ஆசியக் கிண்ணத்தில் கோலோச்சும் இலங்கை வீரர்கள்

Asia Cup 2023

259
Asia Cup 2023

மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் புதன்கிழமை (30) ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்துகின்றன.

இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ICC ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பாக நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர், உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் ஆசிய அணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக அமையவுள்ளது.

1984ஆம் ஆண்டு 3 அணிகள் மட்டுமே விளையாடிய ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 1986ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணி இணைந்தது. அதன்பிறகு 2004ஆம் ஆண்டு ஹொங்கொங், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் இணைந்து 6 அணிகள் விளையாடியது.

இந்த நிலையில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகளோடு நேபாளம் அணியும் இந்த ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரில் களமிறங்கவுள்ளது.

>>ஆசிய கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை எடுத்துக் கொண்டால், 1984ஆம் ஆண்டு முதல் இதுவரை 15 முறை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் இந்தியா 7 தடவைகளும் இலங்கை 6 தடவைகளும் பாகிஸ்தான் இரண்டு தடவைகளும் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. நடப்பு சம்பியனாக இலங்கை அணி உள்ளது.

இந்த நிலையில், ஆசியக் கிண்ணத் தொடரின் ஆரம்பம், சம்பியன் பட்டம் வென்ற அணிகள், அதிக ஓட்டங்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் யார்? உள்ளிட்ட விபரங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

முதல் ஆசியக் கிண்ண தொடர்

ஆசிய நாடுகளுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்து நோக்கில் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 1983ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் பேரவை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 1984ஆம் ஆண்டு அங்குரார்ப்பண ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்டது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகள் மட்டுமே பங்கேற்றது. Round Robin முறையில் நடத்தப்பட்ட இந்த தொடரில் 2 போட்டிகளில் வெற்றியீட்டிய இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்றது. இதில் சிறப்பம்சம் என்னவெனில் ICC இன் அங்கத்துவத்தைப் பெற்று புதிய உறுப்பினராக இந்த தொடரில் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தானுக்க எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றதுடன், புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தையும் பிடித்தது.

ஒருநாள் மற்றும் T20 தொடர்கள்

1983ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டித் தொடராக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், T20 உலகக்  கிண்ணத்தை இலக்காகக் கொண்டு 2016ஆம் ஆண்டு முதல் T20 தொடராகவும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2016இல் பங்களாதேஷிலும், 2022இல் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் T20 வடிவத்தில் ஆசியக் கிண்ணம் நடைபெற்றது.

இதுவரை வென்ற அணிகள்

ஆசியக் கிண்ணத் தொடர் இதுவரை 15 தடவைகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியா 6 ஒருநாள் தொடர் மற்றும் ஒரு T20 தொடரில் சம்பியன் பட்டம் வென்று 7 வெற்றிகளுடன் அதிகமுறை சம்பியன் பட்டத்தை வென்ற அணிகள் பட்டியலில முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இலங்கை அணி 6 (5 ஒருநாள் 1 T20) தடவைகள் சம்பியன் பட்டம் வென்று 2ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 2 தடவைகள் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அதிக தடவைகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அணிகள்

ஆசியக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு அதிக தடவைகள் தெரிவாகிய அணியாக இலங்கை முதலிடத்தில் உள்ளது. 10 தடவைகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இலங்கை 6 தடவைகள் தோல்வியை சந்தித்துள்ளது.

அதன் பிறகு இந்தியா (9), பாகிஸ்தான் (4), பங்களாதேஷ (3) ஆகிய அணிகள் உள்ளன. முதல் இரண்டு ஆசியக் கிண்ணத் தொடர்களில் 3 அணிகள் மட்டுமே கலந்து கொண்டதால் அந்த 2 தொடர்களிலும் இறுதிப் போட்டிகள் நடத்தப்படவில்லை. புள்ளிப் பட்டியல் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்த அணிக்கு சம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. 2ஆவது ஆசியக் கிண்ணம் 1986இல் இலங்கையில் நடைபெற்றதுடன், பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

3ஆவது ஆசியக் கிண்ணத் தொடர் 1988இல் பங்களாதேஷில் நடைபெற்றதுடன், 4 அணிகள் பங்குபற்றிய இந்த தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சம்பியனாக மாறியது.

