MCC யின் சம்பியன் கவுன்டி போட்டி இலங்கையில்: சங்கா அணித் தலைவர்

220

மெரில்போன் கிரிக்கெட் கழகம் (MCC) அதன் அடுத்த பருவகாலத்திற்கான சம்பியன் கவுன்டி கிரிக்கெட் போட்டியினை, 2020ஆம் ஆண்டு இலங்கையின் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடாத்தவிருப்பதாக தெரிவித்துள்ளது. 

சம்பியன் கவுன்டி கிரிக்கெட் போட்டி என்பது, இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரில் வெற்றியாளர் பட்டம் பெற்ற கிரிக்கெட் கழகத்துடன், மெரில்போன் கிரிக்கெட் கழகம் ஆடும் நான்கு நாட்கள் கொண்ட ஒரு பாரம்பரிய முதல்தர கிரிக்கெட் போட்டியாகும். 

அவுஸ்திரேலிய அணியில் இருந்து விலகும் கிளென் மெக்ஸ்வெல்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்………….

அதன்படி 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்த சம்பியன் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் மெரில்போன் கிரிக்கெட் கழகத்துடன், 2019ஆம் ஆண்டுக்கான கவுன்டி கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்தின் எசெக்ஸ் கிரிக்கெட் கழகம் மோதவிருக்கின்றது.  

அதேவேளை, இந்த கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்போட்டியில் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார செயற்படவிருக்கின்றார். 

கிரிக்கெட் விதிமுறைகளை உருவாக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் பிரித்தானியர் அல்லாத முதலாவது நிர்வாகத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட குமார் சங்கக்கார இலங்கையில் நடைபெறவிருக்கும் போட்டியில், மெரில்போன் கிரிக்கெட் கழகத்தினை தலைமை தாங்குவதன் மூலம் மெரில்போன் கிரிக்கெட் கழகத்திற்கும் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையிலும் உறவுப்பாலம் ஒன்றை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சம்பியன் கவுன்டி கிரிக்கெட் போட்டியானது 2010ஆம் ஆண்டிற்குப் பின்னர் இங்கிலாந்து அல்லாத இடங்களில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இலங்கையில் இப்போட்டி நடைபெறவிருப்பது இதுவே முதல் தடவையாகும். 

இதேநேரம், இந்த சம்பியன் கவுன்டி கிரிக்கெட் போட்டி நடைபெறும் காலகட்டத்தில் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் உறுப்பினர்கள் பங்குபெறும் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றும் இலங்கையில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்றுகூடலிற்காக இலங்கை வரும் மெரில்போன் கிரிக்கெட் கழக உறுப்பினர்கள், காலியில் அமைந்திருக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் காரியலாயத்திற்கு சென்று அங்கே தேவையாக இருக்கும் அபிவிருத்திப் பணிகளை இன்னும் விருத்தி செய்வது தொடர்பிலும் ஆராயவிருக்கின்றனர். 

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரான ஷம்மி சில்வா, மெரில்போன் கிரிக்கெட் கழகம் சம்பியன் கவுன்டி போட்டியினை நடாத்த இலங்கை தெரிவு செய்யப்பட்டமைக்கு தனது நன்றிகளை தெரிவித்திருக்கின்றார். 

கடைசியாக 2019ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் மெரில்போன் கிரிக்கெட் கழகத்துடன் சர்ரே கிரிக்கெட் கழகம் மோதியிருந்ததுடன் போட்டி மழையினால் சமநிலையில் நிறைவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<