குசல் பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் சுதந்திர கிண்ண முத்தரப்பு T20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியான ஏழு T20 தோல்விக்கு இலங்கை அணி முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

[rev_slider LOLC]

பச்சை புற்கள் போர்த்தியதாக காணப்பட்ட ஆர். பிரேமதாச மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (6) மின்னொளியில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார். எனினும் முதலில் துடுப்பெடுத்தாடுவது குறித்து கவலை அடையவில்லை என்று நாணய சுழற்சியில் தோற்றபோது, இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா குறிப்பிட்டார்.

இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சுத் துறையை பலம் சேர்க்க துஷ்மந்த சமீர மற்றும் நுவன் பிரதீப் இணைக்கப்பட்டிருந்ததோடு சுழல் பந்து வீச்சாளர்களாக அகில தனஞ்சய மற்றும் ஜீவன் மெண்டிசுடன் திசர பெரேராவும் பந்துவீச்சாளர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்திய அணியில் கே.எல். ராகுல் நீக்கப்பட்டு விஜே சங்கர் சேர்க்கப்பட்டிருந்தார். இடதுகை சுழல் பந்து சகலதுறை வீரரான அக்சர் படேல் இந்தியாவின் கடைசி பதினொருவரில் இருக்கவில்லை.     

சுதந்திர கிண்ண தொடரில் இலங்கை அணியின் வியூகம் குறித்த சந்திமாலின் கருத்து

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்ப இரு ஓவர்களிலேயே அதிர்ச்சி கொடுத்தனர். அணித் தலைவர் ரோஹித் ஷர்மா முதல் ஓவரிலேயே சமீரவின் பந்துக்கு ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை விசிய நுவன் பிரதீப் முதல் வரிசையில் வந்த சுரேஷ் ரெய்னாவை வந்த வேகத்திலேயே ஒரு ஓட்டத்துடன் வெளியேற்றினார்.   

எனினும் மறுமுனையில் ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து பந்துகளை பவுண்டரி எல்லை கோட்டுக்கு வெளியில் செலுத்தினார். மனிஷ் பாண்டேவுடன் சேர்ந்து அவர் 3 ஆவது விக்கெட்டுக்கு 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதன் மூலம் இந்திய அணியின் ஓட்டங்கள் 13 ஓவர்களுக்குள் நூறைத் தாண்டியது.

இதன்போது தவான் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 90 ஓட்டங்களை பெற்றபோது தனுஷ்க குணதிலக்கவின் பந்துக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். தவான் தனது T20 சதத்தை 10 ஓட்டங்களால் தவறவிட்டபோதும் அவர் T20 சர்வதேச கிரிக்கெட்டில் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். முன்னதாக கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக பெற்ற 80 ஓட்டங்களே அவரது அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது.

மனிஷ் பாண்டே 35 பந்துகளில் 37 ஓட்டங்களையும், ரிஷாப் பாண்ட் 23 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை குவித்தது. இலங்கை சார்பில் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக துடுப்பெடுத்தாட முயன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குசல் மெண்டிஸ் 6 பந்துகளில் 11 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததோடு தனுஷ்க குணதிலக்க 12 பந்துகளில் 19 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

எனினும் முன் வரிசையில் வந்த குசல் பெரேரா போட்டியை இலங்கை அணிக்கு சாதகமாக திசை திருப்பினார். முகம்கொடுத்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் விளாசிய அவர், ஷர்துல் தாகூர் வீசிய மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசி எதிரணியை திக்குமுக்காடச் செய்தார். இந்த ஓவரில் அவர் மொத்தமாக 26 ஓட்டங்களைக் குவித்தார்.

தொடர்ந்தும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டிய குசல் பெரேரா 22 பந்துகளில் தனது 8ஆவது T20 அரைச்சதத்தை பெற்றார்.

இதன் போது இலங்கை அணி பவர் பிளே ஓவர்களில் மாத்திரம் 75 ஓட்டங்களை குவித்தது. பவர் பிளே ஓவர்களில் இலங்கை பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவென்பதோடு, பவர் பிளே ஓவர்களில் இந்திய அணி கொடுத்த இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களும் இதுவாகும்.

எனினும் குசல் பெரேரா 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 66 ஓட்டங்களுடன் ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியபோது இலங்கை அணி சற்று பின்னடைவை சந்தித்தது.

எமது எதிர்கால திட்டத்தில் மாலிங்கவுக்கு இடமுண்டு – ஹத்துருசிங்க

எனினும் போதிய ஓட்டவேகம் இருந்ததால் பிந்திய ஓவர்களில் இலங்கை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் அதனால் சமாளிக்க முடிந்தது. குறிப்பாக அண்மைக் காலத்தில் தொடர்ச்சியாக சோபித்து வரும் திசர பெரேரா கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி இலங்கை அணியை வெற்றிவரை அழைத்துச் சென்றார். 10 பந்துகளுக்கு முகம் கொடுத்த திசர பெரேரா ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களை விளாசினார்.

இதன் மூலம் இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 175 ஓட்டங்களை அடைந்தது. ஆர். பிரேமதாச அரங்கில் இரண்டாவதாக துடுப்பாடி பெறப்பட்ட அதிகூடிய வெற்றி இலக்கு இதுவாகும். இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி பெற்ற 173 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.   

தனது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு வழங்கிய நிலையில் இலங்கை வந்திருக்கும் இந்திய அணிக்கு வொஷிங்கடன் சுந்தர் மற்றும் யுஸ்வேந்திரா சாஹா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை அணியின் வெற்றிக்கு தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உதவிய குசல் பெரேரா போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த வெற்றியுடன் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20 தொடரின் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்து இலங்கை அணி மார்ச் மாதம் 10ஆம் திகதி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.     

ஸ்கோர் விபரம்