டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் சறுக்கியது இலங்கை

Pakistan Tour of Sri Lanka 2022

1483

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்து 6ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

சுற்றுலா பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (20) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 342 ஓட்டங்கள் என்ற சாதனை இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, அப்துல்லாஹ் சபீக்கின் அபார சதத்தின் உதவியால் 4 விக்கெட்டுகளால் வரலாற்று வெற்றியைப் பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1க்கு 0 என முன்னிலை பெற்றுக்கொண்டது.

இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 54.17 சதவீதத்துடன் 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 52.38 சதவீதத்துடன் 4ஆவது இடத்திலும் காணப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 48.15 சதவீதத்துடன் 6ஆவது இடத்திற்கு சறுக்கியுள்ளது.

நடைபெறும் 2021 – 2023 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 4 போட்டிகளில் வெற்றியீட்டி, 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதில் ஒரு போட்டியை சமநிலை செய்துள்ளது.

இதனிடையே, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, இந்த வெற்றியின் மூலம் 58.33 வெற்றி சதவீதத்துடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை, தற்போதுள்ள புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் 71.43 வெற்றி சதவீதத்துடன் தென்னாபிரிக்கா அணி முதலிடத்தில் நீடிக்கிறது. 70 சதவீதத்துடன் அவுஸ்திரேலிய அணி 2ஆம் இடத்தில் காணப்படுகிறது.

52.08 சதவீதத்துடன் இந்திய அணி 4ஆம் இடத்திலும் மேற்கிந்திய தீவுகள் அணி 5ஆம் இடத்திலும் உள்ளது. 7ஆம் இடத்தில் இங்கிலாந்து அணியும், 8ஆம் இடத்தில் நடப்புச் சம்பியன் நியூசிலாந்து அணியும், கடைசி இடத்தில் பங்களாதேஷ் அணியும் காணப்படுகின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<