ஆசிய ரக்பி சம்மேளனத்தினால் இலங்கைக்கு தடை

62

இலங்கை ரக்பி சம்மேளனத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆசிய ரக்பி சம்மேளனம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 9ஆம் திகதி தாய்லாந்தின் புகெட் நகரில் இடம்பெற்ற ஆசிய ரக்பி சம்மேளன செயற்குழு கூட்டத்தில் இலங்கையின் ரக்பி அங்கத்துவத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

2022 ஏப்ரல் 20 முதல் 24ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்த ஆசிய ரக்பி சம்மேளனத்தின் பிரதிநிதி சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் ஆசிய ரக்பி சம்மேளன செயற்குழுவின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இலங்கை ரக்பி சம்மேளனத்தின் தேர்தலை நடத்துவதற்கான உடன்பாட்டை எட்டுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர், தேசிய ஒலிம்பிக் குழு, விளையாட்டுக் கழகங்கள் மற்றும் ஏனைய தரப்பினரை ஆசிய ரக்பி சம்மேளன பிரதிநிதிகள் சந்தித்திருந்தனர்.

இலங்கை ரக்பி சம்மேளனத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

இதில் இலங்கை ரக்பி தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, விளையாட்டின் நடுநிலையையும், தரத்தையும் பேணுவதற்காக தேசிய ஒலிம்பிக் குழுவினால் ரக்பி சம்மேளன தேர்தலை நடத்துவதற்கு நிர்வாகத்தின் விருப்பத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆசிய ரக்பி சம்மேளனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தேனுக விதானகமகேவுக்கு கடந்த 29ஆம் திகதி கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது.

இதில் தேசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து தேர்தல் தொடர்பான தகவல்களை விளையாட்டு அமைச்சுக்கு வழங்கவும், வெளிப்படையான தேர்தல்களுக்காக ஆசிய மற்றும் உலக ரக்பி கூட்டமைப்பு கண்காணிப்பு மையத்தை அமைக்கவும் அவர்கள் உறுதி அளித்தனர்.

எவ்வாறாயினும், ஆசிய ரக்பி சம்மேளனமானது நியாயம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்தி புதிய தேர்தல் முடியும் வரை இலங்கை ரக்பி சம்மேளனனத்தின் அங்கத்துவத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை செய்துள்ளது.

இதன்படி, தடை நீக்கப்படும் வரை இலங்கை தேசிய அல்லது விளையாட்டுக் கழக ரக்பி அணிகள் எந்தவொரு பிராந்திய மட்ட ரக்பி போட்டியிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது.

இதனிடையே, ஆசிய ரக்பி சம்மேளனத்தின் அறிவிப்பு தொடர்பான விளையாட்டுத்துறை அமைச்சரின் பதில் கடிதம் மே 06ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<