நெய்மர் மீது வழக்குத் தொடுத்த பார்சிலோனாவுக்கு எதிராக முறைப்பாடு

164

அண்மையில் பிரான்ஸின் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துக்கு மிகப் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட, பிரேஸிலின் நட்சத்திர வீரர் நெய்மர் மீது, அவரது முன்னைய கழகமான பார்சிலோனா வழக்குத் தாக்கல் செய்துள்ளது. ஒப்பந்த விதிகளை மீறினார் எனவும், அதற்காக 8.5 மில்லியன் யூரோக்களை (10 மில்லியன் அமெரிக்க டொலர்) அவர் செலுத்த வேண்டுமெனவும் பார்சிலோனா கோரியிருந்தது.

பார்சிலோனாவில் இருந்து விலகியது பணத்துக்காக அல்ல – நெய்மர்

பார்சிலோனா அணியில் இருந்து பாரிஸ் செயின்ட்…

இந்நிலையில் குறித்த விடயத்தில் எந்தவொரு விட்டுக் கொடுப்புக்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என நெய்மர் தரப்பினர் அறிவித்துள்ள நிலையில், அந்த வழக்கை எதிர்த்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் முறையிடடுவதற்கு நெய்மரின் சட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனையடுத்து நெய்மரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்யவுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) இன்று (24) அறிவித்தது.

இதேவேளை, முன்னதாக குறித்த பணத்தை திருப்பி தர வேண்டும் என நெய்மரின் முகவராகச் செயற்படுகின்ற அவரது தந்தையை பார்சிலோனா கழகம் மிரட்டியதாக வெளியான செய்தி தொடர்பிலும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பார்சிலோனா கழகத்திலிருந்து விலகுவதற்கு 9 மாதங்கள் முன்னதாக (கடந்த ஒக்டோபர் மாதம்), 2021ஆம் ஆண்டு வரை பார்சிலோனாவில் நீடிப்பதற்கான புதிய ஒப்பந்தத்தில் நெய்மர் கைச்சாத்திட்டார். இந்நிலையில், ஒப்பந்த சட்ட விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு வழங்கப்பட்ட மேலதிகக் கொடுப்பனவுகளை திருப்பி வழங்க வேண்டுமென, பார்சிலோனா கழகம் கடந்த 22ஆம் திகதி கோரியிருந்தது. குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைத் தொடர்ந்து, மேலதிகமாக 10 சதவீதமான பணமும் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி பார்சிலோனா கழகம் நெய்மருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததுடன், ஸ்பெய்னின் கால்பந்து சம்மேளனத்திலும் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளது. குறித்த பணத்துக்குப் பொறுப்பேற்க நெய்மர் மறுத்துவிட்டால், அதற்கான பொறுப்பை பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகம் எடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அறிக்கையொன்றை வெளியிட்ட நெய்மர் தரப்பினர், இந்த அறிவிப்புத் தொடர்பில் ஆச்சரியமடைவதாகத் தெரிவித்திருந்தனர். அத்தோடு, இவ்விடயத்தில் விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், வழக்கை எதிர்த்துச் செயற்படப் போவதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல், குறித்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகம், பொருத்தமான அனைத்துச் சட்டங்களையும், நெய்மர் பின்பற்றினார் எனவும், பார்சிலோனாவின் நடத்தை குறித்து வருத்தமடைவதாகவும் தெரிவித்தது.  

சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறும் இங்கிலாந்து ஜாம்பவான் ரூனி

இதனையடுத்து பார்சிலோனாவுக்கு எதிராக நெய்மரினால் முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பான விசாரணைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நெய்மரின் முகவராகச் செயற்படுகின்ற அவரது தந்தையை முன்னதாக குறித்த பணத்தை திருப்பி தர வேண்டும் என பார்சிலோனா கழகம் மிரட்டியதாக வெளியான செய்தி தொடர்பிலும் ஆராய சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், இந்த முறைப்பாடு தொடர்பில் பிபாவின் உயர் அதிகாரியொருவர் கருத்து வெளியிடுகையில், குறித்த விசாரணைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நெய்மர் பார்சிலோனா கழகத்திலிருந்து 222 மில்லியன் யூரோக்கள் செலவில், பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்தால் வாங்கப்பட்டார். இதன் மூலம் உலகின் விலை அதிகமான கால்பந்து வீரராகவும் அவர் கணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.