உபாதைக்குள்ளான நுவான் பிரதீப்பின் தற்போதைய நிலை

1860

உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியில் அடுத்த போட்டிக்காக இலங்கை அணி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், வேகப் பந்துவீச்சாளர் நுவான் பிரதீப்பின் உடற்தகுதி தொடர்பாக அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை அணியின் முக்கிய வீரருக்கு உபாதை

வேகப் பந்துவீச்சாளரான நுவன் பிரதீப் விரல் உபாதை ஒன்றினை….

உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு இருக்கையில், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை அணி பயிற்சியில் ஈடுபட்டுவந்த இரண்டு நாட்களிலும் மழை குறுக்கிட்டுள்ளது. இதனால், இலங்கை அணி உள்ளக அரங்கில் பயிற்சிகளில் ஈடுபட்டதுடன், இன்றைய தினம் (13) ஒரு பகுதி பயிற்சி நேரத்தை மாத்திரம் மைதானத்தில் மேற்கொண்டது.

இதன்போது, விரல் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த வேகப் பந்துவீச்சாளர் நுவான் பிரதீப், உபாதைக்கு பின்னர் முதற்தடவையாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆரம்பத்தில் பந்தினை ஓடிவந்து முழுமையாக வீசாத போதும், இருந்த இடத்திலிருந்து உடற்பயிற்சி நிபுனர் அஜந்த வத்தேகமவுடன் பந்தினை வீசி பயிற்சிகளை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்துக்கு பின்னர், தனது முழுமையான பந்துவீச்சு பாணியுடன் பந்து வீச்சு பயிற்சியினை மேற்கொண்டார். இதன் பின்னர், எமது Thepapare.com இணையத்தளத்துக்கு பிரதீப் வழங்கிய செவ்வியில், “நான் நினைத்ததை விடவும் விரைவாக குணமடைந்து வருகின்றேன். இன்றைய தினம் நான் எனது முழு பாணியில் பந்துவீசியிருந்தேன். ஆனால், களத்தடுப்பு பயிற்சிகளில் ஈடுபடவில்லை.  நாளைய தினம் களத்தடுப்பு பயிற்சியில் ஈடுபட்ட பின்னரே அடுத்தப் போட்டியில் விளையாடுவது தொடர்பில் அறிவிக்க முடியும். அதேநேரம், நான் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.

இதேவேளை, நாளைய தினம் இடம்பெறவுள்ள பயிற்சியின் பின்னரே நுவான் பிரதீப் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என எமது Thepapare.com இணையத்தளத்திடம் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரும், அணி முகாமையாளருமான அசந்த டி மெல் உறுதிப்படுத்தினார்.

நுவான் பிரதீப் கடந்த 4ம் திகதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கார்டிப்பில் நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக இருந்ததுடன், அடுத்தடுத்தப் போட்டிகளில் இலங்கை அணியை தனது வேகப் பந்துவீச்சால் பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணத்தில் பங்கேற்றிருக்கும் இலங்கை அணி இதுவரையில், நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் 2 சமனிலை முடிவுகளின் அடிப்படையில் 4 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இதேவேளை, தங்களுடைய அடுத்த போட்டியில் எதிர்வரும் 15ம் திகதி அவுஸ்திரேலிய அணியை கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் வைத்து இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<