சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டு இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 410 ஓட்டங்களினை நிர்ணயம் செய்துள்ளது.
டெல்லி பெரோஸ் ஷாஹ் கோட்லா மைதானத்தில் தொடங்கியிருந்த போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின் போது முதல் இன்னிங்சில் துடுப்பாடியிருந்த இலங்கை அணி 130 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களுடன் காணப்பட்டது.
அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 147 ஓட்டங்களுடனும், லக்ஷான் சந்தகன் ஓட்டமேதுமின்றியும் களத்தில் நின்றனர்.
இலங்கை அணிக்காக போராட்ட சதங்களை குவித்த சந்திமால், மெதிவ்ஸ்
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய…
இந்திய அணியினை விட முதல் இன்னிங்சில் 180 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை அணிக்கு ஒரு விக்கெட் மாத்திரமே எஞ்சிக் காணப்பட்டதால் போட்டியின் இன்றைய நான்காம் நாளில் நீண்ட நேரம் தமது இறுதி விக்கெட்டினை பாதுகாக்க முடியவில்லை.
இன்று கிட்டத்தட்ட 23 நிமிடங்கள் வரையில் துடுப்பாடியிருந்த இலங்கை அணி 135.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 373 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சில் குவித்துக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தினேஷ் சந்திமால் 361 பந்துகளினை எதிர்கொண்டு 21 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 164 ஓட்டங்களினைப் பெற்று, டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த இன்னிங்சினை பதிவு செய்து கொண்டார்.
இந்திய அணியின் பந்து வீச்சில் இஷாந்த் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதமும் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து இலங்கை அணியினை விட 163 ஓட்டங்கள் முன்னிலை அடைந்திருந்த இந்தியா இதோடு சேர்த்து சவலான வெற்றி இலக்கொன்றினை இலங்கை அணிக்கு நிர்ணயிக்கும் நோக்கோடு தமது இரண்டாம் இன்னிங்சினை தொடங்கியது.
விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைக்காமல் வீடு திரும்பிய இலங்கை வீரர்கள்
இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்சில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான முரளி விஜய் வெறும் 9 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். அதோடு மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்த அஜிங்கிய ரஹானேவும் சோபிக்கவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே மொத்தமாக 5 இன்னிங்சுகளில் விளையாடி 17 ஓட்டங்களை மாத்திரமே குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இன்னிங்சின் ஆரம்பத்தில் இந்தியா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து சிறிது தடுமாறியிருந்த போதிலும் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான சிக்கர் தவான், விராத் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் பெறுமதிமிக்க அரைச்சதங்களோடு போட்டியின் தேநீர் இடைவேளையின் பின்னர் இந்தியா 52.2 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் சிக்கர் தவான் தனது ஐந்தாவது டெஸ்ட் அரைச் சதத்தோடு 67 ஓட்டங்களினையும், அணித்தலைவர் விராத் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 50 ஓட்டங்கள் வீதமும் பெற்றிருந்தனர்.
விராத் கோஹ்லி இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் மொத்தமாக பெற்றுக்கொண்ட 293 ஓட்டங்களின் மூலம், அணித்தலைவர் ஒருவராக இந்திய அணி சார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் அதிக ஓட்டங்கள் பெற்றவராக தன்னை பதிவு செய்து கொண்டார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால், லஹிரு கமகே , தில்ருவான் பெரேரா, லக்ஷான் சந்தகன் மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகிய வீரர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இளம் தலைமுறைக்கான இலங்கை வந்த யுவ்ராஜ் சிங்
தெற்காசிய இளம் பருவத்தினரின் எதிர்காலத்தை…
இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்சினை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 410 ஓட்டங்களினைப் பெற பதிலுக்கு இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை அணி, போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மையினால் கைவிடப்படும் போது 16 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 31 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது.
வெற்றி இலக்கினை அடைய இலங்கை அணிக்கு இன்னும் 379 ஓட்டங்கள் தேவைப்பட களத்தில் தனன்ஞய டி சில்வா 13 ஓட்டங்களுடனும், அஞ்செலோ மெதிவ்ஸ் ஓட்டமேதுமின்றியும் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்சில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்திருந்த திமுத் கருணாரத்ன (13) மற்றும் சதீர சமரவிக்ரம (8) ஆகியோர் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வண்ணம் மைதானத்தினை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு இந்த இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா இரண்டு துரித விக்கெட்டுக்களை பதம்பார்த்து வலுவளித்திருந்தார்.
போட்டியின் இறுதி மற்றும் ஐந்தாவது நாள் நாளை தொடரும்