறைவுசெய்த ஜொஹான், இம்மாதம் 19ஆம் திகதி எவரெஸ்ட் சிகர முகாமிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து எதிர்வரும் 23 ஆம் திகதி எவரெஸ்ட் சிகரத்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், மலையேறும் வீரர்களின் நம்பிக்கையை வென்ற உலகின் பிரபல மலையேறும் வழிகாட்டல் நிறுவனமான International Mountain Guides இனால் அழைத்துச் செல்லப்படவுள்ள குழுவுடன் ஜொஹான் பீரிஸும் இணைந்துகொள்ளவுள்ளார். குறித்த நிறுவனத்தினால் மலையேறும் வீரர்களுக்கான வைத்திய சேவை, வழிகாட்டல் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லும் சேவை, தொடர்பாடல், காப்புறுதி, ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் தேவையேற்படுமிடத்து மலையேறிகளை அவசர நிலைமைகளிலிருந்து பாதுகாப்பதற்கு ஹெலிகொப்டர் சேவைகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வீரர்களுக்கு பார்சிலோனாவில் பயிற்சி பெறும் வாய்ப்பு

உலகின் பிரபல கால்பந்து கழகமான பார்சிலோனாவின்…

இவையனைத்துக்கும் மத்தியில் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான மிகவும் சவாலான பயணத்தை ஜொஹான் இன்னும் சில தினங்களில் முன்னெடுக்கவுள்ளார். இப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு மன உறுதியும், ஆத்ம சக்தியும் தேவைப்படுகின்றது.  

இறுதியாக எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான தனது பயணத்தை இலங்கையின் மலையேறும் நட்சத்திரமான ஜயந்தி குருஉதும்பாலவுடன் அவர் மேற்கொண்டிருந்த போதும், இம்முறை பயணத்தை தனியாக முன்னெடுக்கவுள்ள ஜொஹானின் இந்த சாதனை முயற்சி வெற்றிபெற வேண்டும் என ThePapare.com வாயிலாக எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<