20க்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் போட்டித் தொடரில், குழு ஒன்றில் இருந்து இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியும் குழு இரண்டில் நியூசிலாந்து மற்றும் இந்தியாஆகிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் குழு ஒன்றில் அரையிறுதி வாய்ப்பை இழந்த அணிகளான இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் மோதின. டெல்லி பெரோஸ் ஷா ,கொட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடந்த இங்கிலாந்து அணியுடனான போட்டியில் பின் தொடையில் இருக்கும் தசை நார் பிடிப்பு உபாதைக்கு உள்ளான இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸிற்கு ஓய்வு வழங்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்றைய போட்டியில் இலங்கை அணியை கடந்த போட்டிகளில் உப தலைவராக செயற்பட்ட தினேஷ் சந்திமால் வழி நடத்தினார். போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா அணியின் தலைவர் பெப் டுப்லசிஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

நேற்றைய போட்டியில் விளையாடிய அணிகளின் விபரம்,

இலங்கை அணி :

தினேஷ் சந்திமால் (தலைவர்), திலகரத்ன தில்ஷன், லஹிரு திரிமன்ன, சாமர கபுகெதர, ஷெஹான் ஜயசூரிய, மிலிந்த சிறிவர்தன, டசுன் சானக, திசர பெரேரா, சுரங்க லக்மால், ரங்கன ஹேரத், ஜெப்ரி வெண்டர்சே

தென் ஆபிரிக்கா அணி :

பெப் டுப்லசிஸ் (தலைவர்), ஹசிம் அம்லா, குயிண்டன் டி கொக், ரில்லி ரூசோ, எ.பி.டி விளியர்ஸ், டேவிட் மில்லர், பர்ஹான் பெஹார்டீன், டேவிட் வையிஸ், டேல் ஸ்டெயின், அரொன் பங்கீசோ , கையில் அப்போட் , இம்ரான் தாஹிர்

நடுவர்கள் : சுந்தரம் ரவி மற்றும் ரொட் டக்கர்

தென் ஆபிரிக்கா அணித் தலைவரின் தீர்மானத்திற்கு அமைய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான திலகரத்ன தில்ஷான் மற்றும் தினேஷ் சந்திமால் ஜோடி களம் இறங்கியது. இவர்கள் இருவரும் முதல் விக்கட்டுக்காக விரைந்த சுறுசுறுப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தார்கள். 29 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்த போது முதல் விக்கட் வீழ்த்தப்பட்டது. முதல் விக்கட்டாக தினேஷ் சந்திமால் 20 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அரொன் பங்கீசோ வீசிய பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களம் புகுந்த லஹிறு திரிமன்ன தான் சந்தித்த முதல் பந்திலேயே தினேஷ் சந்திமால் ஆட்டம் இழந்ததைப் போன்றே போல்ட் செய்யப்பட்டு பெரும் ஏமாற்றத்தோடு ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய மிலிந்த சிறிவர்த்தன, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரத்ன தில்ஷானோடு 30 ஓட்டங்களைப் பகிர்ந்த பின் 15 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களோடு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க இலங்கை அணியின் ஓட்ட வீதம் ஆமை வேகத்தில் சென்றது.

இறுதியில் இலங்கை அணி 19.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு காரணமாய் திகழ்ந்த திலகரத்ன தில்ஷான் அதிக பட்சமாக 40 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 36 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தவிர இறுதி நேரத்தில் வந்து இலங்கை அணியின் ஓட்ட வேகத்தை உயர்த்தப் போராடிய சகலதுறை வீரர் டசுன் ஷானாக 18 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார்.

தென் ஆபிரிக்கா அணியின் பந்து வீச்சில் டேல் ஸ்டெயின் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா ஒரு விக்கட்டைக் கைப்பற்ற, அரொன் பங்கீசோ, கையில் அப்போட் மற்றும் பர்ஹான் பெஹார்டீன் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகள் வீதம் தம்மிடையே பங்கு போட்டார்கள்.

இலங்கை அணியின் ஆட்டத்தைத் தொடர்ந்து 121 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தென் ஆபிரிக்கா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஹசிம் அம்லா மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோர் ஆடுகளம் புகுந்தனர். தென் ஆபிரிக்கா அணியின் இனிங்ஸின் இரண்டாவது ஓவரில் திலகரத்ன டில்ஷானின் அருமையான களத் தடுப்பின் உதவியுடன் குயிண்டன் டி கொக்கின் விக்கட் கைப்பற்றப்பட்டது. 9 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் டி கொக் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழக்க 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை இழந்து காணப்பட்டது. அவரைத் தொடர்ந்து ஆடுகளம் புகுந்த தலைவர் பெப் டுப்லசிஸ், ஹசிம் அம்லாவோடு இணைந்து பொறுமையாகவும் நிதானமாகவும் விளையாடி 2ஆவது விக்கட்டுக்காக 67 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அதன் பின் சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் பெப் டுப்லசிஸ் 31 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த எ.பி.டி விலியர்ஸ் மற்றும் ஹசிம் அம்லா ஜோடி தென் ஆபிரிக்கா அணியை வெற்றியின் பக்கம் எடுத்துச் சென்றது. இறுதியில் 14 பந்துகள் மீதமிருக்க 8 விக்கட்டுகளால் மிக இலகுவான ஆறுதல் வெற்றியைப் பெற்றது தென் ஆபிரிக்கா அணி. இவ்வணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா பொறுப்பாக விளையாடி 52 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 56 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றார். இலங்கை அணியின் பந்து வீச்சில் நேற்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட சுரங்க லக்மால் ஒரு விக்கட்டைக் கைப்பற்றினார்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிறப்பாக பந்து வீசி ஆரம்பத்திலேயே இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுத்த சுழல் பந்து வீச்சாளர் அரொன் பங்கீசோவிற்கு வழங்கப்பட்டது. 6ஆவது டி20 உலகக் கிண்ணத்தின் லீக் போட்டிகள் யாவும் நிறைவுற்ற நிலையில் மீதமாக இன்னும் 3 போட்டிகளே எஞ்சியுள்ளது. இதில் முதலாவது அரையிறுதிப் போட்டி நாளை (30) நேற்று போட்டி நடைபெற்ற டெல்லி பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் நியுசிலாந்து அணி இங்கிலாந்து அணியைச் சந்திக்கிறது.