தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 5 தேசிய சாதனைகள்

99th National Athletics Championship – 2021

112

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயம் ஞாயிற்றுக்கிழமை (31) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் ஐந்து இலங்கை சாதனைகளும், 3 போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

இதில் பெண்களுக்கான 1,500 மற்றும் 5,000 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் கயன்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனை படைக்க, பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சச்சினி பெரேரா, பெண்களுக்கான நீளம் பாய்தலில் சாரங்கி சில்வா மற்றும் ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் ரொஷான் தம்மிக ஆகியோர் புதிய இலங்கை சாதனைகள் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

>> கோலூன்றிப் பாய்தல் சம்பியனை வீழ்த்தி தங்கம் வென்ற புவிதரன்

இதில் சச்சினி பெரேரா, சாரங்கி சில்வா ஆகிய இருவரும் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனைகளை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இவர்களுடன், ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் சமித் மதுஷங்க போட்டி சாதனையொன்றை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.

கயந்திகாவின் இரட்டை சாதனை

இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர் வீராங்கனைகளில் ஒருவரான கயந்திகா அபேரத்ன, தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் இரண்டு இலங்கை சாதனைகளை முறியடித்தார்.

இதில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியை 4 நிமிடம் 09.12 செக்கன்களில் நிறைவுசெய்த கயன்திகா, புதிய இலங்கை சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் நிமாலி லியனாராச்சி 4 நிமிடம் 15.86 செக்கன்களில் குறித்த போட்டியை நிறைவுசெய்து தேசிய சாதனை படைத்திருந்தார்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற பெண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் கயன்திகா புதிய இலங்கை சாதனை படைத்தார். போட்டியை அவர் 15 நிமிடங்கள் 55.84 செக்கன்களில் கடந்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இலங்கையின் மெய்வல்லுனர் வரலாற்றில் 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்களுக்குள் ஓடிமுடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதற்கு முன்னர் 2020இல் ஹிருனி விஜேரத்ன, குறித்த தூரத்தை 16 நிமிடங்கள் 17.51 செக்கன்களில் நிறைவுசெய்து இலங்கை சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

24 ஆண்டுகால சாதனையை தகர்த்த ரொஷான்

சனிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஒட்டப் போட்டியில் பங்குகொண்ட ரொஷான் தம்மிக, 24 வருடங்கள் பழமையான இலங்கை சாதனையை இரண்டு தடவைகள் முறியடித்து சாதனை படைத்தார்.

சனிக்கிழமை காலை நடைபெற்ற 110 மீட்டர் சட்டவேலி ஒட்டத்தின் தகுதிச்சுற்றுப் போட்டியை 13.97 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய இலங்கை சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், அதே தினத்தன்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியை 13.89 செக்கன்களில் நிறைவுசெய்து தனது சொந்த இலங்கை சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக 1997இல் மலேஷிய திறந்த மெய்வல்லுனர் தொடரில் மகேஷ் பெரேரா நிலைநாட்டிய (14.00 செக்.) சாதனையை 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரொஷான் தம்மிக்க முறியடித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சொந்த சாதனையை முறியடித்த சச்சினி

கோலூன்றிப் பாய்தலில் நடப்பு இலங்கை சம்பியனான சச்சினி பெரேரா தங்கப் பதகத்தை வென்று அசத்தினார். குறித்த போட்டியில் 3.57 மீட்டர் உயரத்தைத் தாவிய அவர், தனது சொந்த இலங்கை சாதனையை புதுப்பித்தார்.

இறுதியாக அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 3.56 மீட்டர் உயரத்தைத் தாவி இலங்கை சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குறித்த போட்டியில் பங்குகொண்ட இலங்கை கடற்படை வீராங்கனை இமாஷா உதானி சில்வா (3.50 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும், யாழ். சாவகச்சேரி கல்லூரியின் முன்னாள் மாணவி என். டக்சிதா (3.40 மீட்டர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

சாரங்கியின் நீளம் பாய்தல் சாதனை

பெண்களுக்கான நீளம் பாய்தலில் தெற்காசிய சம்பியனான சாரங்கி சில்வா, இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.48 மீட்டர் தூரம் பாய்ந்து தனது சொந்த தேசிய சாதனையை 4 சென்றிமீட்டரினால் முறியடித்தார்.

முன்னதாக அவர் கடந்த ஆண்டு 6.44 மீட்டர் தூரம் பாய்ந்து இலங்கை சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனையையும் அவர் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, குறித்த போட்டியில் அஞ்சானி புலவன்ச (6.15 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும், எஸ் உபேக்ஷா (5.90 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

குண்டெறிதலில் சமித் அபாரம்

குண்டெறிதல் தேசிய சம்பியனான சமித் மதுஷங்க, ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஆண்களுக்கான குண்டெறிதலில் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் 17.36 மீட்டர் தூரத்தை வீசிய அவர், புதிய தேசிய சம்பியன்ஷிப் சாதனையை நிகழ்த்தினார்.

குறித்த போட்டியில் பங்குகொண்ட கிழக்கு மாகாண வீரர் இஸட்.ரி.எம் ஆஷிக், 13.96 மீட்டர் தூரம் எறிந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<