ஒரு நாள் தரவரிசையில் இணைந்து கொள்ளும் நான்கு புதிய கிரிக்கெட் அணிகள்

1942

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ஐ.சி.சி.) ஒரு நாள் தரவரிசைக்கான கிரிக்கெட் அணிகளை 16 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு நாள் தரவரிசையில் மேலதிகமாக ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நான்கு நாடுகளின் கிரிக்கெட் அணிகள் இணைந்து கொள்கின்றன.

இதுவரை காலமும் ஐ.சி.சி. இனால் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட 12 நாடுகள் மாத்திரமே ஒரு நாள் தரவரிசைக்கான அணிகளாக கருதப்பட்டு வந்தன. எனினும், இந்த டெஸ்ட் அணிகளுடன் புதிதாக இணைந்திருக்கும் அணிகள் நான்கும் எதிர்வரும் காலங்களில்  ஒரு நாள் தரவரிசையில் தமக்குரிய நல்ல நிலையைப் (Good Ranking) பெற கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தில் காணப்படுகின்றன. தற்போது ஐ.சி.சி. இன் ஒரு நாள் தரவரிசையில் முதலிடத்தில் அடுத்த கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நடாத்தும் இங்கிலாந்து அணி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் விளையாட்டுத்துறை அமைச்சிடம் ஒப்படைப்பு

ஒரு நாள் தரவரிசையில் புதிதாக இணைந்து கொண்ட அணிகளில் ஸ்கொட்லாந்து 28 தரநிலைப்புள்ளிகளுடன் 13 ஆவது இடத்திலும், ஐக்கிய அரபு இராச்சியம் 18 தரநிலைப் புள்ளிகளுடன் 14 ஆம் இடத்திலும் இருக்கின்றன. எனினும், நெதர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகளின் இடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இதற்காக அந்த இரண்டு அணிகளும் இன்னும் நான்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கின்றது.

நெதர்லாந்து அணி கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.சி.சி. இன் உலக கிரிக்கெட் லீக் தொடரில் (ICC World Cricket League) சம்பியன் பட்டத்தினை வென்றமைக்காக ஒரு நாள் போட்டிகளுக்கான அந்தஸ்தை பெற்றுக் கொண்டிருந்தது. மறுமுனையில், ஏனைய மூன்று நாடுகளும் இந்த ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் சிறந்த பதிவினைக் காட்டிய ஐ.சி.சி. இன் அங்கத்தவர்கள் என்பதற்காக ஒரு நாள் அந்தஸ்தை எடுத்திருந்தன.

ஐ.சி.சி. இன் ஒரு நாள் அட்டவணையில் 16 அணிகள் இருந்த போதிலும், 10 நாடுகளே அடுத்த கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்காக போட்டியிடுகின்றன. கத்துக்குட்டி நாடுகளான நெதர்லாந்து, அயர்லாந்து போன்றவை ஒரு நாள் போட்டிகளில் போதியளவு அனுபவத்தினைப் பெறாததே இப்படி வரையறுக்கப்பட்ட நாடுகளுக்குள் உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்துவதற்கு காரணமாகும்.  

பத்து அணிகள் பங்குபெறும் அடுத்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்திற்கு நேரடித்தகுதி பெறும் எட்டு அணிகள், கடந்த ஆண்டு செப்டம்பர்  மாதம் ஐ.சி.சி. இன் ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இதனை அடுத்து, உலகக் கிண்ணத்திற்கான மேலதிக இரண்டு அணிகளையும் தெரிவு செய்ய தகுதிகாண் தொடர் ஜிம்பாப்வேயில் கடந்த மார்ச் மாதம் நடாத்தப்பட்டிருந்தது.

இந்த தகுதிகாண் தொடரில் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் கனவுகளோடு மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து, பபுவா நியூ கினியா, ஸ்கொட்லாந்து, நேபாளம் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகள் பங்கேற்றிருந்தன.

பயிற்சிப் போட்டியில் சகலதுறைகளிலும் திறமையினை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள்

இத்தொடரில் இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகளின்படி வழங்கப்பட்ட புள்ளிகள் மூலம், முதல் இரண்டு இடங்களைப் பெற்றுக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் அடுத்த உலகக்கிண்ணத்திற்கான தகுதியினைப் பெற்றுக் கொண்டிருந்தன. இந்த தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பலமிக்க மேற்கிந்திய தீவுகள் அணியை ஆப்கானிஸ்தான் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்திற்கு இன்னும் 12 மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சியிருக்கின்றது. ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கின்றது.

ஐ.சி.சி. இன் ஒரு நாள் அணிகள் தரவரிசை

  1. இங்கிலாந்து – 125 புள்ளிகள்
  2. இந்தியா – 122 புள்ளிகள்
  3.  தென்னாபிரிக்கா – 113 புள்ளிகள்
  4. நியூசிலாந்து – 112 புள்ளிகள்
  5. அவுஸ்திரேலியா – 104 புள்ளிகள்
  6. பாகிஸ்தான் – 102 புள்ளிகள்
  7. பங்களாதேஷ் – 93 புள்ளிகள்
  8. இலங்கை – 77 புள்ளிகள்
  9. மேற்கிந்திய தீவுகள் – 69 புள்ளிகள்
  10. ஆப்கானிஸ்தான் – 63 புள்ளிகள்
  11. ஜிம்பாப்வே – 55 புள்ளிகள்
  12. அயர்லாந்து – 38 புள்ளிகள்
  13. ஸ்கொட்லாந்து – 28 புள்ளிகள்
  14. ஐக்கிய அரபு இராச்சியம் – 18 புள்ளிகள்

குறிப்பு – இந்த தரவரிசையில் தமக்குரிய நிலைகளைப் பெற நெதர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இன்னும் நான்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க