வனிந்துவிடமிருந்து பங்களாதேஷ் வீரர்கள் தப்புவார்களா?

Sri Lanka Tour of Bangladesh - 2021

128

வனிந்து ஹசரங்க பந்துவீச்சு மூலம் எந்த நேரத்திலும் போட்டியின் முடிவை மாற்றும் திறன் கொண்டவர் எனவும், அவரிடம் இருந்து பங்களாதேஷ் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் ஆய்வாளரான ஸ்ரீனிவாஸ் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தத் தயாராகும் இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க தொடர்பில் முழு கிரிக்கெட் உலகமும் அவதானத்துடன் இருந்து வருகிறது.

புதிய திட்டங்களுடன் பங்களாதேஷுக்கு எதிராக களமிறங்கும் இலங்கை

இந்த நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைபங்களாதேஷ் அணிகளுக்கிடையில் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வனிந்து ஹசரங்கவின் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் எவ்வாறு தயாராகிறார்கள் என்பது குறித்த ஒரு கட்டுரையை கிரிக்பஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.  

பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்களுக்கு முகங்கொடுப்பதில் தடுமாற்றத்தை சந்தித்து வருவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது. . 

ஏனெனில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியிலோ அல்லது உள்ளூர் போட்டிகளிலோ எந்தவொரு லெக் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர்களும் இல்லை என்பதுதான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது

தற்போதைய சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளை எடுத்துக்கொண்டால் வனிந்து ஹசரங்க முதன்மை பந்துவீச்சாளராக வலம்வந்து கொண்டிருக்கின்றார்.

கடந்த 2017இல் காலியில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அவர், ஹெட்ரிக் விக்கெட் எடுத்து அறிமுக ஒருநாள் போட்டியில் ஹெட்ரிக் சாதனை படைத்த இலங்கையின் முதலாவது சுழல் பந்துவீச்சாளராகவும், மூன்றாவது பந்துவீச்சாளராகவும் வரலாறு படைத்தார்.  

துடுப்பாட்ட வீரர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கும், அவர்களது விக்கெட்டை எடுப்பதற்கும் வனிந்து ஹசரங்க கூக்ளி பந்துவீச்சை முக்கிய துரும்புச் சீட்டாகப் பயன்படுத்துவார்.

அவரது கூக்ளி பந்து ஷீட் கான் மற்றும் ஆடம் சம்பா ஆகிய வீரர்கள் பந்தை சுழற்றும் விதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது.

ஒரு சுழல்பந்துவீச்சாளர் கூக்ளி பந்தொன்றை வீசும் போது, பந்தை கையின் பின்னால் வைத்துத் தான் வீசுவார். இதனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்து தெரியாததால் அதை அடையாளம் காண்பது கடினம். அதிலும், துடுப்பாட்ட வீரர்கள் கூக்ளி பந்தொன்றை எதிர்கொள்கின்ற போது பந்துவீச்சாளரின் கையைத் தான் பார்ப்பதே ஒழிய பந்து எவ்வாறு வருகின்றது என்பதைப் பார்க்கமாட்டார்கள்

ஆனால், வனிந்து ஹசரங்கவிடம் காணப்படுகின்ற தனித்துவம் என்னவென்றால், கூக்ளி பந்தொன்றை வீசும்போது அவர் தனது நடுவிரைப் பயன்படுத்தி ஒரு சாதாரண சுழல் பந்துவீச்சாளரைப் போலவே பந்துவீசுவார்.

இலங்கைக்கு எதிராக மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கும் சகீப்

இந்த நிலையில், வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சு தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் ஆய்வாளர்களில் ஒருவரான ஸ்ரீனிவாஸ் சந்திரசேகரன் கிரிக்பஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கையில்,

வனிந்து ஹசரங்க பந்துவீச்சு மூலம் எந்த நேரத்திலும் போட்டியின் முடிவை மாற்றும் திறன் கொண்டவர். அவரிடம் இருந்து பங்களாதேஷ் துடுப்பட்ட வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் நிச்சயமாக ஒரு அச்சுறுத்தல் மிக்க பந்துவீச்சாளர்.

வனிந்துவின் பந்துவீச்சுப் பாணியானது ரஷீட் கான், அடம் சம்பாவின் கூக்ளி பந்துவீச்சை ஒத்ததாகக் காணப்படுகின்றது. தற்போதைய கிரிக்கெட்டில் கூக்ளி பந்து இவ்வாறு தான் வீசப்படுகின்றது. எமக்கு அவரது கையைப் பார்த்து துடுப்பெடுத்தாடுவது மிகவும் கடினம். அவ்வாறு பந்தை இனங்கண்டு கொள்ள முடியாவிட்டால் அது கூக்ளி பந்துதான் என மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்

இலங்கை அணிக்கு புதிய சுழல்பந்து பயிற்சியாளர்

குறிப்பாக, வலதுகை துடுப்பாட்ட வீரர்கள் இதுகுறித்து அவதானம் செலுத்த வேண்டும். அவ்வாறு கூக்ளி பந்துக்கு முகங்கொடுப்பது கடினம் என்றால், வேகமான துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொள்ளாமல் ஒற்றை அல்லது இரண்டு ஓட்டங்களை எடுப்பதற்கு முயற்சி செய்வது சிறந்தது என அவர் தெரிவித்தார்.

IPL போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடமையாற்றியுள்ள ஸ்ரீனிவாஸ் சந்திரசேகரன், மிக விரைவில் பங்களாதேஷ் அணியுடன் இணைந்துகொண்டு, வனிந்துவின் பந்துவீச்சு தொடர்பில் அந்த அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…