இளம் வீரர்களின் தன்னம்பிக்கை வெற்றிக்கு உதவியது – தசுன் ஷானக்க

 

பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணியில் உள்ள இளம் வீரர்களின் முன் ஆயத்தமும், தன்னம்பிக்கையும் தான் கைகொடுத்திருந்தது என இலங்கை டி-20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.  

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று (05) லாஹூரில் நடைபெற்ற முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 64 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது.

முதல் நிலை T20 அணியை வீழ்த்தி சாதித்த இளம் இலங்கை அணி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 …

தனுஷ்க குணதிலக்கவின் அரைச் சதம் மற்றும் இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சு என்பவற்றின் உதவியுடன் வெற்றியீட்டிய இலங்கை அணி, 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியை டி20 கிரிக்கெட் போட்டியொன்றில் தோற்கடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 

அத்துடன், டி20 போட்டியொன்றில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய முதல் நாடாகவும், சொந்த மண்ணில் டி-20 போட்டியொன்றில் அந்த அணி பெற்றுக் கொண்ட குறைந்தபட்ச ஓட்டங்களாகவும் இது பதிவாகியது. 

இந்த நிலையில், இலங்கை அணிக்காக முதல் முறையாக தலைவராகச் செயற்பட்டு பெற்றுக் கொண்ட இந்த வெற்றி குறித்து இலங்கை டி20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்து தெரிவித்த போது, 

இந்தப் போட்டிக்கு நாங்கள் சிறந்த முறையில் ஆயத்தமாகி இருந்தோம். நாங்கள் ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்ததுடன், 3 ஆவது போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை வந்தோம். 

அணியில் இன்னுமொரு சுழல் பந்துவீச்சாளர் இடம்பெற்றிருந்தால் அந்தப் போட்டியிலும் நாங்கள் தான் வெற்றி பெற்றிருப்போம் என போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நான் தெரிவித்திருந்தேன். 

ஆனால் இந்தப் போட்டியை எடுத்துக் கொண்டால் எமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். இதனால் எதரிணியனரை குறைந்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடிந்தது. 

உண்மையில் அணியில் உள்ள இளம் வீரர்கள் போட்டி பற்றிய சிறப்பானதொரு முன் ஆயத்தைப் பெற்றுக் கொண்ட காரணத்தினால் தான் வெற்றிபெற முடிந்தது. அதுமாத்திரமின்றி, உலகின் முதல்நிலை டி20 அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட வந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்த எவ்வாறான திட்டத்துடன் களமிறங்கினீர்கள் என எழுப்பிய கேள்விக்கு கருத்து அவர் கருத்து வெளியிடுகையில், 

உண்மையில் இன்னும் 10 அல்லது 15 ஓட்டங்கள் குறைவாக பெற்றுக் கொண்டோம் என நாங்கள் துடுப்பெடுத்தாடிய பிறகு நான் நினைத்தேன். ஆனால் பந்து சற்று கீழாக துடுப்பு மட்டைய நோக்கி செல்வதை அவதானித்தேன். அதன்பிறகு பந்துவீசும் போது நாங்கள் எதிர்பார்த்ததைவிட துடுப்பெடுத்தாடுவதற்கு சற்று கடினம் என்பதை உணர்ந்தோம். 

அதுமாத்திரமின்றி, தனுஷ்க குணதிலக்கவும், அவிஷ்க பெர்னாண்டோவும் முதல் விக்கெட்டுக்காகப் பெற்றுக் கொண்ட இணைப்பாட்டம் தான் எமக்கு நம்பிக்கை கொடுத்தது. அதேபோல, தமது முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடிய பானுக்க ராஜபக்ஷவும் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடியிருந்தார். புதுமுக வீரர் ஒருவரை போன்றல்லாது அனுபவமிக்க வீரராக அவர் தன்னுடைய பொறுப்பை செய்து கொடுத்தார். 

இலங்கை டி-20 அணியில் திருப்பம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிடும் தசுன் சானக்க

லசித் மாலிங்கவின் ஆலோசனைகளுடன் அணியை வழி நடத்துவது எனக்கு இலகுவாக …

எனவே நான் ஏற்கனவே கூறியிருந்ததைப் போல எம்மிடம் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கான வாய்ப்பு சரியான நேரத்தில் கிடைத்தால் எமது கிரிக்கெட் இதைவிட நல்ல நிலையில் இருந்திருக்கும் எனவே எதிர்வரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட் இன்னும் முன்னேற்றம் காணும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என தெரிவித்தார். 

பாகிஸ்தான் அணிக்கெதிராக ஆறு வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணி பெற்றுக்கொண்ட முதலாவது டி20 வெற்றி குறித்து பதிலளித்த அவர், 

இந்தப் போட்டிக்கு வருவதற்கு முன் எனக்கு கிடைத்த அணி குறித்து மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையுடன் தான் எமது திட்டத்தை முன்னெடுத்தோம். இதற்காக நாங்கள் ஒருசில உபாயங்கள் மற்றும் நுணுக்கங்களையும் கையாண்டோம். எனவே அணித் தலைவராக நான் மிகப் பெரிய வெற்றியையும் இதன் மூலம் பெற்றுக் கொண்டேன். 

அத்துடன், எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் சிறந்த முறையில் தயாராகி தொடரைக் கைப்பற்றி இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுப்பதற்கு முயற்சிப்போம் என அவர் கூறினார். 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…