சாதனைகளின் சொந்தக்காரர் லசித் மாலிங்க

429

இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் மட்டுமல்லாது, உலகில் கிரிக்கெட்டை இரசிக்கும் அனைவருக்கும் 26.07.2019 என்கிற திகதி மறக்க முடியாத ஒன்று. ஏனெனில், இந்த திகதியிலேயே இலங்கை அணியின் வேகப்பந்து நட்சத்திரம் லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வினை எடுத்திருந்தார். 

கச்சிதமாய் எழுதப்பட்ட லசித் மாலிங்கவின் பிரியாவிடை

சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஒருநாள்….

இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் பல நினைவுகூறத்தக்க வெற்றிகளை பெற காரணமாக இருந்த லசித் மாலிங்க, தனது 15 வருட ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மேற்குறிப்பிட்ட திகதியில் பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியுடன் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். 

குறித்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியும் வெற்றி ஒன்றுடன் லசித் மாலிங்கவிற்கு சிறந்த பிரியாவிடை ஒன்றை வழங்கியிருந்தது. அதேநேரம், மாலிங்க ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதன் மூலம் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாவது அத்தியாயத்தை நிறைவு செய்து கொள்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், 2010ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினை எடுத்துக் கொண்ட மாலிங்க முதல் அத்தியாயத்தை நிறைவு செய்து கொண்டார்.  

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கும் விடயம், லசித் மாலிங்க 2020ஆம் ஆண்டின் T20 உலகக் கிண்ணம் வரை இலங்கை அணிக்காக T20 சர்வதேச போட்டிகளில் ஆடுவார் எனக் கூறியிருப்பதாகும்.  

லசித் மாலிங்க ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒருநாள் போட்டிகளில் முக்கிய வீரராக அமைந்தமைக்கு காரணமான அவரின் ஒருநாள் போட்டிப் பதிவுகளை நோக்குவோம்

ஒருநாள் போட்டிகளில் கைப்பற்றிய விக்கெட்டுக்கள்

லசித் மாலிங்க ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 338 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். இதன் மூலம் இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ள மாலிங்க, ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் 09ஆவது இடத்தினையும் பெற்றுக் கொள்கின்றார்

இலங்கை அணி வெற்றி ஓட்டத்தினை தொடருமா?

சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை அணிகள்….

இதேநேரம், லசித் மாலிங்க ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக 300 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றிய நான்காவது பந்துவீச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது

உலகக் கிண்ண விக்கெட்டுக்கள் 

இதுவரை நடந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களில் லசித் மாலிங்க மொத்தமாக 56 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். இதன் மூலம் லசித் மாலிங்க உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் காணப்படுகின்றார்

மேலும், நான்கு (2007, 2011, 2015, 2019) உலகக் கிண்ணத் தொடர்களில் ஆடியுள்ள லசித் மாலிங்க ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடர்களிலும் 12 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதனடிப்படையில், மாலிங்க தொடர்ச்சியாக நான்கு உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடி, ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடரிலும் 10 இற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளராக சாதனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

ஆசியக் கிண்ண விக்கெட்டுக்கள்

லசித் மாலிங்க ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 29 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். இதனால், மாலிங்க இதுவரையில் ஒருநாள் போட்டிகளாக இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

லசித் மாலிங்க, இந்த 29 விக்கெட்டுக்களையும் 14 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி கைப்பற்றியிருந்தார். இதேநேரம், ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் 30 விக்கெட்டுக்களுடன் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக இருக்கும் முத்தையா முரளிதரன் குறித்த 30 விக்கெட்டுக்களையும் கைப்பற்ற 24 போட்டிகளில் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளில் ஹட்ரிக்குகள்

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 3 ஹட்ரிக்குகளை பதிவு செய்திருக்கும் லசித் மாலிங்க, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ஹட்ரிக்குகளை கைப்பற்றிய வீரராக ஓய்வு பெற்றுள்ளார். இதேநேரம், மாலிங்க தான் கைப்பற்றிய ஹட்ரிக்குகளில் இரண்டினை உலகக் கிண்ணப் போட்டிகளில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இவர் உலகக் கிண்ணத் தொடர்களில் அதிக ஹட்ரிக்குகள் எடுத்த வீரராகவும் உள்ளார்.

Photos: Lasith Malinga’s Farewell – Special Moments

ThePapare.com | Viraj Kothalawala | 27/07/2019 Editing and re-using images without permission of….

மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஓரே பந்துவீச்சாளராக லசித் மாலிங்கவே இருக்கின்றார். லசித் மாலிங்க, இவ்வாறு 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிகழ்வு 2007ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான குழுநிலை போட்டியில் இடம்பெற்றிருந்தது. அதேநேரம், தென்னாபிரிக்காவிற்கு எதிரான குறித்த போட்டியிலேயே லசித் மாலிங்க ஒருநாள் போட்டிகளில் முதல்தடவையாக ஹட்ரிக் சாதனையினை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

2011 இற்கும் 2014 இற்கும் இடைப்பட்ட ஆண்டுகளின் விக்கெட் நாயகன் 

லசித் மாலிங்க 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 163 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றார். அதன் மூலம் குறித்த காலப்பகுதிக்குள் அதிக ஒருநாள் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக மாலிங்க மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது லசித் மாலிங்கவின் கிரிக்கெட் வாழ்க்கையில் பொற்காலமாக கருதப்படுகின்ற காலப்பகுதியாகும்.

எனினும், 2015 தொடக்கம் 2019 வரையிலான காலப்பகுதிக்குள் சில உபாதைகள் லசித் மாலிங்கவினை சீரான முறையில் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதை இல்லாமல் செய்திருந்தன. மாலிங்க, 2016ஆம் ஆண்டில் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் ஆடாமல் போயிருந்தது குறிப்பிடத்தக்கது

சிறந்த பந்துவீச்சு சராசரி 

லசித் மாலிங்க இலங்கை அணி வெற்றி பெற்ற ஒருநாள் போட்டிகளில் 24.7 என்கிற பந்துவீச்சு சராசரியினை காட்டியிருக்கின்றார். இதன் மூலம் அவர், கிரிக்கெட் அணிகள் வெற்றி பெற்ற ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் சிறந்த பந்துவீச்சு சராசரியினை காட்டிய வீரராக காணப்படுகின்றார்.

“உலகளாவிய ரீதியில் உள்ள சிறுவர்களை ஈர்த்தவர் மாலிங்க” – தமிம்

இலங்கை அணியின் அனுபவ வேகப்…..

5 விக்கெட்டுக்கள் பந்துவீச்சு பிரதி 

லசித் மாலிங்க, ஒருநாள் போட்டிகளில் 8 தடவைகள் ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். இதனால், அவர் ஒருநாள் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்களை அதிக தடவைகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் வரிசையில் ஐந்தாம் இடத்தினை பெற்றுக் கொள்கின்றார். மாலிங்க, தனது 5 விக்கெட்டுக்கள் பந்துவீச்சுப் பிரதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 தடவைகள் ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றி, அவ்வணிக்கு எதிராகவே அதிக தடவைகள் ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாலிங்கவிற்கு விருப்பமான துடுப்பாட்ட வீரர் 

லசித் மாலிங்க தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில், 6 தடவைகள் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷேன் வோட்சனை ஆட்டமிழக்கச் செய்திருக்கின்றார். அந்தவகையில் ஷேன் வோட்சன், மாலிங்க ஒருநாள் போட்டிகளில் அதிக தடவைகள் ஆட்டமிழக்கச் செய்த துடுப்பாட்ட வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இவர்களுக்கு அடுத்ததாக சஹீட் அப்ரிடி, மார்டின் கப்டில் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் லசித் மாலிங்கவினால் ஒருநாள் போட்டிகளில் அதிக தடவைகள் ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட துடுப்பாட்ட வீரர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் லசித் மாலிங்கவினால் 5 தடவைகள் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டுள்ளனர்.

T20 தலைவராக செயற்படுமாறு மாலிங்கவிடம் கோரிய கிரிக்கெட் சபை

இலங்கை அணியின் முன்னணி வேகப்…..

மறக்க வேண்டிய ஒரு பதிவு

லசித் மாலிங்க ஒருநாள் போட்டிகளில், 34 தடவைகள் 60 ஓட்டங்களுக்கு மேல் விட்டுக்கொடுத்திருக்கின்றார். இதுவே, ஒருநாள் போட்டிகளில் வீரர் ஒருவர் அதிக தடவைகள் 60 ஓட்டங்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த சந்தர்ப்பமாகும். அதனால், லசித் மாலிங்கவின் இந்த சாதனை மறக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

துடுப்பாட்டத்தில் மாலிங்கவின் சாதனை 

ஒருநாள் போட்டிகளில் பல பந்துவீச்சு சாதனைகளை புரிந்திருக்கும் மாலிங்க, துடுப்பாட்டத்திலும் தான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் அனைவரும் நினைவு கூறும்படியான ஒரு சாதனையினை செய்துவிட்டே சென்றிருக்கின்றார்

கடந்த 2010ஆம் ஆண்டு மெல்பேர்ன் நகர மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில் 56 ஓட்டங்களை குவித்த லசித் மாலிங்க, குறித்த போட்டியில் 9ஆம் விக்கெட்டுக்காக 132 ஓட்டங்களை அஞ்செலோ மெதிவ்ஸ் உடன் இணைந்து பகிர்ந்திருந்தார். இந்த 132 ஓட்டங்கள் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 9ஆம் விக்கெட்டுக்காக பகிரப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<