பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராகும் முஷ்டாக் அஹ்மட்

51
Mushtaq Ahmed

பாகிஸ்தானின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், உலகக் கிண்ணத்தை வென்றவருமான முஷ்டாக் அஹ்மட், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2 ஆண்டுகளாக பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் பணியாற்றிய நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகினார். எனவே, வெற்றிடமாக இருந்த அவரது இடத்துக்கு முஷ்டாக் அஹ்மட்டை நியமிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.   

இதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடர் வரை பங்களாதேஷின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் பணியாற்றுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது 

இதனிடையே, அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20I தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்து கொள்ள முஷ்டாக் அஹ்மட் டாக்காவுக்கு வருவார் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை செவ்வாயன்று அறிவித்தது. 

இதேவேளை, பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் முஷ்டாக் அஹ்மட் கருத்து தெரிவிக்கையில் 

சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்ள கிடைத்தமை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். எனக்கு கிடைத்த பொறுப்பை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கிறேன். மேலும் எனது அனுபவத்தை வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், கிரிக்கெட் விளையாடுகின்ற நாடுகளில் மிகவும் ஆபத்தான அணிகளில் ஒன்று பங்களாதேஷ் என்று நான் எப்போதும் நம்புகிறேன். அவர்களிடம் திறமை மற்றும் வளங்கள் இருப்பதால் யாரையும் வெல்ல முடியும். அந்தத் திறமையை அவர்களுக்குள் விதைக்க முயற்சிப்பேன் என தெரிவித்தார் 

முஷ்டாக் அஹ்மட் 2008 முதல் 2014 வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றினார். மேலும் அவர் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இரண்டு தடவைகள் பணிபுரிந்தார். இதில் 2014 முதல் 2016 வரை பந்துவீச்சு ஆலோசகராகவும், 2020 முதல் 2022 வரை சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டார். 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் தலைமைப் பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்க, உதவிப் பயிற்சியாளராக நிக் போதாஸ், துடுப்.பாட்ட பயிற்சியாளராக டேவிட் ஹெம்ப் மற்றும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் ஆண்ட்ரே ஆடம்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<