கிரிக்கெட் உலகை ஆளும் லீக் தொடர்கள்

228
Various T20 Leagues played around the Globe

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அடுத்த ஆண்டின் நடுப் பகுதியில் லங்கா T10 லீக் தொடர் என்னும் பெயரில் அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஒன்றினை ஒழுங்க செய்யவிருக்கின்றது.

அபுதாபி T10 லீக்கினை பங்காளர்களாக கொண்டுள்ள இந்த T10 லீக் கிரிக்கெட் தொடரில் ஆறு அணிகள் பங்கெடுக்கும் எனக் கூறப்பட்டிருப்பதோடு, மகளிர் கிரிக்கெட் அணிகளுக்காகவும் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> முதன்முறையாக வெளிநாட்டு லீக்கில் விளையாடவுள்ள வியாஸ்காந்த்!

இந்த விடயம் குறுகிய ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் (Short Format) தற்போது கிரிக்கெட் உலகினை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதனை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது.

ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவம் கொண்ட அனைத்து நாடுகளும் தங்களுக்கென பிரத்தியேக கிரிக்கெட் லீக்குகளை தற்போது வைத்திருக்கின்றன. இந்த லீக் கிரிக்கெட் போட்டிகள் T20, T10 மற்றும் ஹன்ட்ரட் என பல்வேறு வடிவங்களிலும் காணப்படுகின்றன.

T20 லீக்குகள்

இலங்கையில் நடைபெறுகின்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடர் இந்த ஆண்டு வெற்றிகரமாக அதன் மூன்றாவது பருவத்தினை நிறைவு செய்திருக்கின்றது. ஆனால் லங்கா பிரீமியர் லீக் போன்று வெவ்வேறு நாடுகளும் தமக்கென கொண்டிருக்கும் கிரிக்கெட் தொடர்களை நோக்குவோம்.

நாடுகள் பிரதான தொடர் காலப்பகுதி நடப்புச் சம்பியன்
அவுஸ்திரேலியா பிக் பேஷ் லீக் 2011-இன்றுவரை பேர்த் ஸ்கோச்சர்ஸ்
பங்களாதேஷ் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) 2012-2020 கொமில்லா விக்டோரியன்ஸ்
இங்கிலாந்து T20 பிளாஸ்ட் 2003 – இன்றுவரை ஹம்ப்ஷயர் ஹோக்ஸ்
அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து யூரோ T20 ஸ்லேம்

(Euro T20 Slam)

இந்தியா இந்தியன் பிரீமியர் லீக் 2008- இன்றுவரை குஜராத் டைடன்ஸ்
நியூசிலாந்து சுபர் ஸ்மேஷ் 2005- இன்றுவரை நொதர்ன் பிரேவ்
பாகிஸ்தான் பாகிஸ்தான் சுபர் லீக் 2016- இன்றுவரை லாஹூர் கலந்தர்ஸ்
தென்னாபிரிக்கா SA20 2023 தொடக்கம்
இலங்கை லங்கா பிரீமியர் லீக் 2020-இன்றுவரை ஜப்னா கிங்ஸ்
நேபாளம் நேபாள் T20 லீக்
ஐக்கிய அரபு இராச்சியம் ILT20 2023 தொடக்கம்
மேற்கிந்திய தீவுகள் கரீபியன் பிரீமியர் லீக் 2013-இன்றுவரை ஜமைக்கா தலாவாஸ்
ஐக்கிய அமெரிக்கா மேஜர் லீக் கிரிக்கெட் 2023 தொடக்கம்

*மேற்குறிப்பிட்ட அனைத்து தொடர்களுக்கும் ஐ.சி.சி. இன் T20 போட்டிகளுக்கான அந்தஸ்து காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட தொடர்களுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாடுகளும் வேறு T20 தொடர்களையும் நடாத்துகின்றன. இதற்கு எடுத்துக் காட்டாக அதிக சனத் தொகை கொண்ட இந்தியா தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL), கர்நாடக பிரிமீயர் லீக் (KPL) போன்ற தமது மாநிலங்களுக்கான பிரத்தியேக T20 தொடர்களையும் நடாத்துகின்றது.

இதேநேரம், இந்த லீக் கிரிக்கெட் தொடர்களின் வளர்ச்சி கிரிக்கெட் எதிர்பார்த்த அளவு பிரபலமாகாத வட அமெரிக்காவிலும் T20 கிரிக்கெட் விளையாடப்படுவதற்கான ஒரு சாதக நிலைமையினைத் தோற்றுவித்திருப்பதோடு, முதன் முறையாக அடுத்த ஆண்டில் இருந்து அங்கே மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) என்னும் பெயரிலான கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கின்றது.

T10 லீக்குகள்

கால்பந்து போட்டிகளை ஒத்தவிதத்தில் கிரிக்கெட் போட்டிகளை 90 நிமிடங்களுக்குள் நடாத்தி முடிப்பதற்கென அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வகை கிரிக்கெட்டாக அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் காணப்படுகின்றன. இந்த கிரிக்கெட் போட்டிகள் இன்னும் பரீட்சார்த்த நிலையிலையே காணப்படுகின்ற போதும் பலரது விருப்பத்திற்குரிய கிரிக்கெட் தொடராக மாறியிருக்கின்றது என்பதில் சந்தேகம் கிடையாது. இந்த தொடரின் விதிகளும் தற்போது பரீட்சார்த்த நிலையிலையே காணப்படுகின்றன. தற்போதைய கிரிக்கெட் உலகில் விளையாடப்படும் T10 கிரிக்கெட் தொடர்களை நோக்குவோம்.