>>WATCH – தொடர் உபாதைகளால் தடுமாறும் நடப்பு சம்பியன் ; ஆசியக்கிண்ணம் நிலைக்குமா? | Asia Cup 2023

இதுவரை நடைபெற்ற நாடுகள்

39 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஆசியக் கிண்ண வரலாற்றில் இந்தியாவிலும் (1993), பாகிஸ்தானிலும் (2008) நடத்தப்பட்டுள்ளன. எஞ்சிய 13 தொடர்களும் ஐக்கிய அரபு இராச்சியம், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மட்டுமே நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு ஆசியக் கிண்ணத்தை நடத்துவதற்கான உரிமத்தை பாகிஸ்தான் கொண்டிருந்த போதிலும், அரசியல் நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 1986இல் நடைபெற்ற 2ஆவது ஆசியக் கிண்ணத்தில் இந்தியாவும், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற 4ஆவது ஆசியக் கிண்ணத்தில் பாகிஸ்தானும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான கிரிக்கெட் உறவு சுமோகமாக இல்லாத நிலையில், 1986ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தை இந்தியா புறக்கணித்தது. இதனால் பங்களாதேஷ் அணி முதல் தடவையாக இணைந்து கொண்டதுடன், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

மறுபுறத்தில் இந்தியாவுடனான அரசியல் உறவில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக 1990-91-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தை பாகிஸ்தான் புறக்கணித்ததுடன், இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் சர்பியன் பட்டத்தை வென்றது.

ஆசியக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் 

ஆசியக் கிண்ண ஒருநாள் தொடரை எடுத்துக் கொண்டால், இலங்கையின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜயசூரிய (1220 ஓட்டங்கள்) அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். இலங்கையின் குமார் சங்கக்கார 1075 ஓட்டங்களுடன் 2ஆவது இடத்திலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 975 ஓட்டங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தானின் சொஹைப் மலிக் நான்காவது இடத்திலும், இந்தியாவின் ரோஹித் சர்மா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, சனத் ஜயசூரிய, குமார் சங்கக்காரவிற்குப் பிறகு ஆசியக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் விராட் கோஹ்லி மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆசியக் கிண்ணத்தில் ஒருநாள், T20 சேர்த்து 4 துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே 1000 ஓட்டங்களைக் கடந்துள்ளனர்.

அதன்படி, சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா ஆகியோர் மட்டுமே ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளனர். ஆசியக் கிண்ணத்தில் இலங்கையின் சனத் ஜயசூரிய (6 சதங்கள்) அதிக சதங்கள் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளார். விராட் கோஹ்லி மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தலா நான்கு சதங்கள் விளாசியிருக்கின்றனர்.

கடந்த 1988ஆம் ஆண்டு நடைபெற்ற 3ஆவது ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியின் மொயின் உல் ஹக் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 105 ஓட்டங்கள் எடுத்ததே ஆசியக் கிண்ணத் தொடரில் எடுக்கப்பட்ட முதல் சதமாகும்.

>>ஆசியக் கிண்ணத்தில் விக்கெட் வேட்டையாடியவர்கள்

ஆசியக் கிண்ணத்தில் அதிக விக்கெட்

ஆசியக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களை பொறுத்தவரை, இலங்கை பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் இலங்கை வீரர்களே இடம்பிடித்துள்ளனர்.

ஆசியக் கிண்ண ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் 33 விக்கெட்டுகளுடன் லசித் மாலிங்க முதலிடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் 30 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தையும், அஜந்த மெண்டிஸ் 26 விக்கெட்டுகளுடன் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதனிடையே, ஆசியக் கிண்ண ஒருநாள் தொடரில் முத்தையா முரளிதரன் 30 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், லசித் மாலிங்க 29 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்திலும், அஜந்த மெண்டிஸ் 26 விக்கெட்டுகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக லசித் மாலிங்க வலம் வருவதுடன், குறித்த பட்டியலில் முதல் 3 இடங்களில் இலங்கை பந்துவீச்சாளர்கள் தான் இருக்கின்றனர்.

அதுமாத்திரமின்றி, கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் அஞ்செலோ மெதிவ்ஸ் 17 விக்கெட்டுகளை எடுத்ததே ஒரு ஆசியக் கிண்ணத் தொடரில் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகளாகும்.

அணிகளின் ஓட்ட எண்ணிக்கை 

கடந்த 2010ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 385 ஓட்டங்கள் குவித்ததே ஆசியக் கிண்ண ஒருநாள் தொடரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். 2000ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணி பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 87 ஓட்டங்கள் தான் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ண T20 தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான எடுத்த 212 ஓட்டங்கள் ஒரு அணியின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். அதே ஆண்டு ஹொங்கொங் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக 38 ஓட்டங்களை எடுத்தது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

எனவே, ஆசியக் கிண்ண வரலாற்றை எடுத்துக் கொண்டால் தனிப்பட்ட வீரர்களின் சாதனைகளை பொறுத்தவரை இலங்கை வீரர்களே கோலோச்சியுள்ளது. இந்த சாதனைகள் இம்முறை ஆசியக் கிண்ணத் தொடரில் முறியடிக்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<