தரம் 8 முதல் விளையாட்டுப் பாடசாலைகளுக்கான மாணவர் அனுமதி

401
Separate Class for Sports

விளையாட்டுப் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிக்கவும், அந்தப் பாடசாலைகளுக்கான நிர்வாகம் மற்றும் நிதி உதவிகள் உள்ளிட்ட வசதிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் விசேட சுற்றறிக்கையொன்று நாட்டின் சகல மாகாணங்கள் மற்றும் வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள், விளையாட்டுப் பாடசாலைகள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

>> இலங்கையில் 25 விளையாட்டுப் பாடசாலைகள் உருவாக்கப்படும் – அமைச்சர் நாமல்

இதன்படி, இதுவரை காலமும் செயலற்ற நிலையில் காணப்பட்ட விளையாட்டுப் பாடசாலைகளை புதுப்பிக்கும் முயற்சியில் கல்வி அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அமைச்சு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. 

இதன்படி, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வழிகாட்டலுடன் இந்த நாட்டின் விளையாட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டத்தின் விசேட சுற்றறிக்கை கடந்த 10ஆம் திகதி வெளியிடப்பட்டது.

நாட்டின் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 25 விளையாட்டுப் பாடசாலைகளை ஸ்தாபிக்கவும், அந்தப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யத் தேவையான எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆலோசிக்கவும் விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் கடந்த வாரம் இடம்பெற்றது.

இதன்போது, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுப் பாடசாலைகளின் அதிபர்கள், கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்

>> Video – விளையாட்டில் அரசியல் துடைத்தெறியப்படும்..! Namal Rajapaksa

இந்த சந்திப்பின் போது பாடசாலை மாணவர்களின் விளையாட்டு திறமைகளை மேம்படுத்தி அவர்களுக்கு பொருத்தமான விளையாட்டு அறிவினைப் பெற்றுக் கொடுக்கின்ற பாடசாலை சுழல் ஒன்றை ஏற்படுத்தவும், அதன்மூலம் சர்வதேசத்தை வெற்றி கொள்கின்ற திறமைமிக்க வீரர்களை பாடசாலைகளில் இருந்து உருவாக்குவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்படி, விளையாட்டுப் பாடசாலைகளுக்காக தரம் 8இல் இருந்து மாணவர்கள் அனுமதிப்படுவார்கள்

அத்துடன், விளையாட்டில் அதீத திறமைகளை வெளிப்படுத்துகின்ற மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகளை நடத்தி அவர்களை விளையாட்டுப் பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும், விளையாட்டுப் பாடசாலைகளை பொறுத்தவரையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து தரம் 6இற்கு செல்கின்ற பெரும்பலான மாணவர்கள் ஒரே வகுப்பில் கல்வி கற்பார்கள்

>> ஆறு மாதங்களில் புதிய விளையாட்டு சட்டம் – நாமல் ராஜபக்

எனவே, இந்த நெருக்கடியை தவிர்க்கும் நோக்கில் அனைத்து விளையாட்டுப் பாடசாலைளிலும் தரம் 8 இற்காக பிரத்தியேக வகுப்பொன்றை மேலதிகமாக இணைத்துக் கொள்ளவும் குறித்த சுற்றறிக்கையில் ஆலோசனை வழங்கபட்டுள்ளது

அதுமாத்திரமின்றி, விளையாட்டுப் பாடசாலைகளின் மனித வளத்தை அபிவிருத்தி செய்யவும், அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும், கவனிப்பாரற்று காணப்படுகின்ற மைதானங்களை புனரமைக்கவும், நவீன வசதிகளைக் கொண்ட தங்குமிட வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக கல்வி அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து முப்படைகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<