இந்த ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 10 தமிழ் பேசும் வீரர்கள்

669

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட தேசிய மெய்வல்லுனர் குழாம் நேற்று (18) அறவிக்கப்பட்டது. இதில் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களுக்கு தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அடுத்த வருடம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு Super Pool, Elite Pool, National Pool என மூன்று தேசிய மெய்வல்லுனர் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ள.

ஆசிய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு நான்காமிடம்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப்

அண்மைக்காலங்களில் சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் நடைபெற்ற போட்டித் தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, பொத்துவிலைச் சேர்ந்த அஷ்ரப் (4x100), அட்டாளைச்சேனையை சேர்ந்த எம்..எம் மிப்ரான் (நீளம் பாய்தல்), நிந்தவூரைச் சேர்ந்த ஆஷிக் (பரிதி வட்டம் எறிதல்)  மற்றும் மொஹமட் அசான் (டெகத்லன்), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புவிதரன் (கோலூன்றிப் பாய்தல்) மற்றும் அனித்தா ஜெகதீஸ்வரன் (கோலூன்றிப் பாய்தல்), நிகவெரட்டியவைச் சேர்ந்த மொஹமட் சபான் (200 மீற்றர்), மலையகத்தைச் சேர்ந்த சண்முகேஸ்வரன் (10 ஆயிரம் மீற்றர்), சந்திரதாசன் (3000 மீற்றர் தடைதாண்டல்), வெலிகமையைச் சேர்ந்த சப்ரின் அஹமட் (முப்பாய்ச்சல்) உள்ளிட்ட வீரர்களால் அண்மைக்காலமாக பெற்றுக்கொண்ட வெற்றிகள் மற்றும் அடைவுமட்டங்கள் அந்தந்த மாகாணங்களுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்திருந்ததுடன், தேசிய மட்டத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி காலடி எடுத்துவைப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

  • சிறப்புக் குழுவில் அஷ்ரப் (Super Pool)

சுமார் ஒரு தசாப்தமாக கிழக்கு மாகாணத்தைப் பிரிநிதித்துவப்படுத்தி சர்வதேச மற்றும் உள்ளூர் மெய்வல்லுனர் அரங்கில் 100, 200 மீற்றர் மற்றும் 4X100 அஞ்சலோட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற பொத்துவிலைச் சேர்ந்த .எல்.எம் அஷ்ரப், அவுஸ்திரேலியாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றிருந்தார். குறித்த போட்டியில் இலங்கை அணி, புதிய தேசிய சாதனையுடன் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

முன்னதாக, கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றிருந்த அஷ்ரப், அதன்பிறகு நடைபெற்ற கிரிகிஸ்தான் திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றி ஆண்களுக் கான 100 மீற்றரில் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணி புதிய சாதனை

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21 ஆவது பொதுநலவாய

இதேவேளை, அண்மையில் நிறைவுக்கு வந்த பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடர், தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்களிலும் அஷ்ரப் வெற்றிகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, அண்மைக்காலமாக தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுவந்த அஷ்ரப், இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவில் இடம்பிடித்துள்ளார்.

  • ஒரே குழுவில் மிப்ரான், சப்ரின்

கடந்த 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வருடத்தின் சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை பெற்றுக்கொண்ட அட்டாளைச்சேனையை சேர்ந்த எம்..எம் மிப்ரான், இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள உயர் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கான எலைட் குழுவுக்கு (Elite Pool) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

எனினும், 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகள் மிப்ரானுக்கு தேசிய மட்டப் போட்டிகளில் சோபிக்க முடியவில்லை. எனினும், கடந்த வருடம் தென்கொரியாவில் நடைபெற்ற திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பையும் மிப்ரான் பெற்றுக்கொண்டார்.

இறுதியாக நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட மிப்ரானுக்கு, கடந்த 2 வருடங்களாக தேசிய மட்டத்தில் எந்தவொரு வெற்றியையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

எனவே, தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற மிப்ரானுக்கு, எதிர்வரும் காலங்களில் தனது வழமையான திறமையினை வெளிப்படுத்தினால் தேசிய மட்டப் போட்டிகளில் மீண்டும் வெற்றிபெறலாம் என்பது அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகும்.

