பங்களாதேஷ் – இலங்கை மோதல் எப்படி அமையும்?

Asia Cup 2023

273
Asia Cup 2023

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி தமது முதல் போட்டியில் பங்களாதேஷினை எதிர்கொள்கின்றது.

>>ஆசியக் கிண்ணத்தில் கோலோச்சும் இலங்கை வீரர்கள்

குழு B இல் பங்களாதேஷ் இலங்கை அணிகள் காணப்படும் நிலையில், இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஆசியக் கிண்ணப் போட்டி, இலங்கையில் நடைபெறும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியாகவும், குழு B அணிகளுக்கான முதல் போட்டியாகவும் அமைகின்றது. பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி வியாழன் (31) மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவிருக்கின்றது.

இலங்கை அணி

ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெற ஒருநாளுக்கு முன்னதாக மாத்திரமே இலங்கை அணி ஆசியக் கிண்ணத் தொடருக்கான தமது வீரர்கள் குழாத்தினை அறிவித்திருந்தது. குறிப்பாக ஆசியக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் இலங்கை வீரர்கள் வீரர்கள் பலருக்கு ஏற்பட்ட உபாதை இந்த தாமதத்திற்கு காரணமாக அமைந்திருந்தது.

அதிலும் இலங்கை அணியின் எதிர்பார்ப்புமிக்க வீரர்களான வனிந்து ஹஸரங்க, துஷ்மன்த சமீர மற்றும் டில்சான் மதுசங்க போன்ற வீரர்களை இழந்த நிலையிலையே ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இம்முறைக்கான ஆசியக் கிண்ணத் தொடர் ஒருநாள் போட்டிகளாக நடைபெறுகின்றது. ஒருநாள் போட்டிகளாக இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளை நோக்கும் போது இலங்கை அணி மிகச் சிறப்பான பதிவினை வெளிப்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக ஆசியக் கிண்ணத் தொடர்களில் ஆடிய அணிகளில் மிகச் சிறந்த வெற்றி வீதம் (68%) இலங்கை அணியிடமே காணப்படுகின்றது.

இலங்கை அணியின் வீரர் குழாத்தினை நோக்கும் போது அறிவிக்கப்பட்ட வீரர்களில் இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்டத்தினை திமுத் கருணாரட்ன மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகிய வீரர்கள் பலப்படுத்துகின்றனர்.

>>முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் இந்தியாவின் முன்னணி வீரர்!

இந்த வீரர்கள் இருவரும் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் இலங்கை அணிக்கு பலம் வழங்கியிருந்த முன்னணி வீரர்களாக காணப்படுகின்றனர். மறுமுனையில் அதிரடி துடுப்பாட்ட வீரராக காணப்படும் குசல் ஜனித் பெரேரா அணிக்கு மீண்டிருக்கின்றார். இதேவேளை அணித்தலைவர் தசுன் ஷானக்க, சரித் அசலன்க, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா ஆகிய வீரர்கள் இலங்கை அணியின் மேலதிக துடுப்பாட்டப் பலமாக காணப்படுகின்றனர்.

ஆனால் இலங்கை அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது அது முன்னணி வீரர்கள் இல்லாத காரணத்தினால் அனுபவம் குறைந்ததாக கருதப்படுகின்றது. குறிப்பாக LPL தொடர், அதற்கு முன்னர் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் என்பவற்றில் சிறப்பாக செயற்பட்டிருந்த சுழல் சகலதுறைவீரர் வனிந்து ஹஸரங்க ஆசியக் கிண்ணத் தொடரில் ஆடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றார். துஷ்மன்த சமீரவின் சேவையினையும் இலங்கை அணி இழக்கின்றது. இரு வீரர்களும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியுடன் இணைவார்கள் என நம்பப்படுகின்றது.

வனிந்து ஹஸரங்க இல்லாத நிலையில் துஷான் ஹேமன்த மகீஷ் தீக்ஷனவுடன் இணைந்து அணியின் பிரதான மணிக்கட்டு சுழல்வீரராக மாறுகின்றார். இதேநேரம் வேகப்பந்துவீச்சு துறைக்கு பொறுப்பாக பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுசான், மதீஷ பத்திரன மற்றும் கசுன் ராஜித ஆகியோர் காணப்படுகின்றனர்.

எதிர்பார்க்கை இலங்கை குழாம்

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துஷான் ஹேமன்த, மகீஷ் தீக்ஷன, மதீஷ பதிரன, கசுன் ராஜித

பங்களாதேஷ் அணி

ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்க முன்னர் பங்களாதேஷ் அணிக்கு ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்திருந்தது. அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த முன்வரிசை துடுப்பாட்டவீரர் துடுப்பாட்டவீரர் லிடன் தாஸ் காய்ச்சல் காரணமாக ஆசியக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் அணியில் இருந்து விலகியிருக்கின்றார். 2022ஆம் ஆண்டிலிருந்து லிடன் தாஸே பங்களாதேஷ் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக காணப்பட்டிருந்தார். இவரின் பிரதியீட்டு வீரராக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் அனாமுல் ஹக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

>>ஆசியக் கிண்ண பங்களாதேஷ் அணியில் இருந்து வெளியேறிய லிடன் தாஸ்

இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டிகளாக நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே பங்களாதேஷ் வெற்றி பெற்றிருக்கின்றது. எனினும் இந்த தரவுகளை வைத்து பங்களாதேஷ் வீரர்களை குறைவாக மதிப்பிட்டு விட முடியாது.

இறுதியாக இரு அணிகளும் விளையாடிய ஒருநாள் தொடரில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம் பங்களாதேஷ் ஒருநாள் தொடர் ஒன்றினை முதல் தடவையாக இலங்கைக்கு எதிராக கைப்பற்றியிருந்தது. குறிப்பிட்ட தொடரில் அடைந்த தோல்விகளின் விளைவே இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத் தகுதிகாண் சுற்று ஒன்றில் விளையாட காரணமாக அமைந்தது எனவும் கூற முடியும்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினைப் பொறுத்தவரை அதிகம் இளம் வீரர்கள் கொண்ட தொகுதியாக காணப்படுகின்றனர். பங்களாதேஷிற்கு முதன் முறையாக 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத்தினை வென்று கொடுத்த 5 வீரர்கள் ஆசியக் கிண்ண குழாத்தில் காணப்படுகின்றனர். இவர்களோடு அணியின் தலைவர் சகீப் அல் ஹசன் தனது தரப்பினை இரண்டு துறைகளிலும் வலுப்படுத்தக் கூடிய முன்னணி வீரர்களில் ஒருவராக இருக்கின்றார்.

சகீப் அல் ஹசன் தவிர அனுபவமிக்க முஷ்பிகுர் ரஹீம், தௌகீத் ரிதோய் மற்றும் நயீம் ஷேக் ஆகியோர் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்துறைக்கு நம்பிக்கை வழங்க தஸ்கின் அஹ்மட், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் சகலதுறைவீரர் மெஹிதி ஹஸன் ஆகியோர் பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கும் வீரர்களாக காணப்படுகின்றனர்.

எதிர்பார்க்கை குழாம்

தன்ஷிட் தமிம், நயீம் ஷேக், நஷ்முல் ஹொசைன், தௌகீத் ரிதோய், சகீப் அல் ஹசன் (தலைவர்), முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹஸன், மஹேதி ஹஸன், தஸ்கின் அஹ்மட், ஹசன் மஹ்மூட், முஸ்தபிசுர் ரஹ்மான்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<