மாலைதீவுகளுடனான போட்டியை தவறவிடும் சுஜான் பெரேரா

AFC Cup 2023

461

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசிய கிண்ண தகுதிகாண் மூன்றாம் சுற்றில் மாலைதீவுகள் அணிக்கு எதிரான தமது கடைசி போட்டியில் விளையாடும் வாய்ப்பை இலங்கை கால்பந்து அணியின் தலைவர் சுஜான் பெரேரா இழந்துள்ளார்.

இந்த தொடரில் கடந்த 8ஆம் திகதி உஸ்பகிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 3-0 எனவும், 11ஆம் திகதி இடம்பெற்ற தாய்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2-0 எனவும் இலங்கை அணி தோல்வி கண்டது.

உஸ்பகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முழுமையாக தடுப்பாட்டத்தை மேற்கொண்ட இலங்கை வீரர்கள் அதிகமான நேரத்தை வீணடித்தமையையும் காணக்கூடியதாக இருந்தது. எனினும், தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் முதல் போட்டியை விட வித்தியாசமான முறையில் ஆடிய இலங்கை வீரர்கள் கோலுக்கான முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

குறித்த இரண்டு போட்டிகளிலும் மிகவும் சிறந்த முறையில் செயற்பட்ட இலங்கை அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான சுஜான் பெரேரா எதிரணிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து மொத்தமாக 10 இற்கும் அதிகமான தடுப்புக்களை மேற்கொண்டார்.

உஸ்பகிஸ்தான் அணியுடனான போட்டியின் முதல் பாதியின் உபாதையீடு நேரத்திலும் தாய்லாந்து அணியுடனான போட்டியின் 66ஆவது நிமிடத்திலும் சுஜான் பெரேராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பல உபாதைகளுடன் தொடர்ந்து விளையாடிய சுஜான் பெரேரா குறித்த இரண்டு போட்டிகளின்போதும் உபாதையடைந்து மருத்துவ உதவியை நாடியவாரே விளையாடினார். எனினும், குறித்த இரண்டு மஞ்சள் அட்டைகளும் சுஜான் நேரத்தை வீணடித்தார் என்பதற்காகவே நடுவரால் காண்பிக்கப்பட்டது.

எனவே, அடுத்து செவ்வாய்க்கிழமை (14) இலங்கை அணி மாலைதீவுகளுடன் மோதவுள்ள போட்டியில் தொடர்ந்து இரண்டு மஞ்சள் அட்டைகளைப் பெற்றுள்ள சுஜானுக்கு விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாலைதீவுகளுடனான போட்டியில் இலங்கை அணியின் மேலதிக கோல் காப்பாளர்களாக உள்ள கவீஷ் பெர்னாண்டோ அல்லது பிரபாத் அறுனசிறி ஆகிய இருவரில் ஒருவர் இலங்கை அணியின் கோல் காப்பாளராக செயற்படுவர்.

எவ்வாறிருப்பினும் கடந்த பல வருடங்களாகவே இலங்கை அணிக்கு சுவாராக இருந்து மிகப் பெரிய பங்கை ஆற்றி வருகின்ற சுஜான் அடுத்த போட்டியில் விளையாடாமை இலங்கை அணிக்கு மிகப் பெரிய இழப்பாக இருக்கும் என்றாலும், மாலைதீவுகளுடன் இலங்கை வீரர்கள் சிறந்த ஒரு ஆட்டத்தையே வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<