புதிய அனுபவத்துடன் சொந்த தேசிய சாதனையை முறியடித்த அனித்தா

கோலூன்றிப் பாய்தலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தானே தனது சொந்த தேசிய சாதனை முறியடிக்கும்

இதேவேளை, தென் மாகாணம், வெலிகமையிலிருந்து தேசிய மெய்வல்லுனர் அரங்கிற்கு காலடிவைத்த சப்ரின் அஹமட், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார். அவர் இவ்வருடம் நடைபெற்ற பெரும்பாலான மெய்வல்லுனர் தொடர்களில் முப்பாய்ச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு தனது சிறந்த தூரத்தைப் பதிவுசெய்து தேசிய குழாமிலும் இடம்பிடித்துள்ளார்.

இறுதியாக நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் தொடரில் இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சப்ரின் அஹமட், 16.22 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இது சப்ரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த தூரமாகவும் பதிவாகியது.

  • தேசிய குழாத்தில் 7 தமிழ் பேசும் வீரர்கள்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற தேசிய மட்டப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட மற்றும் ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்திய ஆறு தமிழ் பேசும் வீரர்கள் தேசிய குழாத்தில் (National Pool) இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 10 வருடங்களாக தேசிய மெய்வல்லுனர் அரங்கில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற அம்பாறை மாவட்டம் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இஸட்.ரி.எம் ஆஷிக், இவ்வருடம் நடைபெற்ற சகல தேசிய மட்ட தொடர்களிலும் பரிதி வட்டம் எறிதலில் வெற்றிகளைப் பதிவு செய்த வீரராக இடம்பிடித்தார்.

வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனரில் மலையக வீரர் சண்முகேஸ்வரனுக்கு தங்கப் பதக்கம்

வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி

அண்மையில் நிறைவுக்கு வந்த பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் தொடரில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அவர், கடந்த மாதம் நடைபெற்ற 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 45.23 மீற்றர் தூரத்தை எறிந்து தனது சிறந்த தூரப் பெறுமதியுடன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வட மாகாணத்துக்கு தேசிய மட்டத்தில் கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கின்ற நட்சத்திரமாக கோலூன்றிப் பாய்தலில் வருடந்தோறும் சாதனைகளை படைத்து வருகின்ற அனித்தா ஜெகதீஸ்வரன், இம்முறையும் தேசிய குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை முறியடித்த அனித்தா, காலில் ஏற்பட்ட காயத்தினால் அதன்பிறகு நடைபெற்ற எந்தவொரு போட்டியிலும் பிரகாசிக்கவில்லை.

இதேநேரம், இவ்வருடம் முதல் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 அம்ச போட்டிகளில் (டெகத்லன்) பங்குபற்றி வருகின்ற நிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் அசாம், முதற்தடவையாக தேசிய குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

அண்மையில்  நிறைவுக்கு வந்த பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 6,428 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்ற அசாம், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டியிலும், கடந்த மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • மலையக வீரர்களுக்கும் வாய்ப்பு

அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஹட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன், முதற்தடவையாக தேசிய குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும், முப்படை மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்த சண்முகேஸ்வரன், இறுதியாக நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் தொடரில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதற்கு முன்னதாக, கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தி போட்டியிட்ட அவர், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேசிய நகர்வல ஓட்டத்தின் சம்பியனான மஸ்கெலியாவைச் சேர்ந்த எஸ். சந்திரதாசனும் முதற்தடவையாக தேசிய குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அவர், அண்மைக்காலமாக பல வெற்றிகளையும் பதிவுசெய்திருந்தார்.

அதுமாத்திரமின்றி, கடந்த மார்ச் மாதம் பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டித் தொடரிலும் சந்திரதாசன் இலங்கையைப் பிரநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • புவிதரன், சபானுக்கு அதிஷ்டம்

வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மைக்காலமாக பாடசாலை மட்டப் போட்டிகளில் கோலூன்றிப் பாய்தலில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் . புவிதரன், முதற்தடவையாக தேசிய குழாமில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் (4.70 மீற்றர்) புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்த . புவிதரன், கடந்த மே மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டிகளில் முதற்தடவையாக கலந்து கொண்டிருந்தார்.

