இலங்கை டெஸ்ட் அணியில் இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்க

1564
pathum nissanka

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்றவரும், தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்று வருகின்ற இருபதுக்கு 20 தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வருகின்ற 22 வயதான வலதுகை துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க இலங்கை டெஸ்ட் அணிக்கு முதல்முறையாக அழைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கை அணிக்காக அண்மைக்கலாமாக விளையாடி வருகின்ற குசல் மெண்டிஸ், குசல் பெரேரா மற்றும் டில்ருவன் பெரேரா உள்ளிட்ட வீரர்கள் டெஸ்ட் குழாத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

>> 2019ம் ஆண்டுக்கு பின்னர் முதல் T20I வெற்றியை ருசித்த இலங்கை

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் மூவகைப் போட்டிகளும் (T20i, ஒருநாள், டெஸ்ட்) கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகின்றது. இதில் தற்போது இரண்டு இருபதுக்கு 20 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மூன்றாவது போட்டி 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (06) இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை அணிக் குழாமில் 7 துடுப்பாட்ட வீரர்கள், 3 சகலதுறை வீரர்கள், 3 சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் 4 வேகப் பந்துவீச்சாளர்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடவுச்சீட்டினை தவறவிட்ட காரணத்தில் இருபதுக்கு 20 தொடரில் விளையாட முடியாமல் போன சகலதுறை வீரரான தசுன் ஷானக்க இலங்கை டெஸ்ட் அணியில் பெயரிடப்பட்டுள்ளார்.

>> தசுன் ஷானக்க மேற்கிந்திய தீவுகள் செல்வது உறுதி

இந்த நிலையில், இறுதியாக மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பிராகாசித்து 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1க்கு 1 என சமநிலைப்படுத்த முக்கிய காரணமாக விளங்கிய குசல் பெரேரா உபாதையினாலும், வேகப் பந்துவீச்சாளர் லஹிரு குமார கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடையாததன் காரணத்தினாலும் இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம்பெறவில்லை.

இதனிடையே, இலங்கை டெஸ்ட் அணிக்காக அண்மைக்காலமாக தொடர்ந்து விளையாடி வந்த அனுபவ சுழல் பந்துவீச்சாளரான டில்ருவன் பெரேரா, உடற்தகுதி பரிசோதனையில் தகுதிபெறாத காரணத்தினால் மேற்கிந்திய டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை.

அத்துடன், இலங்கை தேர்வாளர்களால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சற்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ள குசல் மெண்டிஸுக்கும் டெஸ்ட் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

>> பெதும் நிஸ்ஸங்கவின் திறமையைக்கண்டு வியக்கும் மிக்கி ஆர்தர்!

எதுஎவ்வாறாயினும், குசல் மெண்டிஸின் இடத்தில் இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்க களமிறங்குவார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றுள்ள லஹிரு திரிமான்ன, தனன்ஜய டி சில்வா, விஷ்வ பெர்னாண்டோ, ரொஷேன் சில்வா மற்றும் லசித் எம்புல்தெனிய உள்ளிட்ட வீரர்கள் இன்று (06) இரவு மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்பட்டுச் செல்வார்கள் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை டெஸ்ட் அணி விபரம்:

திமுத் கருணாரட்ன (தலைவர்) தசுன் ஷானக்க, பெதும் நிஸ்ஸங்க, ஓசத பெர்ணாண்டோ, லஹிரு திரிமான்ன, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் டிக்வெல்ல, ரொஷேன் சில்வா, தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, ரமேஷ் மென்டிஸ், விஷ்வ பெர்னாண்டோ, சுரங்க லக்மால், அசித பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர மற்றும் லசித் எம்புல்தெனிய

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<