சுற்றுலா இலங்கை அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஜொஹன்னஸ்பேர்க் நியூ வன்டர்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில், துடுப்பாட்டத்தில் முழுப்பலத்தினையும் பிரயோகித்திருந்த தென்னாபிரிக்க அணி,  3 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்களை குவித்துள்ளது.

இத்தொடரின், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியிற்று ஏற்கனவே இத்தொடரினை பறிகொடுத்திருப்பினும், இலங்கை அணி ’வைட் வொஷ்’ செய்யப்படாமல் இருப்பதற்கு இப்போட்டியின் முடிவு இலங்கை அணிக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதாலும், தென்னாபிரிக்க அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஹஷிம் அம்லாவின் நூறாவது டெஸ்ட் போட்டி என்பதாலும், மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கின்றது.

இதனையடுத்து, ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட, தென்னாபிரிக்க அணியின் பாப் டு பிளேசிஸ்,  வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான இந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இப்போட்டியில் புதுமுக வீரராக டுஆன்னே ஒலிவியர் தென்னாபிரிக்க அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

பின்னர், நாணய சுழற்சிக்கு அமைவாக ஸ்டீபன் குக், டீன் எல்கர் ஆகியோருடன் தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியானது, ஒரு நல்ல ஆரம்பத்தினையே தந்திருந்தது. இதன் பின்னர், அவ்வணி 45 ஓட்டங்களை பெற்றிருந்த போது, இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் வீசிய பந்தில் ஸ்டீபன் குக் LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார். இந்த ஆட்டமிழப்பிற்கு தென்னாபிரிக்க அணி மீள்பரிசீலனை உபயோகித்து அது தோல்வியை சந்தித்த காரணத்தினால், ஸ்டீபன் குக் வெறும் 10 ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி திரும்பினார்.

பின்னர் அடுத்த ஓவரில், தென்னாபிரிக்க அணி மேலதிக ஓட்டங்கள் ஏதும் குவிக்காது இருந்த தருணத்தில்,

லஹிரு குமாரவின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டீல் எல்கர், திமுத் கருணாரத்னவிடம் பிடிகொடுத்து, 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த காரணத்தினால், தடுமாறிய தென்னாபிரிக்க அணியின் நிலைமையினை சுதாகரித்துக்கொண்ட, புதிய துடுப்பாட்ட வீரர்களான ஹஷிம் அம்லா மற்றும் டுமினி ஆகியோர், மெதுவான முறையில், அவர்களது அணிக்காக ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்து, மதிய போசண இடைவேளை வரை களத்தில் நின்று தென்னாபிரிக்க அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையினை 79 ஓட்டங்களாக உயர்த்தினர்.

Photos: Sri Lanka v South Africa 3rd Test – Day 1

Photos of the Sri Lanka v South Africa 3rd Test – Day 1

மதிய போசன இடைவேளையின் பின்னர், தமது ஆட்டத்தினை தொடர்ந்த தென்னாபிரிக்க அணியில், டுமினி அரைச்சதம் கடந்ததோடு, மறுமுனையில் அவருக்கு உறுதுணையாக நின்றிருந்த ஹஷிம் அம்லாவும், அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்த பாடுபட்டிருந்தார்.

பின்னர், நுட்பமான முறையில், ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்த இருவரில் ஒருவரான அம்லாவும் அரைச்சதம் கடந்தார். இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக சிறப்பாக செயற்பட்ட காரணத்தினால், இருவரும் தத்தமது சதங்களை பெற்றுக்கொண்டனர். இதில், டுமினி 140 பந்துகளில் தனது ஆறாவது சதத்தினை பூர்த்தி செய்ததுடன், அம்லா 169 பந்துகளில் தனது சதத்தினை பூர்த்தி செய்து நூறாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 8 ஆவது வீரராக தன்னை பதிவு செய்து கொண்டார்.

பின்னர், இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக பகிர்ந்து கொண்ட அபார இணைப்பாட்டமான 292 ஓட்டங்களுடன் தென்னாபிரிக்க அணி, இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது, 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 90 ஓவர்களில் 338 ஓட்டங்களை  பெற்று வலுவான நிலையில் உள்ளது.

துடுப்பாட்டத்தில், இன்று போட்டி நிறைவிற்கு முன்னதாக ஆட்டமிழந்த டுமினி, 221 பந்துகளில் 19 பவுண்டரிகள் உள்ளடங்களாக 155 ஓட்டங்களினை விளாசியதோடு, ஹஷிம் அம்லா 221 பந்துகளில் 16 பவுண்டரிகள் உடன் 125 ஓட்டங்களுடன் களத்தில் நிற்கின்றார்.

பந்து வீச்சில், இலங்கை அணிக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையவில்லை எனினும், லஹிரு குமார மாத்திரம் 79 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா (முதல் இன்னிங்ஸ்): 338/3 (90) – JP டுமினி 155(221), ஹஷிம் அம்லா 125*(221), டீன் எல்கர் 27, லஹிரு குமார 79/2(18), எஞ்சலோ மெதிவ்ஸ் 25/1(12)

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.