துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான 4 ஆவது இளையோர் ஒருநாள் சர்வதேச போட்டியில் 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய இளையோர் அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரில் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த தொடர் 2-2 என சமநிலை பெற்றிருக்கும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி, தொடரை தீர்மானிக்கும் ஆட்டமாக மாறியுள்ளது.
இந்திய இளையோர் அணியை மீண்டும் வீழ்த்தியது இலங்கை
மொரட்டுவை, டிரோன் பெர்னாண்டோ மைதானத்தில் இன்று (07) நடைபெற்ற நான்காவது இளையோர் ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் ஆர்யான் ஜுயல் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
போட்டியின் ஆரம்பம் தொடக்கம் ஸ்திரமான இணைப்பாட்டங்களை பெற்று ஓட்டங்களை குவித்த இந்திய இளையோர் அணி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் இலங்கை அணி எட்டு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியபோதும் இந்திய துடுப்பாட்ட வீரர்களின் ஒட்டங்களை மட்டுப்படுத்த முடியாமல் போனது.
இந்திய அணி தனது முதல் விக்கெட்டை 33 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தபோதும் மறுமுனையில் துடுப்பாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தேவ்தூத் பதிக்கல் மற்றும் பவன் ஷாஹ் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்து 94 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் பதிக்கல் 91 பந்துகளில் 71 ஓட்டங்களை பெற்றதோடு, பவன் ஷாஹ் 36 ஓட்டங்களை குவித்தார்.
இந்த இரு வீரர்களும் 21 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டமிழந்தபோதும் 4 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அணித்தலைவர் ஜுயல் மற்றும் யாஷ் ரதோட் 92 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டு இந்தியை அணிக்கு மேலும் வலுச் சேர்த்தனர்.
இதன்போது விக்கெட் காப்பாளரும் வலதுகை துடுப்பாட்ட வீரருமான ஜுயல் 60 ஓட்டங்களை பெற்றதோடு ரதோட் 56 ஓட்டங்களை எடுத்தார்.
எனினும் இந்திய அணி பிந்திய ஓவர்களில் வேகமாக ஓட்டங்கள் பெறுவதை இலங்கை பந்துவீச்சாளர்களால் மட்டுப்படுத்த முடிந்தது. விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையிலும் இந்திய இளையோர் அணி கடைசி 10 ஓவர்களுக்கும் 69 ஓட்டங்களையே எடுத்தது.
இதன் மூலம் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களை பெற்றது. இதன்போது இலங்கை அணி சார்பில் வலதுகை சுழல் பந்துவீச்சாளர் அவிஷ்க லக்ஷான் மற்றும் சந்துன் மெண்டிஸ் 10 ஓவர்கள் பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை இளையோர் அணிக்கு ஆரம்பத்திலேயே ஏமாற்றம். விக்கெட் காப்பாளரான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கமில் மிஷார ஓட்டமின்றி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அணித்தலைவர் நிபுன் தனஞ்சய அரம்ப துடுப்பாட்ட வீரர் நவோத் பரணவிதானவுடன் இணைந்து சரிவிலிருந்து மீள முயன்றபோதும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
இந்த இருவரும் 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தபோது காலி மஹிந்த கல்லூரியின் பரணவிதான 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் ஒரு ஓவர் கழித்து இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்று முதலிடத்தில் இருக்கும் (187 ஓட்டங்கள்) நிபுன் தனஞ்சயவும் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இந்த இரு வீரர்களும் ஆட்டமிழந்ததை அடுத்து மத்திய வரிசையில் எவரும் நின்றுபிடித்து ஆடவில்லை. இலங்கை இளையோர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மத்திய வரிசையில் வந்த சொனால் தினுஷ (03), சந்துன் மெண்டிஸ் (04), விஜயகுமார (08) ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
உலகக் கிண்ணத்துக்கு கனவு காணும் இலங்கை அணியின் இன்றைய நிலை
இதனால் 107 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை இளையோர் அணி மேலும் 36 ஓட்டங்களை பெறுவதற்குள் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது. இதன்படி இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 37.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களையே பெற்றது.
இந்திய அணி சார்பில் வலதுகை சுழல் பந்துவீச்சாளர் ஆயுஷ் பதோனி மற்றும் ஹர்ஷ் தியாகி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.
இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் கடைசியுமான இளையோர் ஒருநாள் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) இதே மொரட்டுவை, டிரோன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















