T20 உலகக் கிண்ணத்தில் ஆடும் அழைப்பை நிராகரித்த சுனில் நரைன்

41

இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடப் போவதில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சுனில் நரைன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் T20i சதத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தங்களையும் கொடுத்து வருகின்றார்.    

இதன் காரணமாக இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியிலும் சுனில் நரைன் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இதனிடையே, இம்முறை ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுனில் நரைனை எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட கோரி அந்த அணியின் தலைவர் ரோவ்மன் பவல் அண்மையில் கோரிக்கை விடுத்தார் 

எனவே, சுனில் நரைன் ஓய்வில் இருந்து வந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்காக T20 உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், எதிர்வரும் T20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடப்போவதில்லை என சுனில் நரைன் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ‘இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாட வேண்டும் என எனக்கு அழைப்புகள் வந்தன. நான் ஓய்வில் இருந்து திரும்ப வந்து T20 உலகக் கிண்ணத்தில் விளையாட வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். 

ஆனால் அந்த கதவை நான் ஏற்கனவே மூடிவிட்டேன். மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களை தொடர்ந்து ஆதரிப்பேன். கடந்த சில மாதங்களாக கடினமாக உழைத்து, மற்றொரு பட்டத்தை வெல்லும் திறன் கொண்டவர்கள் என்பதை எங்கள் அற்புதமான ரசிகர்களுக்குக் காட்டத் தகுதியான நண்பர்களே, அவர்கள் உலகக் கிண்ணத்தை வெல்ல வாழ்த்துகள்என்று தெரிவித்துள்ளார் 

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைசிறந்த சுழல்பந்து வீச்சாளராக வலம் வந்த 35 வயதான சுனில் நரைன், 6 டெஸ்ட், 65 ஒருநாள் மற்றும் 51 T20i போட்டிகளில் விளையாடி 550 ஓட்டங்களையும், 165 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் 169 போட்டிகளில் விளையாடி 172 விக்கெட்டுகளையும், 1,332 ஓட்டங்ககளையும் சேர்த்துள்ளார் 

முன்னதாக இவர் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<