ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பலமிக்க இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை

Asia Cup 2023

307

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நாளை (17) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே  நடைபெறவுள்ளது.  

முன்னோட்டம் 

ஆசியக் கிண்ண சுபர் 4 சுற்றில் இலங்கை, இந்தியா அணிகள் தலா இரண்டு வெற்றிகள் வீதம் பதிவு செய்திருந்தது அவர்களுக்கு தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினைக் கொடுத்திருக்கின்றது 

இதில் இந்தியா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றியினைப் பதிவு செய்திருந்ததோடு, இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றிகளைப் பதிவு செய்திருந்தது 

த்ரில் வெற்றியுடன் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

இந்திய அணி 

இந்த ஆசியக் கிண்ணத் தொடரின் நடப்புச் சம்பியன்களான இலங்கை அணிக்கு அதிக அழுத்தங்களை உருவாக்கியிருந்த அணியாக இந்தியா காணப்படுகின்றது. இந்திய அணி சுபர் 4 சுற்றில் இலங்கை வீரர்களுக்கு பந்துவீச்சு மூலம் அதிக நெருக்கடியினை உருவாக்கியிருந்தது. இதேவேளை பங்களாதேஷிற்கு எதிரான சுபர் 4 மோதலில் தமது முன்னணி வீரர்களான விராட் கோலி, மொஹமட் சிராஜ் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வினை வழங்கியிருந்தது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியிருந்த நிலையில், இறுதிப் போட்டியில் இந்த வீரர்கள் அணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது 

இந்திய வீரர்களில் அணித்தலைவர் ரோஹிட் சர்மா இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியில் அரைச்சதம் விளாசியிருந்தார். அதேநேரம் ரோஹிட் சர்மா இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பான பதிவுகளை வெளிப்படுத்தியிருக்கின்றார். இது அவர் இறுதிப் போட்டியிலும் இலங்கை அணியுடன் சிறப்பான துடுப்பாட்ட பலமாக இந்திய அணிக்காக அமைவார் என்பதனை வெளிப்படுத்துகின்றது

இலங்கை துடுப்பாட்டத்தை சரி செய்ய வேண்டும் – குமார் சங்கக்கார

இதேநேரம் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரர் விராட் கோலி, சுப்மான் கில் மற்றும் KL ராகுல் ஆகிய வீரர்களும் இலங்கை மோதலில் துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கின்ற முக்கிய வீரர்களாக காணப்படுவர். இவர்கள் தவிர ஹார்திக் பாண்டியா, இஷான் கிஷான் ஆகிய வீரர்களும் இந்திய அணியின் மேலதிக துடுப்பாட்ட பலமாக காணப்படுகின்றனர் 

இந்திய அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் சுழல்பந்துவீச்சு அவ்வணிக்கு மிகப் பிரதான பலமாக காணப்படுகின்றது. இலங்கை அணியுடன் இந்தியா ஏற்கனவே விளையாடியிருந்த போட்டியில் இந்த இரண்டு வீரர்களும் மிகச் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தனர். அதேநேரம் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் மொஹமட் சிராஜ் ஆகிய வீரர்கள் இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர்களாக பலம் தருகின்றனர். 

இந்திய அணியில் இருந்து அக்ஷார் பட்டேல் காயம் காரணமாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் இந்திய அணி அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கும் என நம்பப்படுகின்றது.  

இந்திய எதிர்பார்ப்பு XI 

விராட் கோலி, ரோஹிட் சர்மா (அணித்தலைவர்), சுப்மான் கில், KL ராகுல், இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, மொஹமட் சிராஜ் 

