வைட்வொஷ் தோல்வியை தடுக்குமா இலங்கை?

170

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல் இரண்டு T20I போட்டிகளிலும் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவது போட்டியில் வைட்வொஷ்ஷினை தடுக்கும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது. 

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I   தொடரின் மூன்றாவது போட்டி கண்டி – பல்லேகலை மைதானத்தில் நாளை (06) நடைபெறவுள்ளது.

மூன்றாவது போட்டியிலிருந்து வெளியேறும் செஹான், மெண்டிஸ்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ……..

சொந்த மண்ணில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும், களத்தடுப்பில் செய்த தவறுகள் காரணமாக இலங்கை அணிக்கு தோல்வியை தழுவ நேரிட்டுள்ளது. குறிப்பாக, பிடியெடுப்புகள் மற்றும் ரன்-அவுட் வாய்ப்புகளை தவறவிட்டிருந்தமை, அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. 

இலங்கை அணி இந்த வருடத்தில் விளையாடிய 6 T20I   போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், லசித் மாலிங்கவின் தலைமை பொறுப்பும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அணியின் தொடர் தோல்விகள் காரணமாக, அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத்தில் மாலிங்க தலைவராக செயற்படுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

தொடர் ஏற்கனவே இழக்கப்பட்டுள்ள நிலையில், அழுத்தமின்றி விளையாடுவதற்கும், புதிய வீரர்களுக்கான வாய்ப்பை கொடுக்கவும் இலங்கை அணி எதிர்பார்த்து காத்திருக்கிறது. எவ்வாறாயினும், இரண்டு அணிகளிலும் ஏற்பட்டிருக்கும் உபாதைகள் அணிகளுக்குள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டயாத்தை ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கிறது. 

மைதானத்தில் மோதுண்டு உபாதைக்குள்ளாகிய குசல் மெண்டிஸ் மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் நாளைய போட்டியில் விளையாட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 92

டெய்லர் – கிரெண்ஹோம் அதிரடியால் ……

இதேவேளை, டிம் சௌதி தலைமையில் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று, தொடரை கைப்பற்றியுள்ள நியூசிலாந்து அணியைப் பொருத்தவரை எந்தவித அழுத்தமும் இன்றி நாளைய போட்டியில் களமிறங்கவுள்ளது.  

ஆனாலும், உபாதையால் வெளியேறியிருக்கும் மார்டின் கப்டில் மற்றும் இரண்டாவது போட்டியில் அரைச் சதம் கடந்த டொம் ப்ரூஸின் முழங்கால் உபாதைகள் என்பன அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும்.

எனினும், ரொஸ் டெய்லர் உபாதையிலிருந்து குணமடைந்துள்ளமை அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கொலின் டி கிரெண்டோமின் மத்தியவரிசை துடுப்பாட்டம் மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கு வலுவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

இரண்டு அணிகளும் மொத்தமாக 18 T20I போட்டிகளில் இதற்கு முன்னர் மோதியுள்ளன. இதில், இந்த தொடரின் முதல் இரண்டு வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி 10 வெற்றிகளையும், இலங்கை 6 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

மூன்றாவது T20I போட்டியிலிருந்து நீக்கப்பட்டார் கப்டில்

நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட …….

அதேநேரம், பல்லேகலை மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக தங்களுடைய இரண்டாவது வெற்றியினை நியூசிலாந்து அணி பதிவுசெய்திருக்கிறது. இந்த தொடருக்கு முன்னர் நடைபெற்ற 3 போட்டிகளில் ஒரு போட்டியில் இலங்கை வெற்றிபெற்றிருந்ததுடன், ஒரு போட்டி சமனிலையிலும் மற்றுமொரு போட்டி வெற்றித் தோல்வியின்றியும் நிறைவுபெற்றிருந்தன.

எதிர்பார்ப்பு வீரர்கள்

இசுரு உதான

இலங்கை அணியின் சகலதுறை வீரரான இசுரு உதான கடந்த இரண்டு போட்டிகளிலும், பெரிதாக பங்களிப்பு வழங்காவிட்டாலும், சரியான நேரங்களில் அணிக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

குறிப்பாக, முதல் போட்டியை விடவும் இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்துவீசி எதிரணிக்கு சவால் கொடுத்திருந்தார். இந்தநிலையில், இசுரு உதானவின் வேகமான துடுப்பாட்டம் மற்றும் அவரது பந்துவீச்சு நாளைய போட்டியில் அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Album : Sri Lanka vs New Zealand | 2nd T20I

கொலின் டி கிரெண்டோம்

நியூசிலாந்து அணி, இந்த தொடரை வெற்றிக்கொள்வதற்கான முக்கிய காரணம் கொலின் டி கிரெண்டோம். பந்துவீச்சில் பெரிதாக இவரது பங்கு இல்லாத போதும், துடுப்பாட்டத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

அனுபவ துடுப்பாட்ட வீரர்கள் அணியில் இல்லாத குறையினை தீர்த்திருந்த இவர், முதல் போட்டியில் 44 ஓட்டங்களையும், இரண்டாவது போட்டியில் 59 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். அத்துடன், கடந்த காலங்களில் சுழல் பந்துவீச்சு தடுமாறியிருந்தாலும், இந்த தொடரில் சிறப்பாக சுழல் பந்துவீச்சாளர்களை அவர் எதிர்கொண்டிருந்தார். எனவே, இவரது துடுப்பாட்டம் நியூசிலாந்து அணிக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தேச பதினொருவர்

இலங்கை உத்தேச பதினொருவர்

இலங்கை அணியை பொருத்தவரை, உபாதைக்குள்ளாகிய செஹான் ஜயசூரிய மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு பதிலாக லஹிரு மதுசங்க மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் இணைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி – குசல் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு மதுசங்க, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, அகில தனன்ஜய, இசுரு உதான, லசித் மாலிங்க (தலைவர்), லக்ஷான் சந்தகன்

நியூசிலாந்து உத்தேச பதினொருவர்

நியூசிலாந்து அணியில் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள மார்டின் கப்டிலுக்கு பதிலாக புதிதாக குழாத்துக்கு அழைக்கப்பட்டுள்ள ஹெமிஷ் ரதபோர்ட் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. டொம் ப்ரூஸிற்கு பதிலாக ரொஸ் டெய்லரும், இஸ் சோதிக்கு பதிலாக டொட் எஸ்ட்லும் அணியில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

நியூசிலாந்து – ஹெமிஷ் ரதபோர்ட், கொலின் மன்ரோ, டிம் செய்பர்ட், ரொஸ் டெய்லர், கொலின் டி கிரெண்டோம், டார்லி மிச்சல், மிச்சல் சென்ட்னர், ஸ்கொட் குகலெய்ன், டிம் சௌதி (தலைவர்), டொட் எஸ்ட்ல், செத் ரென்ஸ்

ஆடுகளம் மற்றும் காலநிலை 

பல்லேகலை காலநிலையை பொருத்தவரை மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஆடுகளமானது கடந்த இரண்டு போட்டிகளை போன்று துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருப்பதுடன், சுழல் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<