உலகக் கிண்ணத்தில் 23 வருட பதிவை மாற்றுமா இலங்கை – ஆஸி மோதல்?

4577

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 20வது லீக் போட்டி நாளைய தினம் (15) லண்டன் – கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இம்முறை உலகக் கிண்ணத் தொடரை பொருத்தவரை சீரற்ற காலநிலை காரணமாக போட்டிகளின் முடிவுகள் திசைமாறிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இலங்கை அணியின் கடைசி இரண்டு போட்டிகளிலும் முடிவு கிட்டவில்லை. முடிவு கிட்டவில்லை என்பது ஒரு செய்தியாக இருந்தாலும், இலங்கை அணி இறுதியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பின்னர், மைதானத்தில் களமிறங்கி இதுவரை விளையாடவில்லை என்பது அணிக்கு சவாலை ஏற்படுத்தும் மற்றுமொரு விடயமாக மாறியுள்ளது.

உபாதைக்குள்ளான நுவான் பிரதீப்பின் தற்போதைய நிலை

உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய ……..

அவுஸ்திரேலிய அணி போன்ற சவாலான அணியொன்றை இலங்கை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், இவ்வாறான இடைவெளி அணியின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான உத்வேகத்தை அளிக்குமா? அல்ல அதிகமான போட்டி பயிற்சிகள் இல்லாததால் பின்னடைவாக அமையுமா? என்பது அனைவரிடத்திலும் கேள்வியாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அது ஒருபுறம் இருக்க, தங்களுடைய 9 போட்டிகளில் 4 போட்டிகளுக்கான முடிவை எட்டியுள்ள இலங்கை அணி, மீதமுள்ள போட்டிகளில் எத்தனை வெற்றிகளை பெற்றால் அரையிறுதிக்கு தகுதிபெற முடியும் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. எப்படியும் இனிவரும் 5 போட்டிகளில் இலங்கை அணி நிச்சயமாக 3 போட்டிகளில் வெற்றிபெற்றால் மாத்திரமே அரையிறுதிக்கான வாய்ப்பை ஓரளவேனும் தக்கவைக்க முடியும். காரணம், அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போதே 6 புள்ளிகளை கடந்து விட்டன.

இப்படி, ஏனைய அணிகள் முன்னேற்றத்தை சந்தித்திருக்கும் போது, இலங்கை அணி அடுத்தடுத்த வெற்றிகளின் மீது அதீத கவனத்துடன் விளையாட வேண்டிய கட்டயாத்தில் உள்ளது. அதிலும், அடுத்தடுத்த போட்டிகளில் பலமான அணிகளை சந்திக்கவுள்ள இலங்கை அணிக்கு முன்னால் மிகப்பெரிய சவால் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

தங்களுடைய பந்துவீச்சு பக்கத்தினை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி ஓரளவு சரிசெய்துள்ள போதும், துடுப்பாட்டம் தான் கேள்விக்குறியாக அமைந்துள்ளது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை பொருத்தவரை ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்கின்றனர்.  மத்தியவரிசை வீரர்கள் அடுத்தப் போட்டிகளில் கட்டயாம் எழுச்சியை பெறவேண்டும் என்ற நிலை உள்ளது.

இந்த எழுச்சியை அனுபவ துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோருடன் இணைந்து குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.

இவ்வாறு, இலங்கை அணியின் பக்கம் சிக்கல்கள் இருந்தாலும், அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரை நான்கு போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று திடமான நிலையில் உள்ளது. குறிப்பாக ஆஸி. அணிக்கு டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் மீள்வருகை மேலும் பலத்தினை அளித்துள்ளது.

Photos : CWC19 – Sri Lanka training session ahead of Australia match

குறித்த இருவரும் நீண்ட நாட்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பினாலும், அவர்களது துடுப்பாட்டத் திறமை மிகச்சிறப்பாக உள்ளது. அவர்களின் துடுப்பாட்டத்துடன், உஸ்மான் காவாஜா, கிளேன் மெக்ஸ்வேல் மற்றும் அணித் தலைவர் ஆரோன் பின்ச் என்ற பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ள ஆஸி. அணியில் பந்துவீச்சாளர்களுக்கும் குறைவில்லை. கடந்த காலங்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறி வரும் நிலையில், மிச்சல் ஸ்டார்க், நெதன் குல்டர்-நெயில், கேன் ரிச்சட்சன் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோரின் வேகம் அதிக சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஆனால், அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ள கென்னிங்டன் ஓவல் மைதானம் இலங்கை அணிக்கு சற்று எதிர்பார்ப்பை வழங்கக்கூடிய மைதானமாக அமைந்திருக்கிறது. 2017ம் ஆண்டு இந்த மைதானத்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணி, பலம்மிக்க இந்திய அணி நிர்ணயித்த 322 என்ற வெற்றியிலக்கை 7 விக்கெட்டுகள் மீதமிருக்க வெற்றிக்கொண்டிருந்தது. இந்தப் போட்டி அளித்துள்ள உத்வேகத்துடன், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நாளைய போட்டியில் இலங்கை அணி நம்பிக்கையுடன் களமிறங்க எதிர்பார்த்துள்ளது.

