குசல் பெரேரா – தனுஷ்க குணத்திலக்கவின் அபாரத்தோடு நிறைவுற்ற பயிற்சிT20 போட்டி

130
 

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இடையே இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்திருக்கும் பயிற்சி T20 போட்டியில், குசல் பெரேரா தலைமையிலான அணி குசல் மெண்டிஸ் தலைமையிலான அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது. 

சமநிலையில் நிறைவடைந்த பயிற்சி ஒருநாள் மோதல்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகின்றது. 

இந்த கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராகும் வகையில் பயிற்சிப்போட்டிகளில் விளையாடிவரும் இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற பயிற்சி ஒருநாள் போட்டியினைத் தொடர்ந்து, நேற்று (18) பயிற்சி T20 போட்டியில் விளையாடியது. 

குசல் மெண்டிஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகிய இரண்டு வீரர்களின் தலைமையிலான அணிகள் இடையில் நடைபெற்ற இந்த பயிற்சி T20 போட்டி மன்செஸ்டர் நகரில் ஆரம்பமாகியிருந்ததோடு, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குசல் மெண்டிஸின் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. 

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய குசல் மெண்டிஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

பேர்த் ஸ்கோச்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள சாமரி அத்தபத்து

குசல் மெண்டிஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அபாரமாக செயற்பட்ட தனுஷ்க குணத்திலக்க அரைச்சதம் பூர்த்தி செய்து 8 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 52 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பெற்று சதத்தினை வெறும் 2 ஓட்டங்களால் தவற விட்டார். மறுமுனையில், குசல் மெண்டிஸ் 31 பந்துகளுக்கு 42 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

குசல் ஜனித் பெரேரா அணியின் பந்துவீச்சு சார்பில் துஷ்மன்த சமீர, சாமிக்க கருணாரட்ன மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 220 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய குசல் பெரேரா தலைமையிலான அணி, குறித்த வெற்றி இலக்கினை 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 220 ஓட்டங்களுடன் அடைந்தது. குசல் பெரேரா அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த அதன் தலைவர் குசல் பெரேரா அதிரடி ஆட்டத்துடன் வெறும் 50 பந்துகளில் 95 ஓட்டங்களை எடுத்திருக்க, ஒசத பெர்னாந்துவும் 34 பந்துகளுக்கு ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார். 

குசல் மெண்டிஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் பினுர பெர்னாந்து 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி திறமையினை வெளிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் சுருக்கம்

குசல் மெண்டிஸ் XI – 219/4 (20) தனுஷ்க குணத்திலக்க 98(52), குசல் மெண்டிஸ் 42(31), அவிஷ்க பெர்னாந்து 32(16), துஷ்மன்த சமீர 1/18

குசல் பெரேரா XI – 220/3 (19.2) குசல் பெரேரா 95(50), ஒசத பெர்னாந்து 50(34)*,  பினுர பெர்னாந்து 2/34 

முடிவு – குசல் பெரேரரா XI 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<