இலங்கை அணியின் வெற்றிக்கான காரணத்தை கூறிய அவிஷ்க

4545

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை வெற்றிக்கொள்வதற்கு காரணம் அணி வீரர்களிடத்தில் உள்ள ஒற்றுமையும், அணித் தலைவருக்கு வழங்கும் பங்களிப்பும் தான் என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவிஷ்க பெர்னாந்துவின் அதிரடியுடன் ஒருநாள் தொடர் இலங்கை வசம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள்……….

அவிஷ்க பெர்னாண்டோ நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகியிருந்தார். போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அவிஷ்க பெர்னாண்டோ அணியின் வெற்றி தொடர்பில் கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார்.

இலங்கை அணியானது 44 மாதங்களுக்கு பின்னர், சொந்த மண்ணில் வைத்து ஒருநாள் தொடர் ஒன்றை நேற்று கைப்பற்றியிருந்தது. இறுதியாக 2015ம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது. அதனைத் தொடர்ந்து எந்தவொரு இருதரப்பு ஒருநாள் தொடரையும் இலங்கை அணி சொந்த மண்ணில் கைப்பற்றவில்லை.

“ஒவ்வொரு அணிக்கும் கடினமான காலம் வரும். அதன்படி எமக்கு இருந்த கடினமான காலம் தற்போது நிறைவுபெற்றுள்ளது என நினைக்கிறேன். காரணம் வீரர்கள் தற்போது ஒற்றுமையாக விளையாடுகின்றனர். அதுமாத்திரமின்றி அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவுக்கு தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கி வருகின்றனர்”

அவிஷ்க பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் அணி கண்டறிந்துள்ள இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பார்க்கப்படுகிறார். உலகக் கிண்ணத்தில் மிகச்சிறப்பாக ஆடிய இவர், கன்னி சதத்தினை பெற்றிருந்தார். நேற்றைய தினம் சதம் பெறும் வாய்ப்பு இருந்த போதும், அதனை தவறவிட்டது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

“சதம் பெற முடியாமல் போனது கவலையளிக்கிறது. இதுபோன்ற வாய்ப்புகள் அடிக்கடி வருவதில்லை. அதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, அடுத்த தருணங்களில் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவிக்க எதிர்பார்க்கிறேன். என்னிடமிருந்து அணிக்கு தேவை மிகப்பெரிய ஓட்டங்களை பெற்றுக்கொள்வது. அதனை நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்”

இதேவேளை, நேற்றைய போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோ துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த போது, மைதானத்துக்கு வருகைத்தந்த அவருடைய தந்தை திடீர் சுகயீனம் காரணமாக அம்பியூலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,

சாதனைகளின் சொந்தக்காரர் லசித் மாலிங்க

இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் மட்டுமல்லாது…….

“நான் துடுப்பெடுத்தாடும் போது, தந்தைக்கு என்ன நடந்தது என தெரியாது. ஆட்டமிழந்த பின்னர் தான் எனக்கு தெரியவந்தது. எனினும், இப்போது தந்தைக்கு சற்று குணமாகியுள்ளதாக தொலைபேசி அழைப்பு மூலம் அறிந்துக்கொண்டேன்” என்றார். 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி நாளை மறுதினம் (31) ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<