நாடுகள்/பிராந்தியம் பிரதான தொடர் காலப்பகுதி நடப்புச் சம்பியன்
ஐக்கிய அரபு இராச்சியம் அபுதாபி T10 லீக் 2017-இன்றுவரை டெக்கான் கிளேடியேட்டர்ஸ்
ஐரோப்பா ஐரோப்பியன் கிரிக்கெட் லீக் 2019-இன்றுவரை பாக் I கேர் படலோனா
இலங்கை லங்கா T10 லீக் 2023 தொடக்கம்
மேற்கிந்திய தீவுகள் The 6ixty 2022-இன்றுவரை சென். கிட்ஸ் & நெவில் பேட்ரியட்ஸ்
ஜிம்பாப்வே Zim Afro T10 2023 தொடக்கம்

>> மூன்றாவது முறையாக தொடர்ந்தும் LPL சம்பியனான ஜப்னா கிங்ஸ்

த ஹன்ட்ரட்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட “த ஹன்ட்ரட்” கிரக்கெட் தொடரானது அணிக்கு 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடராகும். வித்தியாசமான விதிமுறைகள் கொண்டு காணப்படுகின்ற இந்த கிரிக்கெட் தொடர் தற்போது ஆடவர், மகளிர் அணிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டு தற்போது இரண்டு பருவங்களை கடந்திருக்கின்றது. “த ஹன்ரட்” ஆடவர் தொடரின் நடப்புச் சம்பியன்களாக ட்ரென்ட் ரொக்கட்ஸ் அணியும், மகளிர் தொடர் நடப்புச் சம்பியன்களாக ”சௌத்தர்ன் பிரேவ்” அணியும் காணப்படுகின்றன.

லீக் கிரிக்கெட் போட்டிகள் மூலமான நன்மைகள்

குறுகிய ஓவர்கள் கொண்ட லீக் கிரிக்கெட் போட்டிகள் விரைகதியில் இடம்பெறுவதன் காரணமாக இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அதிக உடல்வலு கொண்டு இருக்க வேண்டிய கட்டாய நிலைமை ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கின்றது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்களுக்கு எப்போதும் தங்களது உடற்தகுதியினை (Fitness) சிறந்த நிலையில் பேண வேண்டியதன் அத்தியாவசிய நிலைமை காணப்படுகின்றது. எனவே T20 அடங்கலான லீக் கிரிக்கெட் போட்டிகள் வீரர்களின் உடற்தகுதிக்கு கிடைத்த ஊக்கமாக பார்க்கப்படுகின்றது.

>> சுபர் கிங்ஸ் அணியிலிருந்து விலகும் ஹெரி புரூக்!

மறுமுனையில் லீக் கிரிக்கெட் தொடர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த ஊதியம் வழங்கும் கிரிக்கெட் தொடர்களாகவும் காணப்படுகின்றன. இதன் காரணமாக நிறைய கிரிக்கெட் வீரர்கள் தொழில்முறையில் கிரிக்கெட் விளையாட்டினை தெரிவு செய்வதற்கான நிலைமையொன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் லீக் கிரிக்கெட் தொடர்கள் பணம் கொழிப்பவையாக இருப்பதனால் கிரிக்கெட் சபைகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மேலதிகமாக வருவாய் ஈட்டும் வழியொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகள் குறுகிய நேர இடைவெளியில் நடைபெறுவதன் காரணமாக அதிக விறுவிறுப்பு கொண்டதாகவும், உடனடியாக முடிவுகளை தெரிந்து கொள்ளக் கூடிய போட்டிகளாகவும் அமைகின்றன.

விமர்சனங்கள்

குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகள், கிரிக்கெட்டின் தூய வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு வீரர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை இல்லாமல் செய்வதாக கூறப்படுகின்றது. மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் தலைவர்களாக கிளைவ் லொய்ட், மைக்கல் ஹோல்டிங், மற்றும் கார்பீல்ட் சோபர்ஸ் போன்ற ஜாம்பவன்கள் T20 கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட் போட்டிகளை அழிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது என விமர்சனங்களை முன்வைத்திருகின்றனர்.

>> 100ஆவது டெஸ்ட்டில் வரலாற்று சாதனை படைத்த டேவிட் வோர்னர்

T10 போன்ற மிகவும் குறுகிய ஓவர்கள் உடனான போட்டிகள் குறைவான ஓவர்களையே கொண்டிருப்பதனால் வீரர்களின் திறமையினை முழுமையாக நிரூபிப்பதற்கான வாய்ப்புக்களை இல்லாமல் செய்வதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, லீக் தொடர்கள் வருடம் முழுவதும் இடம்பெறுவதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போட்டி அட்டவணைகளை தயாரிப்பதில் கிரிக்கெட் சபைகளுக்கு நெருக்கடி உருவாகின்றது.

அத்துடன் T10 போன்ற கிரிக்கெட் போட்டிகள் அதிகம் பரீட்சிக்கப்படாத காரணத்தினால் அதில் பயன்படுத்தப்படும் விதிமுறைகள் குறித்த கேள்வியும் எழுகின்றது.

இதுதவிர லீக் கிரிக்கெட் போட்டிகளை மையமாக கொண்ட சூதாட்ட நிறுவனங்கள் பலவும் வளர்ச்சி அடைந்திருப்பதன் காரணமாக அதனால் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

>> மேலும் கிரிக்கட் செய்திகளைப் படிக்க <<