சிராஸ், சூரியபண்டார அதிரடியில் ஒருநாள் தொடரை வென்ற இலங்கை A அணி

Afghanistan A Tour of Sri Lanka 2024

95
Afghanistan A Tour of Sri Lanka 2024

ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் உத்தியோகபூர்வமற்ற கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இலங்கை A அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியிருக்க 3-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது.

மொஹமட் சிராஸின் அபார பந்துவீச்சு, சொனால் தினூஷவின் சகலதுறை ஆட்டம் மற்றும் பசிந்து சூரியபண்டாரவின் அதிரடி அரைச் சதம் என்பன இலங்கை A அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் A அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட ஒற்றை டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடி வருகின்றது.

முதலாவது ஒருநாள் போட்டியில் டக்வத் லூயிஸ் முறைப்படி 8 ஓட்டங்களாலும், 2ஆவது ஒருநாள் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 8 விக்கெட்டுகளாலும் இலங்கை A அணி வெற்றியீட்டி 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 2–0 என முன்னிலை பெற்றது.

இந்த நிலையில், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று (03) நடைபெற்ற 3ஆவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் A அணி 41.2 ஓவர்களில் 185 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஆப்கானிஸ்தான் A அணி சார்பாக ஜிஆ-உர்-ரஹ்மான் 35 ஓட்டங்களையும், டார்விஷ் ரசூலி 25 ஓட்டங்களையும், சஹீதுல்லாஹ் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

பந்துவீச்சில் மொஹமட் சிராஸ் 6 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சொனால் தினூஷ 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், துஷான் ஹேமன்த 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் இந்தப் போட்டித் தொடரில் இலங்கைA அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற மொஹமட் சிராஸ், முதல் போட்டியில் ஒரு விக்கெட்டினையும், 2ஆவது போட்டியில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிலெடுத்தாடிய இலங்கை A அணி 37.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. பசிந்து சூரியபண்டார 109 பந்துகளில் 9 பௌண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல் 84 ஓட்டங்களையும், சொனால் தினூஷ 35 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹமத் சலீம் 3 விக்கெட்டுகளையும், பிலால் சமி 2 விக்கெட்டுகளையும்  கைப்பற்றினர்.

இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (05) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

 

ஆப்கானிஸ்தான் A அணி – 185 (41.2) – ஜிஆ-உர்-ரஹ்மான் 35, டார்விஷ் ரசூலி 25, சஹீதுல்லாஹ் 23, மொஹமட் சிராஸ் 3/31, சொனால் தினூஷ 2/29, துஷான் ஹேமன்த 2/29

 

இலங்கை A அணி – 186/6 (37.3) பசிந்து சூரியபண்டார 84*, சொனால் தினூஷ 35, நிஷான் மதுஷ்க 20

 

போட்டி முடிவு – இலங்கை A அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<