இன்று நடைபெற்று முடிந்திருக்கும், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், சிறந்த பந்துவீச்சின் காரணமாக இலங்கை 259 ஓட்டங்களால் பங்களாதேஷினை படுதோல்வியடையச் செய்து, அபார வெற்றியினை சுவீகரித்துள்ளது.

காலி மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் இலங்கை அணியினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த சவாலான வெற்றியிலக்கான 457 ஓட்டங்களினைப் பெறுவதற்காக தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த பங்களாதேஷ், ஆரம்ப வீரர் செளம்யா சர்க்கர் பெற்றிருந்த அதிரடி அரைச்சதத்துடன் திட்டமான ஆரம்பத்தினை வெளிக்கொணர்ந்து நேற்றைய நான்காம் நாள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 67 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது.

விருந்தினர் அணி களத்தில் நின்று இருந்த செளம்யா சர்க்கர் (53) மற்றும் தமிம் இக்பால் (13) ஆகியோருடன் தமது இரண்டாம் இன்னிங்சின் ஆட்டத்தினை போட்டியின் இறுதி நாளான இன்று தொடர்ந்தது.

பங்களாதேஷ் அணியில் தனது சிறப்பாட்டத்தினை இன்றும் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த செளம்யா சர்க்கர், அசேல குணரத்ன வீசிய இன்றைய நாளின் முதல் ஒவரின் இரண்டாம் பந்தில் பங்களாதேஷின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்திருந்தார்.

துல்லியமான சுழல் ஒன்றின் மூலம் போல்ட் செய்யப்பட்ட அவர் இறுதி நாளில் ஓட்டம் எதனையும் குவிக்காமல் நேற்றுப் பெற்றிருந்த 53 ஓட்டங்களுடன் மைதானத்தில் இருந்து விடை பெற்றார்.

இதனையடுத்து, களத்திற்கு புதிதாக நுழைந்த மொமினுல் ஹக், பவுண்டரி ஒன்றினை விளாசி நீண்ட நேர ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்த முனைந்திருந்த போது, பந்தினை கையில் கொண்டிருந்த வலது கை சுழல் வீரர் தில்ருவான் பெரேரா  இனால், LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார். இந்த விக்கெட் இழப்பின் போது பங்களாதேஷ் மூன்றாம் நடுவரிடம் மேன்முறையீடு செய்திருந்தும் அது நிராகரிக்கப்பட்டது.

தரங்கவின் சதத்தின் உதவியுடன் பங்களாதேஷ் அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த இலங்கை அணி

மீண்டும் பந்தினை கையிலேந்திய தில்ருவான் பெரேரா எதிரணியின் அடுத்த விக்கெட்டினையும் சாய்த்தார். இம்முறை பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் 19 ஓட்டங்களுடன் வெளியேற, முக்கிய துடுப்பாட்ட வீரர் ஒருத்தரினை இழந்த பங்களாதேஷ் அழுத்தத்திற்கு உள்ளாகியது.

இன்றைய நாளில், திடகாத்திரமான களத்தடுப்பினை இலங்கை வெளிப்படுத்திய காரணத்தினால் அணித்தலைவர் ஹேரத்திற்கு இந்த இன்னிங்சில் தனது முதல் விக்கெட்டினைப் பெறக்கூடியதாக இருந்தது. இதனால், பங்களாதேஷின் சகல துறை வீரர் சகிப் அல் ஹஸன், வெறும் 8 ஓட்டங்களுடன் வெளியேறி கடந்த இன்னிங்ஸ் போன்று இந்த இன்னிங்சிலும் பிரகாசிக்கத் தவறியிருந்தார்.

அதே ஓவரின் இறுதிப்பந்தில், புதிதாக களம் நுழைந்த மஹ்முதுல்லாஹ்வினையும் ஓட்டம் ஏதுமின்றி ஹேரத் வீழ்த்த ஒரு கட்டத்தில், பங்களாதேஷ் அணி, 104 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்குச் சென்றது.

இதனை கருத்திற்கொண்டு, ஆடத்தொடங்கிய பங்களாதேஷின் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் மற்றும் விக்கெட் காப்பாளர் லில்டொன் தாஸ் ஆகியோர் கவனமான முறையில் ஆடி மதிய போசண இடைவேளை வரை மேலதிக விக்கெட் இழப்பின்றி 157 ஓட்டங்களிற்கு 5  விக்கெட்டுக்களை இழந்தவாறு மாத்திரம் காணப்பட்டிருந்தனர்.

மதிய போசண இடைவேளையினை அடுத்து, ஆட்டத்தினை தொடர்ந்த பங்களாதேஷில், கடந்த இன்னிங்சில் நீண்ட நேர ஆட்டத்தினை வெளிப்படுத்திய அணித்தலைவர் ரஹீமும் ஆட்டமிழக்க, அவ்வணியின் இறுதி நம்பிக்கையும் பறிபோனதுடன் இலங்கை அணி போட்டியில் வெற்றி பெறும் என்பதும் உறுதியாகியது.

பங்களாதேஷ் இன், 7 ஆவது விக்கெட்டாக லில்டன் தாஸினை நடையக்கட்டச் செய்த ஹேரத், இடது கை சுழல் வீரராய் தனது 363 ஆவது டெஸ்ட் விக்கெட்டினை கைப்பற்றியதோடு, இடது கைசுழல் வீரராக அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர்களில், முதலாம் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியின் டேனியல் விட்டோரி இணை (362) பின்தள்ளி அந்த இடத்தினை தான் பெற்றுக்கொண்டார்.

Photos : Sri Lanka v Bangladesh 1st Test – Day 5

போட்டியில் மேக மூட்டங்கள் காணப்பட்டதால் மழை பெய்வதற்கான வாய்ப்பு பின்னர் எதிர்பார்க்கப்பட்டிருப்பினும், இலங்கை அணியின் அபாரப் பந்துவீச்சினால் அது பங்களாதேஷூக்கு போட்டியினை சமநிலை அடையச்செய்வதில் கைகூடியிருக்கவில்லை.

முடிவில், 60.2 ஓவர்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த பங்களாதேஷ் 197 ஓட்டங்களினை மாத்திரம் தமது இரண்டாம் இன்னிங்சிற்காகப் பெற்று இப்போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

இதில் பங்களாதேஷ் அணியில், மத்திய வரிசையில் வந்த வீரர்களான லில்டான் தாஸ் 35 ஓட்டங்களினைப் பெற்றதோடு, அணித்தலைவர் முஸ்பிகுர் ரஹீம் 34 ஓட்டங்களினையும் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில், ரங்கன ஹேரத் மொத்தமாக 57 ஓட்டங்களினை மாத்திரம் கொடுத்து 6 விக்கெட்டுக்களினைச் சாய்த்திருந்ததோடு, தில்ருவான் பெரேரா உம் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக, குசல் மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இப்போட்டியுடன், டெஸ்ட் தொடரினை 1-0 என இலங்கை கைப்பற்றியுள்ளதுடன், தொடரின் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகின்றது.

போட்டிச் சுருக்கம்