ஹைதராபாத்தை மூழ்கடித்தது பெங்களூர்

225
RCB vs SRH

இந்த வருட ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 4ஆவது போட்டியில் நேற்று விராத் கொஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணி டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது.

பெங்களூர் சின்னஸ்வாமி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற  சன் ரயிசஸ்  ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் முதலில் பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியை துடுப்பாட அழைப்பு விடுத்தார்.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 227 ஓட்டங்களைக் குவித்தது. இந்த அணி சார்பாக எ.பி டி விளியர்ஸ் மிக அபாரமாக விளையாடி 42 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 82 ஓட்டங்களையும், விராத் கொஹ்லி 51 பந்துகளில் 75 ஓட்டங்களையும், சர்பராஸ் கான் ஆட்டம் இழக்காமல் 10 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர். பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியின் இனிங்சில் 2ஆவது விக்கட்டுக்காக எ.பி டி விளியர்ஸ் மற்றும் விராத் கொஹ்லி ஆகியோர் 157 ஓட்டங்களைப் பகிர்ந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஹைதராபாத் அணியின் சார்பில் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைபற்றினர்.

இதனை அடுத்து 228 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பாடிய சன் ரயிசஸ்  ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இந்த அணி சார்பில் டேவிட் வோர்னர் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 58 ஓட்டங்களையும், அஷிஸ் ரெட்டி 18 பந்துகளில் 32 ஓட்டங்களையும், கர்ன் ஷர்மா ஆட்டம் இழக்காமல் 17 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பெங்களூர் அணியின் பந்துவீச்சில் சஹால் மற்றும் ஷேன் வொட்சன் ஆகியோர் 2 விக்கட்டுகளையும் பிரவீஸ் ரசூல் மற்றும் எடம் மிலேன்  ஆகியோர் தலா ஒரு விக்கட்டு வீதமும் கைபற்றினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியின் எ.பி டி விளியர்ஸ்  தெரிவானார்.