மூன்றாவது T20I போட்டியிலிருந்து நீக்கப்பட்டார் கப்டில்

71

நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவருக்கு பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹெமிஷ் ரதபோர்ட் நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

“மனதளவில் சக்திமிக்கவர்களாக நாம் மாறவேண்டும்” – டிக்வெல்ல

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் சக்தி ….

இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில், இரண்டு போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், நியூசிலாந்து அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. தொடரை நியூசிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றியிருந்தாலும், வீரர்களின் உபாதை அந்த அணிக்கு சவாலை ஏற்படுத்தியிருக்கிறது.

அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லொக்கி பேர்கஸன் தொடருக்கு முன்னரே உபாதைக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், அவர் தொடரிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார். 

இதன் பின்னர், முதல் T20I போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்த அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர், இடுப்பில் ஏற்பட்டிருக்கும் உபாதை காரணமாக இரண்டாவது T20I போட்டியில் விளையாடவில்லை. எனினும், அவரது உபாதை தற்போது குணமாகியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

“மனதளவில் சக்திமிக்கவர்களாக நாம் மாறவேண்டும்” – டிக்வெல்ல

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் சக்தி ……….

இந்தநிலையில், இரண்டாவது போட்டியில் ரொஸ் டெய்லருக்கு பதிலாக களமிறங்கியிருந்த டொம் ப்ரூஸ் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் ஆகியோர் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தனர். இதில், சிறப்பாக ஆடி அரைச் சதம் கடந்த பின்னர், முழங்கால் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த டொம் ப்ரூஸ் தற்போதும் வைத்தியர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது உபாதை குறித்த மேலதிக தகவல்கள் எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இரண்டாவது T20I போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடும் போது உபாதைக்குள்ளாகிய மார்டின் கப்டில் இறுதி T20I போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது வயிற்று தசைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் மைதானத்திலிருந்து வெளியேறியதுடன், துடுப்பெடுத்தாடவும் களமிறங்கவில்லை. இவரது உபாதையானது குணமாகாத நிலையில், அவர் மூன்றாவது போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்திடம் டி20 தொடரை இழந்தது இலங்கை

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை …….

மார்டின் கப்டில் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக புதிய ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஹெமிஷ் ரதபோர்ட் அழைக்கப்பட்டுள்ளார். 30 வயதான இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரதபோர்ட் நியூசிலாந்து அணிக்காக 7 T20I போட்டிகளில் விளையாடி, 151 ஓட்டங்களை பெற்றுள்ளார். இவர், இறுதியாக 2013ம் ஆண்டு பல்லேகலையில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான T20I போட்டியில் நியூசிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை மற்றும் சுற்றுலா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான T20I போட்டி எதிர்வரும் 6ம் திகதி கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<