பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்த ஹேரத்

Bangladesh Cricket Contract

519

பங்களாதேஷ் கிரிக்கெட்டுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் நிராகரித்துள்ளார். 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இருந்த ரங்கன ஹேரத்தின் பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. பின்னர் கடந்த ஜனவரி மாதம், பங்களாதேஷ் கிரிக்கெட்டுடன் மீண்டும் இணைவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் இருந்து ஹேரத்துக்கு அழைப்பு வந்தது. 

ஆனால் இம்முறை ஹேரத்துக்கு அணியின் சுழல்பந்து வீச்சுப் பயிற்சியாளர் பதவி வழங்கப்படவில்லை. மாறாக, அவருக்கு சுழல்பந்து வீச்சு ஆலோசகர் பதவியை வழங்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எதிர்பார்த்தது. 

குறித்த ஆலோசகர் பதவியின் மூலம், வருடத்திற்கு சுமார் 200 நாட்கள் பங்களாதேஷைச் சுற்றிப் பயணித்து, வெவ்வேறு வயதுப் பிரிவு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்கும் பொறுப்பை ஹேரத்திடம் ஒப்படைக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை திட்டமிட்டிருந்தது 

முன்னதாக, இந்த கோரிக்கைக்கு தனது விருப்பத்தை வெளிப்படுத்திய ஹேரத், தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அதற்கு மிக விரைவில் பதில் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். 

எவ்வாறாயினும், நேற்று (03) குறித்த கோரிக்கையை ஹேரத் நிராகரித்ததாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் செயற்பாட்டுக் குழுவின் தலைவர் ஜலால் யூனுஸ் நேற்று இடம்பெற்ற குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

ரங்கன ஹேரத் எங்களுடன் இல்லை, நாங்கள் அவருக்கு வழங்கிய பதவியை அவர் ஏற்கவில்லை. அதனால் அவர் தொடர்ந்து எம்முடன் பணியாற்ற மாட்டார்என்று கூறினார். 

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தற்போதைய நிர்வாகத்தின் பெரும்பாலான பொறுப்புகள் கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை செயல்பட்டு வருகிறது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<