உலகக் கிண்ணத்துக்கு கனவு காணும் இலங்கை அணியின் இன்றைய நிலை

1226

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த வருடம் எதிர்பார்த்தளவு வெற்றிகளைக் கொடுக்கவில்லை என்றே சொல்ல முடியும். தரப்படுத்தலில் முன்னிலையிலும், பின்தங்கிய நிலையிலும் உள்ள அணிகளிடம் மிகவும் மோசமான தோல்விகளை கண்ட இலங்கை அணிக்கு, இன்னும் தோல்வியின் பிடியில் இருந்து மீளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீரர்களை சரியாக இனங்காணாமை, வீரர்கள் அடிக்கடி உபாதைகளுக்கு உள்ளாவது, மோசமாக களத்தடுப்பு என பலவித நெருக்கடிகளை இலங்கை அணி சந்தித்து வருகின்றது.

பிரியாவிடை போட்டிக்காக காத்திருக்கும் லசித் மாலிங்க

தனது வெளிப்படையான, நேரடியாகப் பேசும் தன்மையும்….

நாளுக்கு நாள் வீழ்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வெற்றி நாயகன் என்றழைக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்க இவ்வருட முற்பகுதியில் இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரது பயிற்றுவிப்பின் கீழ், புதிய அணித் தலைவரோடும், புதிய மாற்றங்களோடும் இலங்கை அணி பங்களாதேஷுக்கு கடந்த ஜனவரி மாதம் முதலாவது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது.

இந்த சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குகொண்ட முக்கோண ஒரு நாள் தொடரில் இலங்கை பங்கேற்றது. இதன் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்திய இலங்கை அணி இவ்வருடத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களைக் கைப்பற்றிய இலங்கை அணி, சொந்த மண்ணில் நடைபெற்ற சுதந்திர கிண்ண முக்கோண டி-20 தொடரில் இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி, தென்னாபிரிக்காவுடனான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகின்றது.

டி கொக்கின் அதிரடியுடன் இரண்டாவது வெற்றியை சுவைத்த தென்னாபிரிக்கா

இலங்கை அணிக்கு எதிராக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச….

இதன் முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த நிலையில், தம்புள்ளையில் நேற்று முன்தினம் (01) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கியது.

இதில், அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அரைச்சங்களைக் குவித்து இலங்கை அணிக்கு கௌரவமான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொடுத்தாலும், பந்துவீச்சு, களத்தடுப்பில் மறுபடியும் சொதப்பிய இலங்கை அணிக்கு மற்றுமொரு தோல்வியை சந்திக்க நேரிட்டது.

தென்னாபிரிக்காவுடனான 2ஆவது ஒரு நாள் போட்டியில் உபுல் தரங்கவின் களத்தடுப்பு

இந்தப் போட்டியில் இலங்கை சார்பாக, ஆரம்பத்திலேயே பிடிகள் தவறவிடப்பட்டிருந்தன. 4ஆவது ஓவரில் அம்லாவின் பிடியை குசல் பெரேரா தவறவிட்டிருந்தார். பின்னர், 6ஆவது ஓவரில் குயின்டன் டீ கொக்கின் பிடியை அகில தனன்ஜய தவறவிட்டிருந்தார். அதே ஓவரில், டீ கொக் அடித்த பந்து, பந்துவீச்சாளர் கசுன் ராஜிதவிடம் வேகமாகச் சென்றது. கடினமான வாய்ப்பாக அது காணப்பட்ட போதிலும், அவ்வாய்ப்பையும் அவர் தவறவிட்டிருந்தார்.

இதன்படி, குயின்டன் டி கொக் மற்றும் பாப் டு ப்ளெசிஸ் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன், தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

மோசமான களத்தடுப்பு, பலவீனமான பந்துவீச்சு காரணமாக தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. இது தென்னாபிரிக்காவிற்கு எதிராக இலங்கை அணி தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்ட 10ஆவது சர்வதேச ஒரு நாள் தோல்வியாகவும் அமைந்தது.

இந்த நிலையில், இப்போட்டியில் இலங்கை அணியின் களத்தடுப்பானது பாடசாலை மாணவர்களை விட மோசமாக இருந்ததாக இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அத்துடன், நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், முக்கியமான வீரர்களின் அடுத்தடுத்து பிடிகளை தவறவிட்டமையே இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல, துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் எமது வீரர்கள் தொடர்ந்து தவறுகளை இழைத்ததனால் தான் தோல்வியை சந்திக்க நேரிட்டதாகவும், இவ்வாறு தவறுகளை இழைத்தால் எவ்வாறு வெற்றியை எதிர்பார்க்க முடியும் என நிரோஷன் திக்வெல்லவும் போட்டியின் பிறகு தெரிவித்திருந்தார்.

