இன்று நடைபெற்று முடிந்த, 19 வயதுக்குட்பட்ட இளையோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் மலேசிய அணியுடனான போட்டியில் சுழல்பந்து வீச்சாளர்களின் துணையுடன், அவ்வணியை குறைவான ஓட்டங்களிற்குள் மட்டுப்படுத்தி இலங்கை அணி 8 விக்கெட்டுக்களினால் இலகு வெற்றியை சுவீகரித்தது.

இந்த வெற்றியின்மூலம் இத்தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணிகளில் ஒன்றாக இலங்கை அணி மாறுகின்றது.

மொரட்டுவையில் ஆரம்பமாகிய குழு A இற்கான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் முதலில் மலேசிய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதன்படி, விரான் தீப் சிங் தலைமையில் களமிறங்கிய மலேசிய கனிஷ்ட அணி, 7 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில் தனது முதல் விக்கெட்டினை இலங்கையின் திசாரு ரஷ்மிக்கவின் பந்தில் பறிகொடுத்தது. இதனால், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பாட்லி ஹாரிஸ் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

Photos: Sri Lanka U19s v Malaysia U19s – U19 Youth Asia Cup 2016

Photos of the Sri Lanka U19s v Malaysia U19s – U19 Youth Asia Cup 2016

இதனை அடுத்து மலேசியாவின் இரண்டாவது விக்கெட்டும் புதிதாக வந்த வீரரான, நஸீம் நாஸ்லி ஒரு ஓட்டத்தினை மட்டும் பெற்றிருந்த வேளையில், ரன் அவுட் முறையில் பறிபோனது.

இதனால், குறைந்த வேகத்தில் மலேசிய அணி ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்தது. இவ்வேளையில், தனது சுழல்பந்து வீச்சாளர்களை தேவையறிந்து சரியாக உபயோகப்படுத்திய இலங்கை அணி, அடுத்தடுத்து மலேசிய அணியின் விக்கெட்டுக்களை சரித்தது.

இதன் காரணமாக மலேசிய அணியி, நான்காவது விக்கெட்டுக்கு பிறகு வந்த வீரர்கள் அனைவரும் ஒரு இலக்க ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்து சென்றனர்.

இருப்பினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருரவாக வந்த அய்னுல் ஹக்கீமின் ஆட்டத்தின் காரணமாக மிகவும் குறைவான ஓட்டங்களிற்குள் சரிய இருந்த மலேசிய அணி, நூறு ஓட்டங்களை கடந்து, 38.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களினை பெற்றது.

மலேசிய அணியை பாரிய சரிவில் இருந்து மீட்டெடுத்த, அய்னுல் ஹக்கீம் 41 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

கடந்த போட்டி போன்று, இந்த போட்டியிலும் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்திய இலங்கை அணித் தலைவர் கமிந்து மெண்டிஸ், 5 ஓவர்களை வீசி 10 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.  மலேசிய அணியினை குறைவான ஓட்டங்களிற்குள் மட்டுப்படுத்த உதவிய மற்றைய சுழல் வீரரான அஷன் பண்டாரவும்  3 விக்கெட்டுக்களை இலங்கை கனிஷ்ட  அணி சார்பாக கைப்பற்றினார்.

இதனையடுத்து, வெற்றி அடைய  104 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற களமிறங்கிய இலங்கை அணி, இரண்டாவது ஓவரில் தனது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரை பறிகொடுத்தது. இருப்பினும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விஷ்வ சத்துரங்கவின் அதிரடி அரைச்சத உதவியுடன்,  இலங்கை அணி 18 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 108 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கினை அடைந்தது.

இலங்கை அணிக்கு,  இந்த இலகு வெற்றியினை பெற்றுக் கொடுக்க உதவியிருந்த விஷ்வ சத்துரங்க 55 பந்துகளில் 3 சிக்ஸர்கள்  7 பவுண்டரிகள் உள்ளடங்களாக 68 ஓட்டங்களை பெற்று அணி வெற்றி பெறும்வரை களத்தில் நின்றிருந்தார்.

