புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியான 83ஆவது புனிதர்களின் சமர் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

பி. சரவணமுத்து மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

புனித ஜோசப் கல்லூரியை மீட்டெடுத்தார் ஜெஹான் டேனியல்

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி ஜெஹான் டேனியலின் அபார சதத்தின் உதவியுடன் 205 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி முதல் நாள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்றிருந்தது.

[rev_slider dfcc728]

இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவ்வணி தமக்கு உரித்தான 60 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்திலும் தனது திறமையை வெளிக்காட்டிய மானெல்க டி சில்வா அரைச் சதம் கடந்த நிலையில் 51 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். மேலும், ரன்மித் ஜயசேன தனது அணி சார்பில் 25 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இன்றைய தினம் புனித பேதுரு கல்லூரிக்கு முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் வாய்ப்பு காணப்பட்ட போதிலும், அவ்வணியினால் இன்று வீசப்பட்ட இறுதி 13 ஓவர்களில் 50 ஓட்டங்களையே பெற்றுக் கொள்ள முடிந்தது. பந்து வீச்சில் அசத்திய சுழற்பந்து வீச்சாளரான நிபுன் சுமனசிங்க 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஏனைய பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து 17 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரியினர் போட்டியை சமநிலையில் நிறைவு செய்யும் நோக்குடன் நிதானமாக துடுப்பெடுத்தாடினர். மீண்டுமொரு முறை துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட ஜெஹான் டேனியல் அதிகபட்சமாக 42 ஓட்டங்கள் குவித்தார்.

மேலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தஷான் பெரேரா மற்றும் அணித்தலைவர் ஹரீன் குரே ஆகியோர் தலா 25 ஓட்டங்கள் வீதம் பெற்றுக்கொண்டனர். இதன்படி 77 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 பெற்றிருந்த நிலையில் புனித ஜோசப் கல்லூரி ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

பந்து வீச்சில் புனித பேதுரு கல்லூரியின் அமீன் மிப்லால் 3 விக்கெட்டுகளையும் மானெல்க டி சில்வா 2 விக்கெட்டுக்களையும் பதம் பார்த்தனர்.

போட்டி நிறைவடைய 15 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் புனித பேதுரு கல்லூரிக்கு 181 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சாத்தியமற்ற இலக்கு என்ற போதிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவ்வணி ஆட்டம் நிறைவடையும் போது விக்கெட் இழப்பேதுமின்றி 99 ஓட்டங்களை குவித்தது.

தொடக்க வீரர்களான சந்துஷ் குணதிலக மற்றும் அனிஷ்க பெரேரா ஆகியோர் முறையே 52 மற்றும் 41 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர். இப்போட்டியின் போது சந்துஷ் குணதிலக இப்பருவகாலத்தில் 1000 ஓட்டங்களை குவித்த வீரர்களின் பட்டியலில் ஒருவராக இனைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி 61 ஆவது முறையாக புனிதர்களின் சமர் சமநிலையில் நிறைவடைந்ததுடன், இரு அணிகளும் கிண்ணத்தை பகிர்ந்து கொண்டன.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 205 (57.2) ஜெஹான் டேனியல் 124*, ஷெவோன் பொன்சேகா 26, பஹன் பெரேரா 25, சந்துஷ் குணதிலக 3/34, மானெல்க டி சில்வா 3/35

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 188/8 (60) மானெல்க டி சில்வா 51, ஷாலித் பெர்னாண்டோ 47, ரன்மித் ஜயசேன 25, நிபுன் சுமனசிங்க 4/49.

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 163/8d (77) ஜெஹான் டேனியல் 42, தஷான் பெரேரா 25, ஹரீன் குரே 25, மிப்லால் அமீன் 3/42, மானெல்க டி சில்வா 2/21

புனித பேதுரு கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 99/0 (15) சந்துஷ் குணதிலக 52*, அனிஷ்க பெரேரா 41*

தனிநபர் விருதுகள்

  • ஆட்ட நாயகன்ஜெஹான் டேனியல் (புனித ஜோசப் கல்லூரி)
  • சிறந்த களத்தடுப்பாளர்லக்ஷிண ரொட்ரிகோ (புனித பேதுரு கல்லூரி)
  • சிறந்த பந்து வீச்சாளர்நிபுன் சுமனசிங்க (புனித ஜோசப் கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர்ஜெஹான் டேனியல் (புனித ஜோசப் கல்லூரி)
  • சிறந்த சகலதுறை வீரர்மானெல்க டி சில்வா (புனித பேதுரு கல்லூரி)