தற்பொழுது இடம்பெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய ரக்பி கிண்ண தொடரில் இன்று இடம்பெற்ற சைனீஸ் தாய்பே அணியுடனான மிகவும் விறுவிறுப்பான போட்டியில் இலங்கை அணி இறுதி நேரத்தில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது.

இலங்கை இளையோர் அணி போட்டியின் இறுதிப் 10 நிமிடங்களிலும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடிய போதும், இறுதி நிமிடத்தில் எதிரணிக்க வழங்கிய வாய்ப்பினால் சைனீஸ் தாய்பே வீரர் மிகவும் சிறந்த முறையில் ட்ரை ஒன்றை வைத்ததன் காரணமாக அவ்வணி 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் பலர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக இன்றைய முக்கியமான போட்டியை இலங்கை அணி மாற்று வீரர்களைக் கொண்டே எதிர்கொண்டது.

போட்டி இடம்பெறும் பிரதேசத்தில் காலநிலை வித்தியாசமாக இருந்தமையினால் போட்டி முழுமையாக 70 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டிருந்தது. எனவே இரண்டு பாதிகளும் தலா 35 நிமிடங்களுக்கு விளையாடப்பட்டது.

Sri Lanka v Chinese Taipeiஇலங்கை அணி பந்தை உதைந்து போட்டியை ஆரம்பித்து வைத்தது. போட்டியின் முதலாவது புள்ளி இலங்கை அணிக்கே கிடைத்தது. போட்டியின் முதல் ட்ரையை நிரேஷ் உதயங்க வைக்க, சன்தேஷ் ஜயவிக்ரம உதையை தவறவிடாது கம்பங்களுக்குள் செலுத்தினார். (00-07)

எனினும் அதற்கான பதிலை வழங்குவதற்கு சைனீஸ் தாய்பே அணிக்கு நீண்ட நேரம் எடுக்கவில்லை. அவ்வணியின் ப்லை ஹாப் வீரர் யீ ஷேன், இலங்கை அணியின் பின்கள வீரர்களை கடந்து சென்று ட்ரை வைக்க, சீஹ் ஷெங் வு கன்வேஷன் உதையை சிறந்த முறையில் உதைந்து புள்ளிகளை சமப்படுத்தினார். (07-07)

அதன் பின்னரும் இலங்கை அணியின் தடுப்பு முறையில் மிக மோசமான விளையாட்டு வெளிப்படுத்தப்பட்டமையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சைனீஸ் தாய்பே  வீரர் சுன் யென் லன் மற்றொரு ட்ரையை வைத்தார். (12-07)

அதன்பின்னரும், இலங்கை வீரர் குஷான் இந்துனில் மோசமான விதத்தில் ஒரு பந்து பரிமாற்றத்தை மேற்கொள்ளும்போது, பந்தை பெற்றுக்கொண்ட எதிரணியின் ஷென் டங் பந்தை தனியே நீண்ட தூரத்திற்கு எடுத்துச் சென்று கம்பங்களின் கீழே ட்ரை வைக்க, இலகுவான உதையும் புள்ளிகளாக மாற்றப்பட்டது. (19-07)

அதன் பின்னர் 45 மீட்டர் தூரத்தில் வைத்து இங்கை அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதனை சன்தேஷ் ஜயவிக்ரம கம்பங்களுக்குள் உதைந்து புள்ளி வித்தியாசத்தைக் குறைத்தார்.

முதல் பாதி: சைனீஸ் தாய்பே 19 – 10 இலங்கை

பின்னர். தீர்மானம் மிக்க இரண்டாவது பாதி ஆரம்பமாகி சில நிமிடங்களில் சைனீஸ் தாய்பே அணி, தமது அடுத்த ட்ரையையும் வைக்க, புள்ளிகள் மேலும் உயர்ந்தன. (24-10)

எனினும் அதன் பின்னர் போட்டியில் பாரிய மாற்றம் ஏற்பட ஆரம்பமாகியது. இலங்கை அணியின் ரொமேஷ் பிரியன்கர ஒரு ட்ரையை வைக்க, அவருக்கு அடுத்ததாக இந்த தொடரில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி வந்த வாஜித் பஹ்மி பல வீரர்களைக் கடந்து சென்று மற்றொரு ட்ரையையும் மைதானத்தின் மூலையில் வைத்தார்.

எனினும் இந்த இரண்டு ட்ரைகளின்போதும் இலங்கைக்கு கன்வேர்ஷன் உதை மூலம் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. (24-20)

அதனைத் தொடர்ந்து. இலங்கை கனிஷ்ட அணியின் வேகமான வீரராகக் கருதப்படும் நவீன் ஹேனகன்கனமகே சிறந்த முறையில் அடுத்த ட்ரையையும் வைத்தார். எனினும், இதன்போது மிகவும் இலகுவான கன்வேஷன் உதையை அஷ்வன்த ஹேரத் தவறவிட்டார். (24-25)  

இறுதிப் 10 நிமிடங்களும் மிகவும் சிறந்த முறையில் அதிரடியாக ஆடிய இலங்கை வீரர்களால் இறுதி நிமிடத்தில் வெற்றி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது.

போட்டி நிறைவடையும் நேரத்தில் சிறந்த பந்து பரிமாற்றல்களின்மூலம் பந்தைப் பெற்ற ஷேங் டாங் மிகவும் வேகமாக ஓடிச் சென்று கம்பங்களுக்கு கீழே ட்ரையை வைக்க, இலகுவான உதையும் புள்ளிகளாக மாற்றப்பட்டது.

முழு நேரம்: சைனீஸ் தாய்பே 31 – 25 இலங்கை

புள்ளிகளைப் பெற்றவர்கள்

சைனீஸ் தாய்பே

ட்ரை – ஷேங் டாங் 02, யீ ஷென், ஷென் யென் லன், சென் யு சங்
கன்வேஷன் – சீஹ் ஷெங் வு 2, யீ ஷென்

இலங்கை

ட்ரை – நிரோஷ் உதயங்க, ரொமேஷ் ப்ரியன்கர, வாஜித் பஹ்மி, நவீன் ஹேனகன்கனமகே
கன்வேஷன் – சன்தேஷ் ஜயவிக்ரம
பெனால்டி – சன்தேஷ் ஜயவிக்ரம