தேசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தங்கம் வென்றார் சண்முகேஸ்வரன்

National Athletics Trials - 2021

210

தேசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றரில் பங்குகொண்ட மலையக வீரர்களான குமார் சண்முகேஸ்வரன் மற்றும் விக்னராஜ் வக்ஷான் ஆகிய இருவரும் முறையே தங்கம், வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டனர்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடத்தின் முதலாவது தேசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (07) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை இலக்ககாக் கொண்டு சிரேஷ் வீரர்களுக்கும், அதே மாதம் நடைபெறவுள்ள உலக கனிஷ் மெய்வல்லுனர் போட்டியை இலக்காகக் கொண்டு கனிஷ் வீரர்களுக்கும் இந்த தகுதிகாண் போட்டிகள் நடைபெறுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

சண்முகேஸ்வரனின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த தரங்க

இதில் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்  போட்டியில் பங்குகொண்ட மலையக வீரர் குமார் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கம் வென்றார்.  

கொரோனா வைரஸுக்குப் பிறகு முதல்தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் களமிறங்கிய அவர். போட்டித் தூரத்தை 31 நிமிடங்கள் 29.31 செக்கன்களில் நிறைவு செய்தார்

இறுதியாக, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குகொண்ட சண்முகேஸ்வரன் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

இந்தப் போட்டியை 31 நிமிடங்கள் 34.68 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த எல். றிமான்ன வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இதேநேரம், 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் ஆகிய இரண்டு போட்டிகளிலும் அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற மற்றுமொரு மலையக வீரரான விக்னராஜ் வக்ஷான், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 32 நிமிடங்கள் 19.30 செக்கன்களை அவர் எடுத்தார்.

தேசிய நகர் வல ஓட்டம் : சம்பியனை வீழ்த்திய இளம் வீரர் வக்ஷான்

தலவாக்கலையச் சேர்ந்த வக்ஷான், கடந்த 2019 முதல் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்றார். இதில் 2019இல் நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் 6ஆவது இடத்தையும், 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மொஹமட் சபான் (10.81 செக்.) வெண்கலப் பதக்கத்தையும், ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மொஹமட் நிப்ராஸ் (3 நிமி. 55.23 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்

ஆண்கள் பிரிவு

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை ஹிமாஷ ஷான் பெற்றுக்கொண்டார். போட்டித் தூரத்தை அவர் 10.58 செக்கன்களில் நிறைவு செய்தார்

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். போட்டி தூரத்தை நிறைவுசெய்ய 45.99 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டதுடன், தனது தனிப்பட்ட அதிசிறந்த காலத்தையும் பதிவுசெய்தார்

தேசிய விளையாட்டு விழா மரதனில் சிவராஜன், கிருஷாந்தினி தங்கம் வென்று சாதனை

இதேவேளை, கனிஷ் பிரிவில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இசுரு கௌஷல்ய, போட்டியை 47.24 செக்கன்களில்டிமுடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

அத்துடன் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள உலக கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பையும் அவர் பெற்றுக்கொண்டார்.

பெண்கள் பிரிவு

பெண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் தடை தாண்டலில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அடைவு மட்டத்தை நெருங்கியுள்ள நிலானி ரத்னாயக்க, இன்று நடைபெற்ற பெண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் தடை தாண்டல் போட்டியை 9 நிமிடங்கள் 57.81 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கம் வென்றார்.

இதனிடையே, பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.26 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த அன்ஞானி புலவன்ச, தங்கப் பதக்கம் வென்றார்

இதுஇவ்வாறிருக்க, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 53.43 செக்கன்களில் நிறைவு செய்த டில்ஷி குமாரசிங்க தங்கப் பதக்கம் வென்றார்

மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் சபான், சபியாவுக்கு வெற்றி

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை இளம் வீராங்கனையான அமாஷா டி சில்வா பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டியை 11.51 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இதேவேளை, கனிஷ் பிரிவில் பெண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் பங்குகொண்ட ஒவினி சந்திரசேகர புதிய கனிஷ் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 13.02 மீற்றர் தூரத்தை எறிந்தார்

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<