மழையினால் இலங்கைக்கு ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் புள்ளிகள்

1583
Getty Images/AFP

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி மழையினால் கைவிடப்பட்டிருக்கின்றது.

குசல், தனுஷ்க, டிக்வெல்லவை விசாரிக்க ஐவரடங்கிய குழு

போட்டி கைவிடப்பட்டிருக்கும் காரணத்தினால், இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆகியவை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC இன்) ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் தொடரின் போட்டி ஒன்றுக்கு வழங்கப்படும் 10 புள்ளிகளை தலா 5 வீதம் பெற்றிருக்கின்றன. 

எனினும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை ஏற்கனவே 2-0 எனக் கைப்பற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினையும் முன்னர் நடைபெற்ற T20 தொடரினைப் போல் தோல்வி எதனையும் பெறாமல்  கைப்பற்றியிருக்கின்றது.   

இன்று (04) பிரிஸ்டொல் நகரில் ஆரம்பமான மூன்றாவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கிய நிலையில், முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியது. தொடர்ந்து போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் மழை குறுக்கிட்டு பின்னர் ஆட்டம் தொடர்ந்த நிலையில் 41.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணி வீரர்கள் 166 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர்.

ஒல்லி ரொபின்சனுக்கு 8 போட்டிகளில் விளையாடத் தடை

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை பொறுப்புடன் ஆடி ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷானக்க 65 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களை எடுத்திருக்க, ஏனைய இலங்கை வீரர்களில் வனிந்து ஹஸரங்க மாத்திரமே 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் டொம் கர்ரன் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, கிறிஸ் வோக்ஸ் மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்னர். 

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸினை அடுத்து, போட்டியில் கடுமையான மழையின் குறுக்கீடு உருவாகிய நிலையில் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. 

போட்டி கைவிடப்பட்ட நிலையில் தமது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் எந்தவித வெற்றிகளையும் பெறாமல் இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பவிருப்பதோடு, நாடு திரும்பிய பின்னர் அடுத்ததாக இந்திய அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இதேநேரம், இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் டேவிட் வில்லி தெரிவு செய்யப்பட்டிருந்தார். 

போட்டியின் சுருக்கம்

முடிவு – ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<