T20I தொடர் வெற்றியை மயிரிழையில் தவறவிட்ட இலங்கை

Sri Lanka tour of West Indies 2021

407

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில், சுழல் பந்துவீச்சு மூலம் வெற்றியை நெருங்கிய போதும், பெபியன் எலனின் சகலதுறை பிரகாசிப்பால், தொடரை 2-1 என இலங்கை அணி கைநழுவவிட்டது.

போட்டியின் நாண சுழற்சியில் வெற்றிபெற்ற  இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி மாற்றங்களின்றி களமிறங்கிய நிலையில், இரண்டாவது போட்டியில் துடுப்பாட்டத்தில் சறுக்கியிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, மேலதிக துடுப்பாட்ட வீரராக ரோவ்மன் பவலை இணைத்திருந்தது.

மேஜர் T20 லீக்கில்துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மினோத், அஷான் மற்றும் அஞ்சலோ பெரேரா

இலங்கை அணி

நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, பெதும் நிசங்க, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), அஷேன் பண்டார, திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, அகில தனன்ஜய, துஷ்மந்த சமீர, லக்ஷான் சந்தகன்

மேற்கிந்திய தீவுகள் அணி

லெண்டல் சிம்மன்ஸ், எவின் லிவிஸ், ரோவ்மன் பவல், க்ரிஸ் கெயில், நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (தலைவர்), ஜேசன் ஹோல்டர், பெபியன் எலன், டுவைன் பிராவோ, கெவின் சென்கிலையர், ஒபெட் மெக்கோய்

இரண்டாவது T20I போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பம் சிறப்பாக இருந்த போதிலும், இந்தப் போட்டியில் சோபிக்கத்தவறியது. குறிப்பாக மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை அணி கையாண்ட சுழல் பந்துவீச்சை தங்களுடைய ஆயுதமாக மாற்றிக்கொண்டது. 

பவர் ப்ளே ஓவர்களில் சுழல் பந்துவீச்சாளர்களை அறிமுகப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் பெதும் நிசங்க ஆகியோரின் விக்கெட்டுகளை ஆரம்பத்தில் கைப்பற்றியது. முதல் மூன்று விக்கெட்டுகளை 27 ஓட்டங்களுக்கு இழந்த இலங்கை அணி, தொடர்ச்சியாக நான்காவது விக்கெட்டை 46 ஓட்டங்களுக்கு இழந்தது. அஞ்செலோ மெதிவ்ஸ் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும், இன்னலான தருணத்திலிருந்து அஷேன் பண்டார மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் அணியை மீட்டனர். இவர்கள் இருவரும் இறுதிவரை விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்கமால் துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 131 ஆக அதிகரித்தனர்.

இவர்கள், 85 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், T20I போட்டிகளில் இலங்கை அணி ஐந்தாவது விக்கெட்டுக்காக பெற்ற அதிகூடிய இணைப்பாட்ட சாதனையை பதிவுசெய்தனர். இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I போட்டியில், அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் சாமர கபுகெதர ஆகியோர் 80 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர். 

தினேஷ் சந்திமால் தன்னுடைய 4வது T20I அரைச்சதத்தை பதிவுசெய்து, 46 பந்துகளில் 3 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அஷேன் பண்டார 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 35 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றார். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், பெபியன் எலன் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய போதும், 19 ஓவர் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு லெண்டல் சிம்மன்ஸ் மற்றும் எவின் லிவிஸ் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். எனினும், வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சு ஆரம்பத்துக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாற தொடங்கியது. சரியான இடைவெளிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும், கடைசி இரண்டு ஓவர்களில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், பெபியன் எலன், அகில தனன்ஜய வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி வெற்றியை உறுதிசெய்தார்.

இலங்கை டெஸ்ட் அணியில் இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்க

லெண்டல் சிம்மன்ஸ் அதிகபட்சமாக 26 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, நிக்கோலஸ் பூரன் 23 ஓட்டங்களையும், பெபியன் எலன் 6 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் லக்ஷான் சந்தகன் 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை அணி சுழல் பந்துவீச்சாளர்கள் பலத்துடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தங்களுடைய முதல் T20I தொடர் வெற்றியை நெருங்கிய போதிலும், துரதிஷ்டவசமாக குறித்த விடயம் சாத்தியமாகவில்லை. அதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என தொடரை வெற்றிக்கொண்டது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<