இதன்படி, அந்தப் போட்டியிலும் 4.70 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்த அவர், முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் முதலாவது வெற்றியினைப் பதிவுசெய்தார்.

இதேவேளை, கனிஷ்ட மெய்வல்லுனர் அரங்கில் ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனான நிகவெரட்டியவைச் சேர்ந்த மொஹமட் சபானும் முதற்தடவையாக தேசிய குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

கனிஷ்ட அதிவேக வீரர் மொஹமட் சபானுக்கு 200 மீற்றரில் தங்கப் பதக்கம்

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள

கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 200 மீற்றரில் முதற்தடவையாக களமிறங்கிய சபான், தேசிய மட்டத்தில் முன்னிலை உள்ள வீரர்களையெல்லாம் பின்தள்ளி தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 106 வீரர்களுக்கு வாய்ப்பு

எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் நடைபெறவுள்ள தகுதிகாண் போட்டிகள் வரை இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மூன்று குழாத்திலும் 106 வீர, வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். அத்துடன், பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாவில் முதல் 6 இடங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்கள் சிறப்புக் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தால் வழங்கப்படுகின்ற புள்ளிகளில், 1100 என்ற இலக்கை தாண்டிய வீரர்களுக்கும் இந்தக் குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு இல்லாவிட்டால், குறித்த வீரர்கள் சர்வதேச மெய்வல்லுனர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற வேண்டும்.

மேலும், சர்வதேச அரங்கில் இளம் வீரர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றவர்களும், கனிஷ; வீரர்களில் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்ற வீரர்களும் சிறப்புக் குழுவில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதில் 19 வீரர்களும், 5 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.

  • கனிஷ்ட வீரர்களுக்கு வாய்ப்பு

உலக இளையோர் தரவரிசையில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.14 மீற்றர் உயரத்தைத் தாவி நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள கொழும்பு றோயல் கல்லூரி வீரர் செனிரு அமரசிங்க மற்றும் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் ஆசிய கனிஷ்ட சம்பியனும், உலக கனிஷ்ட தரவரிசையில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ள குளியாபிட்டிய மத்திய கல்லூரி மாணவி பாரமி வசந்தி மாரிஸ்டெல்லாவும் சிறப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், பொதுநலவாய மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக தகுதியினைப் பெற்றுக்கொண்ட வீரர்களை உள்ளடக்கிய இரண்டாவது குழாத்தில் 21 வீர வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இதில் 12 வீரர்களும், 9 வீராங்கனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த வீரர்கள் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் புள்ளிகள் முறையில் 1050 என்ற அடைவு மட்டத்தினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இதேவேளை, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற தேசிய மட்டப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அல்லது ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் மூன்றாவது குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு பெயரிடப்பட்டுள்ள மூன்றாவது குழாத்தில் 31 வீரர்கள், 30 வீராங்கனைகள் உள்ளடங்கலாக 61 பேர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் தொடரில் கிழக்கு வீரர்கள் அபாரம்

இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்.. முன்னதாக பெண்களுக்கான 1,500 …

இதேவேளை, இவ்வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்துக்கான வீரர்கள் தெரிவு குறித்து இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில்,

”சுப்பர் குழு மற்றும் எலைட் குழுவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவும், தேசிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு போசாக்கு உணவுகளும் வழங்கப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதேபோல, தேசிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வெளி மாவட்டங்களில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வார்களாயின், அவர்களுக்கான உணவு வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்றார்.

அத்துடன், பொதுநலவாய மற்றும் ஆசிய விளையாட்டு விழாக்களில் மெய்வல்லுனர் வீரர்களுக்கு பதக்கங்களை வெற்றிகொள்ள முடியாது போனாலும், கடந்த இரண்டு வருடங்களில் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் எமது வீரர்களின் திறமைகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், தேசிய மெய்வல்லுனர் சங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.