இலங்கை அணி  

இம்முறை ஆசியக் கிண்ணத் தொடரில் இரண்டு தடவைகள் த்ரில் வெற்றிகளைப் பதிவு செய்து நடப்புச் சம்பியனான இலங்கை கிரிக்கெட் அணியானது இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கின்றது. இலங்கை கிரிக்கெட் அணியினைப் பொறுத்தவரை முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாத போதும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியமை அதன் வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது. இந்த நிலையில் கிடைத்திருக்கும் செய்திகள் தசை உபாதை காரணமாக இலங்கை தமது முன்வரிசை சுழல்வீரர்களில் ஒருவரான மகீஷ் தீக்ஷனவினை இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் இழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது மற்றுமொரு இழப்பு என்ற போதிலும் விடயங்களை வெற்றிகரமாக இலங்கை இருக்கும் வீரர்களை கொண்டே முகாமைத்துவம் செய்யும் என நம்பப்படுகின்றது. மகீஷ் தீக்ஷனவின் பிரதியீடாக சஹான் ஆராச்சிகே இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார் 

மே.தீவுகளை வீழ்த்திய இலங்கை இளையோர் அணி!

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினைப் பொறுத்தவரை குசல் ஜனித் பெரேரா மீண்டும் ஆரம்பவீரராக களமிறங்கியிருக்கின்றார். பாகிஸ்தான் மோதலில் குசல் பெரேரா சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றிருந்த போதும் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஒன்றில் ஆட்டமிழந்தது அவரின் திறமையினை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பினை இல்லாமல் செய்திருந்தது 

இதேநேரம் குசல் மெண்டிஸ் இன் துடுப்பாட்டம் முன்னேறியிருப்பது இலங்கை அணிக்கு மற்றுமொரு பலமாகும். ஆசியக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் ஒருவராக குசல் மெண்டிஸ் காணப்படுகின்றார். இதேநேரம் நீண்ட இடைவெளியின் பின்னர் இலங்கை ஒருநாள் குழாத்திற்குள் உள்வாங்கப்பட்ட சதீர சமரவிக்ரமவின் ஆட்டமும் பாராட்டும் விதத்தில் அமைந்திருக்கின்றது 

இலங்கை அணியின் ஏனைய துடுப்பாட்டவீரர்களில் சரித் அசலன்க அடுத்த நம்பிக்கையாக காணப்படுகின்றார். வெற்றி இலக்குகளை விரட்டும் போட்டிகளில் சரித் அசலன்கவின் பதிவுகள் சிறப்பாக காணப்படுகின்றன. எனினும் அணித்தலைவர் தசுன் ஷானக்க, தனன்ஞய டி சில்வா என இருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரியாக உபயோகம் செய்து ஓட்டங்களை குவிக்க வேண்டிய பொறுப்பில் காணப்படுகின்றனர்

இலங்கை அணியின் பந்துவீச்சுத்துறையினை நோக்கும் போது மகீஷ் தீக்ஷனவின் இடத்திற்கு கட்டாய மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட நிர்ப்பந்த நிலை காணப்படுகின்றது. அந்தவகையில் மகீஷ் தீக்ஷனவின் பிரதியீடாக இலங்கை அணிக்குள் துஷான் ஹேமன்த அல்லது சஹான் ஆராச்சிகே உள்ளடக்கப்பட முடியும். சுழல் சகலதுறைவீரரான சஹான் ஆராச்சிகே அண்மையில் நிறைவுக்கு வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் சிறப்பான துடுப்பாட்டம், பந்துவீச்சு என்பவற்றினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

இதேநேரம் ஏனைய வீரர்களில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுத்துறையினை இம்முறை ஆசியக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை (11) எடுத்த பந்துவீச்சாளராக காணப்படும் மதீஷ பதிரனவும், பிரமோத் மதுசானும் பலப்படுத்த முடியும். அதேவேளை இலங்கை அணியின் சுழல்துறைக்கு துனித் வெல்லாலகேவுடன் தனன்ஞய டி சில்வா மேலதிக பலம் சேர்க்கின்றார் 

இலங்கை எதிர்பார்ப்பு XI  

பெதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித்  வெல்லாலகே, துசான் ஹேமன்த/சஹான் ஆராச்சிகே, மதீஷ பதிரன, ப்ரமோத் மதுசான் 

மழையின் தாக்கம் 

இலங்கைஇந்திய அணிகள் இடையே ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் நாளைய நாளில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. எனவே கிரிக்கெட் இரசிகர்களுக்கு முழுமையான போட்டியொன்றினை பார்த்து இரசிக்க கூடியதாக காணப்படும் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<