எனவே, முதல் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களின் கவனக்குறைவினால், தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் மோசமாக செயற்பட்டு தோல்வியைத் தழுவியமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே, ஒரு நாள் அரங்கில் இலங்கை அணியின் இந்த தொடர் தோல்விகள் அணியின் பின்னடைவை காட்டுகின்றது. அத்துடன், 2019 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள் இன்னும் கீழ் மட்டத்தில் இருப்பதை இந்த தோல்விகள் சான்று பகர்கின்றன.

வீரர்களின் திறமைக்குதான் வெற்றி கிடைத்தது என்கிறார் ஹத்துருசிங்க

இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷில் ……

இதில் 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை 36 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியால் 8 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற முடிந்துள்ளதுடன், 27 போட்டிகளில் தோல்வியத் தழுவியது. இதில் 8 போட்டிகளில் 3 பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும், 3 ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் 2 இந்தியாவுக்கு எதிராகவும் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகளாகும்.

அத்துடன், 2015 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கை பெற்ற வெற்றியே சொந்த மண்ணில் இலங்கை இறுதியாகப் பெற்ற சர்வதேச ஒரு நாள் தொடர் வெற்றியாகும். அதன்பின்னர் இலங்கை அணியினால் ஒருநாள் தொடர் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

இதேநேரம், 4 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்திற்கு எதிராகப் பெற்ற வெற்றியே சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் ஏதேனுமொரு அணிக்கு எதிராக இலங்கை பெற்ற கடைசி ஒரு நாள் தொடர் வெற்றியாகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு பின்னர் தென்னாபிரிக்காவிற்கு எதிராக இலங்கை தொடர்ச்சியாக 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அத்துடன், தம்புள்ளை மைதானத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக தொடர்ச்சியாக 4ஆவது தடவையாகவும், ஒட்டுமொத்தமாக 7 தடவைகளும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளமை முக்கிய விடயமாக உள்ளது.

இந்தியாவிற்கு எதிராக 10 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணியால் அவற்றில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற முடிந்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 6 போட்டிகளில் பங்கேற்று அவற்றில் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றது. ஜிம்பாப்வேயிற்கு எதிராக 7 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, அவற்றில் 4 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல ஒரு நாள் தொடர்களை எடுத்துக்கொண்டால், கடந்த 2 வருட காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4 -1 என இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.

தென்னாபிரிக்காவிற்கு எதிராக 2017ஆம் ஆண்டில் 5-0 என இலங்கை தோல்வியைத் தழுவியதுடன், பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-1 எனும் கணக்கில் முடித்துக் கொண்டது.

இதுஇவ்வாறிருக்க, வரலாற்றில் முதற்தடவையாக ஜிம்பாப்வேவுக்கு எதிராக கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 3–2 எனும் கணக்கில் சொந்த மண்ணில் இலங்கை தோல்வியத் தழுவியது.

ஜிம்பாப்வே அணியுடனான கடைசி ஒரு நாள் போட்டியில் தோல்வியைத் தழுவிய போது

அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் 5 -0 என தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, மீண்டும் இந்தியாவுக்கு எதிராக 2 – 1 என தோல்வியைத் தழுவியது.

எனவே, இலங்கை அணியின் அண்மைக்கால தோல்விகளும், அடைவு மட்டங்களும் 2019 உலகக் கிண்ணத்திற்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான ஒரு நிலைமையில், 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி 30 ஒருநாள் போட்டிகளிலும், 12 டி-20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது. எனவே, உலகக் கிண்ணத்திற்கு இன்னும் ஒரு வருட இடைவெளி இருக்க, இலங்கை அணியின் இந்த தோல்விகள் நிச்சயம் பாரிய பின்னடைவைக் கொடுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அதேபோல, 2015 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு வீரர்களை அடிக்கடி மாற்றுவது, சரியான வாய்ப்புக்களை தொடர்ச்சியாக வழங்காமை, அணித் தலைமைத்துவத்தில் மாற்றம், வீரர்களின் தொடர் உபாதைகள் உள்ளிட்ட காரணங்கள் தான் இலங்கை அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல முடியாமல் போனதற்கு பிரதான காரணங்களாக அமைந்தன.

எனவே, இவையனைத்துக்கும் தேர்வுக் குழுவின் மோசமான தேர்வா? அல்லது 2016 முதல் நிர்வாகத்தில் இருக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கையாலாகாத நிர்வாகமா காரணம்? என்பதை தற்போதாவது சிந்திக்க வேண்டும்.

எது எவ்வாறாயினும், விட்ட தவறுகளை தொடர்ந்து விடாமல், திறமைக்கும் தகுதிக்கும் முன்னுரிமை கொடுத்து வீரர்களை உரிய வழிகாட்டலுடன் கையாண்டால் நிச்சயம் 2019 உலகக் கிண்ணத்திற்கான உறுதியான அணியொன்றை கட்டியெழுப்ப முடியும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<