சமநிலையில் நிறைவடைந்த பயிற்சி ஒருநாள் மோதல்

88
SLC

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இடையே புதன்கிழமை (16) இங்கிலாந்தில் வைத்து நடைபெற்று முடிந்திருக்கும் பயிற்சி ஒருநாள் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

இங்கிலாந்தில் உபாதைக்குள்ளாகியுள்ள தனன்ஜய லக்‌ஷான்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என்பவற்றில் விளையாடவிருக்கின்றது.

இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறவுள்ள போட்டிகளுக்காக தயராகும் வகையில், இலங்கை அணி வீரர்கள் தமக்கிடையே விளையாடிய பயிற்சிப் போட்டி இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரில் ஆரம்பமாகியது.

இப்போட்டியில் குசல் ஜனித் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் தலைமையிலான இரு அணிகள் பங்கேற்றதுடன், போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற குசல் மெண்டிஸ் தலைமையிலான அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி,  துடுப்பாட்டத்தை தொடங்கிய குசல் மெண்டிஸ் தலைமையிலான அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது. 

குசல் மெண்டிஸ் அணியின் துடுப்பாட்டத்தில் ரமேஷ் மெண்டிஸ் 89 பந்துகளுக்கு 71 ஓட்டங்களைப் பெற்று வீரர் ஒருவர் தனது தரப்பில் பெற்ற கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்ய, இசுரு உதான 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மறுமுனையில் குசல் பெரேரா அணியின் பந்துவீச்சு சார்பில் அகில தனன்ஞய மற்றும் சாமிக கருணாரட்ன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=jy5xcIBWQ5

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 251 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய குசல் பெரேரா தலைமையிலான அணி, 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்ற காரணத்தினால் ஆட்டம் சமநிலை அடைந்தது.

குசல் பெரேரா அணியின் துடுப்பாட்டம் சார்பாக அவிஷ்க பெர்னாந்து 64 ஓட்டங்களை பெற்று தனது தரப்பில் வீரர் ஒருவரின் சிறந்த   துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்த, தசுன் ஷானக்கவும் 44 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் குசல் மெண்டிஸ் அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது அசித்த பெர்னாந்து 3 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்து திறமையினை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

குசல் மெண்டிஸ் XI – 250/9 (50) ரமேஷ் மெண்டிஸ் 71(89), இசுரு உதான 44(57), ஒசத பெர்னாந்து 39(34), அகில தனன்ஞய 3/28, சாமிக கருணாரட்ன 3/38

குசல் பெரேரா XI – 250/9 (50) அவிஷ்க பெர்னாந்து 64(71), தசுன் ஷானக்க 44(54), அசித்த பெர்னாந்து 3/43

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<