இரு அணிகளதும் ஒருநாள் போட்டி மோதல்கள்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடந்த ஒருநாள் போட்டி மோதல்களை பார்க்கும் போது, அவுஸ்திலேிய அணி அதிக ஆதிக்கத்தினை செலுத்துவதினை கண்டுக்கொள்ள முடியும். இரண்டு அணிகளும் 96 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், அவுஸ்திரேலிய அணி 60 போட்டிகளிலும், இலங்கை அணி 32 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி பெற்றுள்ள வெற்றியில் 50 சதவீத வெற்றியை மாத்திரமே இலங்கை அணி பெற்றுள்ளது. அதேநேரம், உலகக் கிண்ணத்திலும் இலங்கை அணியின் ஆதிக்கம் அவுஸ்திரேலிய அணியுடன் குறைவாகவே இருக்கின்றது. இரண்டு அணிகளும் 9 உலகக் கிண்ணப் போட்டிகளில் மோதியுள்ளதில் இலங்கை அணி ஒரு வெற்றியை மாத்திரமே பெற்றிருக்கிறது. அதுவும் 1996ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை சம்பியனாகியதே இலங்கை அணியன் வெற்றிப் பதிவாக உள்ளது.

அத்துடன், இறுதியாக இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் 2016ம் ஆண்டு ஒருநாள் தொடரில் மோதியுள்ளதுடன், அதிலும் அவுஸ்திரேலிய அணி 4-1 என வெற்றிபெற்றிருக்கிறது. இதன்படி, சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் போட்டியொன்றில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

எதிர்பார்ப்பு வீரர்கள்

அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் இந்தப் போட்டியில் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார். இம்முறை உலகக் கிண்ணத்தில் அவர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஓட்டங்களை குவிக்காத போதும், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்தினை சிறப்பாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஒருநாள் போட்டிகளில் அவருடைய ஓட்ட சராசரி மற்றும் ஓட்டவேகம் என்பனவும் சிறப்பக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஸ்மித்

அவுஸ்திரேலிய அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான ஸ்டீவ் ஸ்மித் இலங்கை அணிக்கு சவால் கொடுக்கக்கூடிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பியிருந்தாலும், அவர் கடந்த நான்கு போட்டிகளில் விளையாடி 42.50 என்ற சராசரியில் 170 ஓட்டங்களை குவித்துள்ளார். இதனால், இந்தப் போட்டியில் இவருடைய துடுப்பாட்டம் ஆஸி. அணிக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச பதினொருவர்

இலங்கை அணியை பொருத்தவரை, உபாதைக்குள்ளாகியிருந்த நுவான் பிரதீப் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதுடன், லக்மாலின் இடத்துக்கு ஜீவன் மெண்டிஸ் அழைக்கப்பட வாய்ப்புள்ளது.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான, லசித் மாலிங்க, நுவான் பிரதீப்

இதேவேளை, அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேலதிகமாக இணைக்கப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் கேன் ரிச்சட்சனுக்கு பதிலாக எடம் சம்பா மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா அணி

டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (தலைவர்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷோன் மார்ஷ், கிளேன் மெக்ஸ்வேல், அலெக்ஸ் கெரி, நெதன் குல்டர்-நெயில், பெட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், எடம் சம்பா

ஆடுகளம் மற்றும் காலநிலை

கென்னிங்டன் ஓவல் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக சாதகம் கொண்ட ஆடுகளமாக இருக்கின்றது.  இதனால், அதிகூடிய ஓட்டங்களுடனான போட்டியொன்றை நாளைய தினம் பார்க்கமுடியும். எனினும், நாளைய போட்டிக்கு புற்கள் நிறைந்த ஆடுகளம் வழங்கப்படும் என நம்பப்படுகின்றது. அவ்வாறு வழங்கினால் அது இலங்கையை விட ஆஸி வீரர்களுக்குகே அதிக சாதகத்தைக் கொடுக்கும்.  

இதேவேளை, இலங்கை அணியின் பயிற்சியின் போது மைதானத்தில் மழை பெய்திருந்தாலும், நாளைய காலநிலையின் படி, போட்டியில் மழைக்குறுக்கிடுவதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளது. இவ்வாறு மழை குறுக்கிடாவிட்டால், இங்கிலாந்தில் தங்களுக்கு அதிக விருப்பத்துக்குறிய மைதானத்தில் இலங்கை அணி, அவுஸ்திரேலிய அணிக்கு பலத்த சவாலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<