இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் ஸ்மித் விளையாடுவதில் சந்தேகம்

Australia Tour of Sri Lanka 2025

49
Steven Smith

இலங்கை சுற்றுப்பயணத்திற்காக அறிவிக்கபட்டுள்ள அவுஸ்திரேலியா டெஸ்ட் அணியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீவன் ஸ்மித் காயமடைந்துள்ளதால் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியின் போது ஸ்டீவன் ஸ்மித்தின் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் துபாயில் நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் அவரது பங்கேற்பு தாமதமாகியுள்ளது. இந்த நிலையில், ஸ்மித் தற்போது மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெற்று வருவதாகவும், எதிர்வரும் நாட்களில் அவர் பயிற்சி முகாமில் இணைய எதிர்பார்ப்பதாகவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைவரான பேட் கம்மின்ஸ் தந்தை விடுப்பில் செல்வதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ஸ்டீவன் ஸ்மித் அணியை வழிநடத்த இருந்தார்.

எது எவ்வாறாயினும், காயம் காரணமாக ஸ்மித்தால் தொடரில் விளையாட முடியாவிட்டால், உதவித் தலைவர் ட்ராவிஸ் ஹெட் முதல் முறையாக அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, வேகப்பந்து வீச்சாளர் மத்தியூ குனமன் பிக் பாஷ் லீக் தொடரின் போது காயமடைந்தார். இதன் காரணமாக அவரது வலது கட்டை விரலில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அவருக்கு இலங்கை சுற்றுப்பயணத்தில் இணைய முடியும் என அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி காலியில் ஆரம்பமாக உள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<