மலேசிய அணியின் பந்து வீச்சில், இஸ்லாஹ் சோல் மற்றும் விரன் தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

மலேசிய கனிஷ்ட அணி: 104/10 (38.2) – அய்னுல் ஹக்கீம் 41(94), விரன்தீப் சிங் 18, கமிந்து மெண்டிஸ் 10/3(5), அஷன் பண்டார 11/3(5.2)

இலங்கை கனிஷ்ட அணி: 108/2(18) – விஷ்வ சத்துரங்க 68(55)*, அஷன் பண்டார 16(21)*, விரன்தீப் சிங் 30/1(6)

போட்டி முடிவு – இலங்கை 8 விக்கெட்டுக்களால் வெற்றி

இத்தொடரில், இலங்கை கனிஷ்ட அணி மற்றும் இந்திய கனிஷ்ட அணிகள் மோதும் அடுத்த போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.


இந்தியா எதிர் நேபாளம்

கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற குழு  A இற்கான மற்றுமொரு போட்டியில், சுழல்பந்து வீச்சாளர் ராகுல் சகாரின் சிறப்பான 5 விக்கெட்டுக்களினால், இந்தியா நேபாள கனிஷ்ட அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது.

போட்டியின் சுருக்கம்

நேபாள கனிஷ்ட அணி: 172/9 (50) – ரோஹித் குமார் பவ்டேல் 68(93)*, தீபெந்திர சிங் ஐரி 34(62), ராகுல் சகார் 27/5(10)

இந்திய கனிஷ்ட அணி: 174/4 (33.3) – ஹிமான் சுரனா 51(61), சுப்மன் கில் 57(63), பவன் சரப் 43/3(6)

போட்டி முடிவு – இந்தியா 6 விக்கெட்டுக்களால் வெற்றி


பங்களாதேஷ் எதிர் சிங்கப்பூர்

காலியில் இடம்பெற்ற குழு B இற்கான இந்த போட்டியில், சிங்கப்பூர் கனிஷ்ட அணியினை வீழ்த்தி இத்தொடரில் தனது இரண்டாவது வெற்றியினை பங்களாதேஷ் அணி பதிவு செய்து கொள்கின்றது

போட்டியின் சுருக்கம்

சிங்கப்பூர் கனிஷ்ட அணி: 70/10 (25.5) – ரோகன் ரங்கராஜன் 23(38), அப்துல் ஹலீம் 3/21(7), நயீம் ஹஸன்16/3(4.5)

பங்களாதேஷ்  கனிஷ்ட அணி: 71/3 (5) – சயீப் ஹஸன் 33(11), அன்ஸ்பர்கவா 34/2(2)

போட்டி முடிவு – பங்களாதேஷ் 7 விக்கெட்டுக்களால் வெற்றி


பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான்

இன்று மாத்தறை உயன்வத்த மைதானத்தில் இடம்பெற்ற குழு B இற்கான இந்த போட்டியில் பாகிஸ்தான் கனிஷ்ட அணியினை 21 ஓட்டங்களினால் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அதிர்ச்சியளித்தது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் கனிஷ்ட அணி: 273/3 (50) – தர்வீஷ் ரசூலி 92(65)*, தாரிக் ஸ்டானிக்ஸை 59(94), இப்ராஹீம் ஸத்ரான் 51(91), முஹம்மட் ஹஸ்னைன் 52/2(9)

பாகிஸ்தான் கனிஷ்ட அணி: 252/10 (49.1) – அப்துல்லா சபீக் 60(62), சஹீன் அப்ரடி 48(33), சாட்கான் 48(44), ஸஹீர் கான் 21/3(6), முஜீப் 57/2(10)

போட்டி முடிவு – ஆப்கானிஸ்தான் 21 ஓட்டங்களால் வெற்றி

MATCH REPLAY