சாய் சுதர்சன் அதிரடியில் குஜராத் அணிக்கு 2ஆவது வெற்றி

204
Sai Sudarshan

சாய் சுதர்சனின் பொறுப்பான அரைச் சதத்தால் டெல்லி கெபிடல்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் இம்முறை ஐபிஎல் தொடரில் 2ஆவது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரில் நேற்று (04) நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரித்வி ஷா 7 ஓட்டங்களுடனும், மிட்செல் மார்ஷ் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். நிதானமாக நின்று ஆடிய டேவிட் வோர்னரும் 37 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடர்ந்து வந்த ரீலி ரோசவ் ஓட்டமின்றி முதல் பந்திலேயே டக் அவுட்டானார்.

அறிமுக வீரராக களம் கண்ட அபிஷேக் போரல் 11 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்தில் பொறுப்புடன் நின்று ஆடிய சர்பராஸ் கான் நிதானமாக ஆடி 34 பந்துகளில் 30 ஓட்டங்களை எடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சர்பராஸ் கான் 34 பந்துகளுக்கு 30 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அக்சர் படேல் 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கெபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களை எடுத்தது.

குஜராத் அணிதரப்பில் ரஷித் கான் 4 ஓவர்கள் பந்து வீசி 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

163 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரரம்ப வீரர்களான சுப்மன் கில் மற்றும் ரிதிமான் சஹா ஆகிய இருவருமே தலா 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் ஹர்திக் பாண்டியாவும் 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, பவர்ப்ளேயிலேயே 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து குஜராத் டைட்டன்ஸ் அணி தடுமாறியது.

அதன்பின்னர் சாய் சுதர்சன் – விஜய் சங்கர் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி 4ஆவது விக்கெட்டுக்கு 53 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். எவ்வாறாயினும், விஜய் சங்கர் 29 ஓட்டங்களை எடுத்து மிட்செல் மார்ஷின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் அரைச் சதம் அடிக்க, அவருடன் 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 31 ஓட்டங்களை எடுக்க, 18ஆவது ஓவரில் குஜராத் அணி வெற்றியிலக்கை அடைந்தது.

தமிழக வீரர் சாய் சுதர்சன் 62 ஓட்டங்களைக் குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுக்க, 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது டெல்லி தரப்பில் அன்றிச் நோர்க்கியா 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

இம்முறை ஐபிஎல் தொடரில் நடப்புச் சம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 2ஆவது நேரடி வெற்றியைப் பதிவுசெய்ய, டெல்லி கெபிடல்ஸ் அணி தொடர்ச்சியாக 2ஆவது தோல்வியை பதிவு செய்துள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<